ஜம்இய்யத்துல் உலமா
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டின் தற்பொழுதுள்ள நிலமை தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளுடனான சந்திப்பொன்றை கடந்த 20.11.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்
கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தது.
அன்றைய சந்திப்பில் பல அமைப்புக்கள் கலந்துகொண்டு முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் பல்வேறு தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அதன் முதற்கட்டமாக 21.11.2016 ஆம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.
அன்றைய தீர்மானத்துக்கமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்றைய தினம் (21.11.2016) இரவு
08:00 மணியவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் கௌரவப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் அவர்கள் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஆரம்பித்துவைத்தர்கள். அதனை தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ எம். றிஸ்வி அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி தெளிவு படுத்தினார்கள்.
தற்போது நாட்டில் காணப்படும் அசாதாரண நிலையை சீராக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முனைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அனைத்து முஸ்லிம்களும் பாவங்களிலிருந்து தௌபா செய்து அல்லாஹுதஆலாவின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான விடயங்களையும் தெளிவு படுத்தினார்.
மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன் தற்போது எழுந்துள்ள ISIS சர்ச்சை தொடர்பான விடயங்களை அணுகும் முறை பற்றியும் இனவாதத்திற்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் முன்னெடுத்துச் செல்லப்படாமல் தேங்கி நிற்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும்
22.11.2016 ஆம் திகதி (இன்று) மேற்குறிப்பிட்ட விடயங்களை அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக அமைச்சரவை உறுப்பினர்கள் உறுதியளித்தனர். அத்துடன் 23.11.2016 ஆம் திகதி நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அவர்களை சந்தித்து இந்நாட்டு முஸ்லிம்களின் உண்மையான நிலை பற்றியும் ஏலவே முஸ்லிம் அமைப்புகள் 23.07.2015 வெளியிட்ட ISIS க்கு எதிரான பிரகடனம் பற்றியும் தெளிவுபடுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலையை தணிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அத்துடன் முஸ்லிம் தனியார் சட்ட விடயத்திலும் ISIS தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் முனைப்புடன் செயற்படுவதாகவும் உறுதியளித்தனர்.
0 comments:
Post a Comment