மக்கள் சேவையாற்றிய ஒரு டாக்டரின்
அர்ப்பணிப்பு வாழ்க்கை

அன்னாரது இறுதி ஊர்வலத்தில் தெரிந்தது

'வாழ்ந்த வாழ்க்கை இறுதி ஊர்வலத்தில் தெரிந்து விடும்என கிராமங்களில் சொல்வது உண்டு. அதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது மக்கள் சேவகனான மருத்துவர் ஒருவரின் இறுதி ஊர்வலம்.
சாதி, மதம், ஏழை, பணக்காரர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கிறார்கள். மாநகரம் முழுக்க அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இறந்தவர் அரசியல்வாதியோ, இல்லை பெரும் பணக்காரரோ இல்லை. பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்றும் மக்கள் சேவையாற்றும் ஒரு மருத்துவர்.
ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மருத்துவருக்கு கண்ணீர் அஞ்சலியும்  செலுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் எமது எமது இலங்கை நாட்டில் இடம்பெறவில்லை. இந்தியாவில் கோவை மாநகரத்தில் இடம்பெற்றுள்ளது.
மருத்துவம் என்பது அதிக லாபமீட்டும் பெருந்தொழில் ஆகி விட்ட இன்றைய சூழலில், மக்கள் சேவையை மட்டுமே முன்னிறுத்தி, கிளினிக் நடத்தும் அறைக்கான வாடகைக்காக மட்டும் சொற்பத்தொகையை வாங்கி சிகிச்சை அளித்து வந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம். 2 ரூபாயில் தொடங்கி, கடைசியாக இவர் வாங்கிய தொகை 20 ரூபாய். பணமில்லை என்றால் அதையும் கூட கேட்க மாட்டாராம்.
தன் வாழ்வு முழுக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் இரு தினங்களுக்கு முன்னர் நடைபயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இவரது இறப்பு கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏழை மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல, கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். இரு தினங்களில் ஆயிரக்கணக்கானோர் இவருக்கு அஞ்சலியும்  செலுத்தியுள்ளனர். 'ஏழைகளின் தோழன்'மக்கள் சேவகன்' என இவரது சேவையை நினைவு கூறும் வகையில், கோவை முழுவதும் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.
"மக்களுக்கு இலவசமாக சேவையாற்ற வேண்டும் என்பது தான் அப்பாவின் விருப்பம். வாடகை உள்ளிட்ட சில செலவினங்களுக்காகத்தான் பணம் வாங்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் 2 ரூபாய் வாங்கியவர், வாடகை உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி தற்போது 20 ரூபாய் வாங்கினார். ஆனால் பணமில்லாவிட்டாலும் அவர் சிகிச்சை அளிக்கத் தவறியதில்லை. பணம் கொடுத்தால் வாங்குவார். அதுவும் 20 ரூபாய் தான் வாங்குவார் என டாக்டர் பாலசுப்பிரமணியத்தின் மகள் பிரியா தெரிவித்துள்ளார்.

"பொருள் சார்ந்த எந்த ஈர்ப்பும் இல்லாதவர் மருத்துவர் பாலசுப்பிரமணியன். இறுதி வரை சேவையை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டவர். மக்களுக்கு தொண்டாற்றுவதைத் தவிர எதையும் இவர் விரும்பியதில்லை. ஆனால் தான் ஒரு பெண்ணாக பிறந்து, மகப்பேறு மருத்துவர் ஆகி இருந்தால், மகப்பேறு சிகிச்சை செய்து தாயையும், சேயையும் காப்பாற்றும் பெயரை பெற்றிருக்கலாம் என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தாராம்," என்று தெரிவித்துள்ளார் அவரது நண்பர் மனோகரன்.
ஆம். மக்கள் சேவையாற்றி மருத்துவர் பாலசுப்பிரமணியன் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்க்கை அவரது இறுதி ஊர்வலத்தில் தெரிந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தங்கள் குழந்தைகளை கையில் ஏந்தி மருத்துவர் பாலசுப்பிரமணியன் உடலை தொட்டு கும்பிட வைத்தனர். காண்பவர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இந்த இறுதி ஊர்வலம் நடந்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம். மக்கள் சேவையாற்றிய ஒரு டாக்டர் வாழ்ந்த அர்ப்பணிப்பு வாழ்க்கை அவரது இறுதி ஊர்வலத்தில் தெரிந்தது
ம்ம்ம்.. எமது இலங்கை நாட்டில் சிகிச்சைக்குச் சென்றால்!



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top