கந்து வட்டி கொடுமையால், கணவன், மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தீக்குளித்தனர். இதில், தாயும், இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெயலலிதா ஆட்சியில், அவசர சட்டம் இயற்றி, ஒழிக்கப்பட்ட கந்து வட்டி அராஜகம், மீண்டும் தலைதுாக்கியுள்ளது. 'சட்டத்தை மீண்டும் கடுமையாக அமுல்படுத்த வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லுார் அருகே, காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து, 29; கூலித் தொழிலாளி. மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு மதி சாருண்யா, 4, மற்றும் ஒன்றரை வயதில், அக்ஷய ப்ரணிகா என்ற, இரண்டு பெண் குழந்தைகள்.இசக்கிமுத்து, குடும்ப தேவைக்காக, அதே பகுதியில் வசிக்கும் முத்துலட்சுமி என்பவரிடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கந்து வட்டிக்கு, 1.45 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அதற்கு வட்டியாக மட்டும், 2.34 லட்சம் ரூபாய் திரும்ப செலுத்தியுள்ளார்.
இருப்பினும், மேலும் வட்டியும், அசலும் தரவேண்டும் என, முத்துலட்சுமி கேட்டுள்ளார். இந்த பிரச்னை குறித்து, அச்சன்புதுார் பொலிஸில், இசக்கிமுத்து புகார் அளித்தார். பொலிஸார் உரிய விசாரணை நடத்தாததால், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், திங்கள் கிழமை குறைதீர் கூட்டங்களில், ஏற்கனவே மனு அளித்தார்.
விசாரணையின் போது, கந்து வட்டிக்கு பணம் கொடுத்த முத்துலட்சுமிக்கு ஆதரவாக, பொலிஸார் செயல்படுவதாக, இசக்கிமுத்து தரப்பினர், புகார் கூறினர்.நேற்று முன்தினமும், முத்துலட்சுமிக்கு ஆதரவாக பணம் வசூல் செய்து தரும், ஓய்வு பெற்ற பொலிஸ்காரர் ஒருவர், இசக்கிமுத்து வீட்டிற்கு வந்து, மிரட்டி சென்றுள்ளார்.
இதனால், மனம் உடைந்த இசக்கிமுத்து, நேற்று காலை, குறைதீர் கூட்டம் நடக்கும் நெல்லை

கலெக்டர் அலுவலகத்திற்கு, கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். மனைவி, குழந்தைகளையும் உடன் அழைத்து வந்திருந்தார்.
வழக்கமாக, கலெக்டர், 11:00 மணிக்கு வருவார். அதன் பின், மனு கொடுப்போர், வரிசையில் நின்று அளிப்பர். அதற்கு முன்னதாகவே, இசக்கிமுத்து தயாராக கொண்டு வந்த மண்ணெண்ணெயை, தன் மீதும், மனைவி, குழந்தைகள் மீதும் ஊற்றி, தீ வைத்தார். தீ உடல் முழுவதும் பரவியதும், நால்வரும் அங்குமிங்குமாக அலறிய படி ஓடி விழுந்தனர்.
அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், பொலிஸார், அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியும், மண்ணை அள்ளி வீசியும், தீயை அணைத்தனர். பின், பொலிஸ் வாகனத்தில் ஏற்றி, நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.குறைதீர் கூட்டத்திற்கு வந்த கலெக்டர், சந்தீப் நந்துாரி, தகவல் அறிந்து, மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெறுவோரை பார்த்தார்.
பின், அவர் கூறுகையில், ''இத்தகைய சம்பவம் இனி நடக்காமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும். கந்து வட்டி தொடர்பாக புகார் தெரிவிக்க, தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.
''பொதுமக்கள், கந்து வட்டி கும்பலிடம் பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வங்கிகளிடம் கடன் பெறுங்கள். இந்த சம்பவத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்ற இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமியிடம், நெல்லை மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரித்தார். அவர்கள் கூறிய தகவல்களை, வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டார். தீவிர சிகிச்சை அளித்தும், சுப்புலட்சுமி, குழந்தைகள், மதி சாருண்யா, அக்ஷய ப்ரணிகா ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

இசக்கிமுத்துவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து, நெல்லை போலீசார் விசாரித்தனர். இசக்கிமுத்து தரப்பினருக்கு மிரட்டல் விடுத்த, கந்துவட்டி முத்துலட்சுமி, அவரது கணவர் தளவாய் ராஜ், அவரது தந்தை காளி ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக, இன்ஸ்பெக்டர் பெரியசாமிதெரிவித்தார்.
கடந்த, 2001, 2002ம் ஆண்டுகளில், தமிழகத்தில் கந்து வட்டி தொல்லை அதிகரித்தது. வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க, அப்பாவிகள் மீது குண்டர்களை ஏவி எடுத்த தடாலடி நடவடிக்கைகளால், பலர் தற்கொலை செய்தனர்.
இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2003ம் ஆண்டு, நவ., 14ல், கந்து வட்டி தடை சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் படி, ஆண்டுக்கு, 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.
இந்த சட்டத்தின் கீழ், மணி வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் மற்றும் அபராத வட்டி என பல பெயர்களில் வட்டி வசூலித்தவர்கள் மீது, பொலிஸார் கைது நடவடிக்கைகள் எடுத்தனர்.
இதனால், கந்து வட்டி கும்பலின் ஆதிக்கம் கட்டுக்குள் வந்தது. 2006ல் ஆட்சிக்கு வந்த, தி.மு.க., இந்த சட்டத்தை கண்டுகொள்ளவில்லை.தற்போது, சில ஆண்டுகளாக கந்து வட்டி கொடூரம், தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இந்த கொடூரத்திற்கு, நெல்லையைச் சேர்ந்த, மூன்று பேர் நேற்று பலியாயினர். எனவே, 'கந்து வட்டி தடை சட்டத்தை மீண்டும் கடுமையாக அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்து வட்டி வசூலித்தால் மூன்றாண்டு சிறை

* வாங்கும் கடன் தொகைக்கு, அதிக வட்டி வசூலிப்பதை தடுக்கும் விதத்தில், 2003ல், சட்டம் கொண்டு வரப்பட்டது. கந்து வட்டி தடை சட்டம் என, அழைக்கப்பட்டது. அதே ஆண்டு, ஜூன், 3 ல், அச்சட்டம் அமுலுக்கு வந்தது.
* தினசரி வட்டி, நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் என அழைக்கப்படும், இந்த வட்டி வசூலுக்கு, சட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது
* இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளி என, நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு சிறை தண்டனை, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்

* கடன் வாங்கியவரோ, அவரது குடும்பத்தினரோ தற்கொலை செய்து கொண்டால், அந்த சம்பவத்துக்கு முன், அவர்களுக்கு தொல்லை கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், கடன் கொடுத்தவர், தற்கொலைக்கு துாண்டியதாக கருத முடியும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top