மட்டக்களப்பிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு
முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது
அதிகாரிகளினால் நிர்ப்பந்திக்கப்படுவதாக

மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் ஷிப்லி தெரிவிப்பு


கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள முஸ்லிம் ஆசிரியைகள் இஸ்லாமிய (ஹிஜாப்- அபாயா) உடை அணிந்து செல்வது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா உடை அணிந்து பாடசாலைக்கு வரக் கூடாது. சேலை அணிந்தே வர வேண்டும்என அதிகாரிகளினால் நிர்ப்பந்திக்கப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அப்துல் பாறூக் முஹம்மட்  ஷிப்லி தெரிவித்துள்ளார்.

இதனை தான் மாகாண கல்வி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள போதிலும், ஒரு வாரமாகியும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டிருக்கின்றார்.

கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்ற 216 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் அண்மையில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றிருந்தனர்.

இவர்களில் 169 பேர் முஸ்லிம்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு நியமனம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் தமிழ் பாடசாலைகளுக்கும் இம் முறை நியமனம் பெற்றுள்ளனர்.

இந்நியமனம் பெற்ற முஸ்லிம் ஆசிரியைகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளில் நியமனம் பெற்றவர்களிடமிருந்தே அபாயா உடை தொடர்பான முறைப்பாடு தன்னிடம் பதிவாகியிருப்பதாக முஹம்மட்  ஷிப்லி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்கள் தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள ஒரு தேசிய இனம். இந் நிலையில் அவர்களின் தனித்துவ அடையாளத்தை உறுதிப்படுத்த எவரும் தடையாக இருக்க முடியாது. அப்படி தடை விதிக்கப்பட்டால் அது அடிப்படை மனித உரிமை மீறல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஏனைய, அரச காரியாலயங்களில் அபாயா உடை அணிந்து முஸ்லிம் பெண்கள் பணியாற்றுகின்றார்கள். பாடசாலைகளில் மட்டும் தான் தற்போது இந்த பிரச்சினை எதிர்கொள்ளப்படுவதாக என்று முஹம்மட் ஷிப்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top