ஜனாதிபதி தலைமையில் ' சுரக்ஷா' காப்புறுதி திட்டத்தை

மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களினால் சிறுவர்கள் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள பிரகடனங்களுக்கு அமைவாக தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதேநேரம், அவற்றிற்கு அப்பாலும் விரிவான பல செயற்பாடுகளை எதிர்கால சந்ததியினரின் நன்மைக் கருதி தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுரக்ஷா காப்புறுதி திட்டத்தினை மாணவர்களிடம் கையளிக்கும் தேசிய நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை மாணவர் சமூகத்தின் நன்மைக்காக கல்வி அமைச்சினால் இலவசமாக வழங்கப்படும் மருத்துவ மற்றும் திடீர் விபத்துக் காப்புறுதி திட்டமான சுரக்ஷா காப்புறுதி திட்டமானது, 'தேசத்தின் எதிர்கால தலைமுறையை என்றும் காப்போம்' எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமைவாக கடந்த இரண்டரை வருட காலத்திற்குள் அரசாங்கத்தினால் சிறுவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் பலவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

11,242 பாடசாலைகளை சேர்ந்த 45 இலட்சம் மாணவர்களை 24 மணி நேரமும் உள்ளடக்கும் வகையில் இந்த காப்புறுதி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பல வரப்பிரசாதங்களை வழங்க கல்வி அமைச்சும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனமும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
 மாணவர்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குதல், தனது குடும்பத்தினதும் சமூகத்தினதும் சுகாதாரத்தை மேம்படுத்த தன்னாற்றல் உடையவர்களாக மாணவர்களை வலுப்படுத்தல் மற்றும் கல்விசார்ந்த வாய்ப்புக்களில் உச்ச பயனைப் பெறத் திட்டமிடல் என்பன இதன் நோக்கமாகும்.
 காப்புறுதி திட்டம் வழங்குவதை ஆரம்பித்துவைக்கும் வகையில் சில பிக்கு மாணவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் இதன்போது ஜனாதிபதியினால் காப்புறுதி அட்டை வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்கள் அகில விராஜ் காரியவசம், கபிர் ஹாசிம், வஜிர அபேவர்தன, , தயா கமகே, சரத் பொன்சேக்கா, இராஜாங்க அமைச்சர்கள் பீ.இராதாகிருஷ்ணன், ருவான் விஜேவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top