சவூதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தின்

நிதியுதவியின் கீழ்நிர்மாணிக்கப்பட்ட

தேசிய வலிப்புநோய் சிகிச்சை நிலையம் திறப்பு



கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய வலிப்புநோய் சிகிச்சை நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் மற்றும் சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தின் நிதியுதவியின் கீழ் 4.5 பில்லியன் ரூபா மொத்த செலவில்; நிர்மாணிக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையம் நேற்று மக்களின் பாவனைக்கு ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.
 10 மாடிகளைக் கொண்ட இந்த தேசிய வலிப்பு நோய் சிகிச்சை நிலையமானது உலகிலுள்ள அதிஉயர் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டிருப்பதுடன் நரம்பியல் சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் மருந்தகம், நடமாடும் கதிரியக்க நோய் நிர்ணய பிரிவு, சுகாதாரக் கல்விப் பிரிவு மற்றும் பொதுமக்கள் தொடர்பு கட்டமைப்பு என்பவற்றைக் கொண்டுள்ளது.
 மேலும் நோயாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் விரிவுரைகளை நிகழ்த்துவதற்கும் ஏற்ற விரிவுரை மண்டபத்தையும் கொண்டுள்ளது. DSA, PET, SPECT போன்ற நவீன ஸ்கேனர் வசதிகளும் நோயாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 100 வலிப்பு நோயாளர்கள் ஒரே தடவையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடுதி வசதிகள் இலவச மற்றும் கட்டண அடிப்படையில் அமைந்துள்ளன.
 நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து தேசிய வலிப்பு நோய் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு இரண்டாம் மாடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சத்திர சிகிச்சைக்கூடத்தையும் பார்வையிட்டார்.

தேசிய வலிப்பு நோய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளியையும் ஜனாதிபதி இதன்போது பதிவு செய்தார்.

 இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் .எச்.எம். பௌஸி, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பிரதி அமைச்சர் பைஸல் காசிம் , சவூதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பௌஸி அல்சவுட் உள்ளிட்ட அதிதிகள் மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி அனில் ஜயசிங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top