இஸ்ரேலியரை மிரட்டும் காட்டுத் தீ
இ ஸ்ரேலின் முக்கிய நகர்களில் ஒன்றான ஹய்வாவை ஒட்டியுள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவி ஊருக்குள்ளும் பரவியதால் அந்நகரில் வசித்த 50,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹய்வா நகரை ஒட்டியுள்ள பகுதியில் காய்ந்த நிலையில் காட்டு மரங்கள் மற்றும் தாவரங்கள் இருப்பதாலும், அப்பகுதியில் காற்று பலமாக வீசியதாலும் காட்டுத் தீ வேகமாக பரவியது. இதனால் பெரும் பொருட் சேதம் ஏற்பட்டாலும் இது வரை உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஒரு சிலர் தீயினால் எழுந்த புகை காரணமாக மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹய்வா பல்கலை மாணவர்கள் 70க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 800க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இது தவிர தீத்தடுப்பு ரசாயனங்கள் விமானம் மூலம் தூவப்பட்டு தீயை மேலும் பரவாமல் அந்நாட்டு ராணுவத்தினர் போராடினர்
இஸ்ரேலுக்கும் அரேபியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே உள்ள பகை இந்த தீ ஏற்பட காரணமாக இருக்கலாம் என்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத் தீ ஏற்பட காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment