அம்பாறை மாவட்டமும்

அமைச்சர் றிஷாத் பதியுதீனின்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸும்


அம்பாறை மாவட்டத்தில் அரசியலில் இன்று என்ன நடைபெறுகின்றது. முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுக்க மர்ஹும் எம்.எச் .எம். அஷ்ரப் அவர்களுடன் தோழோடு தோழாக நின்று உழைத்த பலர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் தலைமையோடும் அவரின் தலைமையிலான கட்சியுடனும் தமது நண்பர்கள் உறவினர்களுடன் கூட்டம்  கூட்டமாக இணைந்து வருவதைக் காண்கின்றோம், செய்திகளிலும் படிக்கின்றோம்.
நேற்று 2018 ஆம் ஆண்டு புது வருடம் 1 ஆம் திகதி அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று அம்பாரை மொண்டி ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. அக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால போராளிகள் பலர் கலந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
மர்ஹும் அஷ்ரப் அவர்கள்  கட்சிக்கு தலைவராக இருந்த காலத்தில் கட்சியில் உள்ளவர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தினால் எப்படி அந்தக் கூட்டம் கலகலப்பாக இருக்குமோ அதே காட்சியைத்தான்  அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற அந்தக் கூட்டத்திலும் காணப்பட்டதாக பலராலும் அபிப்ராயம் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த அஷ்ரப் அவர்களுடன் இணைந்து அன்றிருந்து  சமூகத்திற்காக  பாடுபட்ட  எம்.ரீ.ஹசன் அலி, சாய்ந்தமருதில் மு.கா கட்சியுடன் பயணித்து இளைஞர்களை கட்சியுடன் ஒன்றினைத்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கல்முனையின் மூத்த போராளியான கே.எம்..ரஸ்ஸாக் (ஜவாத்) மு.கா கட்சியுடன் பயணித்த எம்..அன்சில், தாஹிர், மௌலவி ஹனீபா மதனி மற்றும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.. அமீர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  முன்னாள் அமைச்சர் எம்..அப்துல் மஜீத் அவர்களின் மருமகனுமான .எம்.எம்.நெளஸாத் போன்ற பல பிரமுகர்கள் உட்பட இன்னும் பலர் அக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன் உள்ள காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்  தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை,பொத்துவில், இறக்காமம் பிரதேசங்களுக்கு வருவதென்றால் மக்கள் வீதிகளில் அலைமோதுவார்கள்.
 அன்னாரின் வருகையை எதிர்பார்த்திருக்கும் பிரதேச மக்கள் பெருநாளைப்போல் தயாராகிக் காத்திருப்பார்கள். ஆனால்,இன்று அதற்கு நேர் மாற்றமாக அந்தக் கட்சியின் தலைவர் இரவோடு இரவாக ஒழிந்து வருவதுபோல வந்து போக வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டிருக்கிறது!
இன்று இந்நிலைமை அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் என்ன?
 கட்சியை உருவாக்கும் போது இப்பிரதேச மக்கள் பட்ட அவஸ்தைகள் எதனையும் அறிந்திராத தற்போதைய கட்சித் தலைமை அஷ்ரப் அவர்கள் திடீரென மரணித்தபோது தலைமைப் பதவியை தனது நப்ஸ் கேட்கின்றது. அதனை எனக்குத் தாருங்கள் எனக் கேட்டு தொடர்ந்து 17 வருட காலமாக துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சு, நீதி அமைச்சு, தபால் தொலைத்தொடர்பு அமைச்சு, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு ஆகிய அமைச்சுப் பதவிகளைப் பெற்று சமூகத்திற்கு எதுவும் செய்யாமல் தன்னையும் தனது குடுப்பத்தவர்களையும் நண்பர்களையும் அலங்கரித்தை சமுதாயம் குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்ட மக்கள் நினைத்துப்பார்க்கின்றார்கள்.
இந்த அமைச்சுப்பதவிகளை வைத்து இம்மாவட்டத்திலுள்ள எவருக்கும் கட்சித் தலைமைத்துவத்தால் முக்கிய உயர் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
அமைச்சுப்பதவியைக் கொண்டு இப்பிரதேசங்களில் கட்சித் தலைமைத்துவத்தால் எந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் செய்யப்படவில்லை. அவர் தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது பாழடைந்த நிலையில் தற்போது காணப்படும் சம்மாந்துறை, குகை போன்று காட்சியளிக்கும் சாய்ந்தமருது தபால் அலுவலகங்களையாவது புதிதாகக் கட்டிக் கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கல்முனை பொதுச் சந்தையை நவீன முறையில் கட்டிக் கொடுப்பதற்கு உரிய காலத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கல்முனை மாநகர சபைக்கு தரமான புதிய கட்டடம் அமைக்க முடியவில்லை, கல்முனை பஸ் நிலையம் சீராக அமைக்கப்படவில்லை, ஒலுவில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் காலங்கள் வீணாக்கப்பட்டுள்ளது, நுரச்சோலை வீட்டுத் திட்டம் பல ஆண்டு காலமாக இக்கட்சியினால் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது, பொத்துவில் மக்களின் குறைபாடுகள் பல தீர்க்கப்படாத நிலையில் உள்ளது. சாய்ந்தமருது தோணாவை வைத்து பணம் சம்பாதிப்பது, இப்பிரதேசத்திலுள்ள பல விளையாட்டு மைதானங்கள் விரைவில் நவீனமயப்படுத்தப்படும், ஒளியூட்டப்படும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில் அப்படியே காணப்படுவது, சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகர்த்த பூங்காவின் அவலநிலை என்பன போன்ற பல விடயங்களில் அவர்களால் மக்களுக்கு காலத்திற்கு காலம் வாக்குறுதி வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறது
இது போன்று கட்சியின் தலைவருக்கு முன்னால் பல கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. அக்கேள்விகளில் பலவற்றிற்கு இன்னும் தலைவரால் பதிலளிக்கப்படவில்லை. அட்டாளைச்சேனைக்கான் தேசிய பட்டியல் பிரச்சினை, கட்சியின் சொத்துப் பிரச்சினை, செயலாளருக்குரிய அதிகாரங்கள் பற்றிய சர்ச்சை, முஸ்லிம்களின் காணிகளை மீட்டெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது, அரசியல் யாப்பில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு எதிர்பார்க்கப்படும் தீர்வு யோசனைகள், வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைக்கும் திட்டத்திற்கான கட்சியின் வெளிப்படையான முடிவு போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடைய கேள்விகளுக்கு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அளிக்கவில்லை. மர்மங்களின் கோட்டையாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தோற்றம் பெற்ற இக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும், அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொள்வதற்கானதொரு கருவியாகவே இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தாளத்திற்கு ஆடிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
பணத்திற்கும், பதவிக்கும் செயற்படுகின்றதொரு கட்சியாக இன்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளதாக பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
முஸ்லிம் சமூகம் இனியும் விலை போக முடியாது. சிலர் அமைச்சர் பதவிகளைப் பெற்று அவர்களின் குடும்பமும், உறவினர்களும் வாழ்வதற்காக சமூகத்தை அடமானம் வைக்க முடியாது என கட்சியை விட்டு விலகிவரும் அனைவரும் கூறுகின்றார்கள்.
இக்கட்சி அஸ்ரப்பின் காலத்தில் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. முஸ்லிம் சமூகத்தின் குரலாக இருந்தது. பெரும்பான்மையான முஸ்லிம்களை பேரினவாத கட்சிகளின் பிடியிலிருந்து விடுவித்தது.

ஆனால்,இன்று முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பு நாளுக்கு நாள் பலவீனமடைந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் முரண்பாடுகளை அதிகம் கொண்டதொரு கட்சியாக தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாறி இருக்கின்றது.
அஸ்ரப்பின் காலத்திலும், ரவூப் ஹக்கீமின் காலத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக செயற்பட்ட பலர் இன்று கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இவர்கள்தான் இன்று ரவூப் ஹக்கீமுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் கட்சி விசுவாசிகளாகவும் உள்ளார்கள்.

இவர்களைத்தான் தனது உண்மையான விசுவாசிகள் என்றும் ரவூப் ஹக்கீமும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றார். இதனால்தான், கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு பிரதான காரணமாக உள்ளன என அதிருப்தியாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது..
கட்சியை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டவர்களை விடவும், சுயநலன்களுக்காக இணைந்து கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்பீடத்தில் இன்று அதிகரித்துள்ளதாக கட்சி அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் போன்ற சமூகத்தில் அக்கறையில்லாத பதவி ஆசைகள் கொண்டவர்களின் பிடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது சிக்கியிருப்பதாகவே இக்கட்சியின் ஆரம்ப கால ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான நிலையில்தான் இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸை வளர்த்த பலர்  அமைச்சர் றிஷாதின் நடவடிக்கைகளை அவதானித்தவர்களாக அவரை நாடிச் சென்று கொண்டிருக்கிறர்கள்.
ரிஷாட் பதியுதீன் என்ற அரசியல்வாதியில் இருக்கின்ற அடையாளங்கள், அவரில் இருக்கும் நல்ல பண்புகள் மற்றும் சிறப்பான குணாதிசயங்கள் அவரிடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்கள் காரணமாகவே, அவர் தலைமையிலான கட்சியில் பலர் இணைந்து கொள்வதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது.
இது மாத்திரமல்லாமல் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு அவரின் செயல்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளது.
இது தவிர இவரை நம்பி இவரோடு செயல்பட்டவர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை போலல்லாது தமது அமைச்சிலிருந்து பிரதேசங்கள் பாராது அம்பாறை மாவட்டத்திலுள்ளவர்கள் பலருக்கும் உயர் பதவிகள் பல வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளதை இப்பிரதேச மக்களால் எளிதில் மறக்கமுடியாது உள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் கட்சி சார்பாக எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் அம்பாறை மாவட்டத்தில் இல்லாத நிலையில் கூட இவ்வாறு இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில் அவர் பங்கு கொள்வதானது இம்மாவட்ட மக்களை அவரோடு இணைந்து கொள்வதற்கு விருப்பத்தைக் கொடுத்துள்ளதுடன் அவருக்கு அம்பாரை மாவட்டத்திலும் அதிகாரத்தை வழங்கி அவர் மூலமாக அபிவிருத்திகளை மேலும் பெற்றுக்கொள்ள இம்மக்களைத் தூண்டியுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் முஸ்லிம் நாடுகளிலுள்ள தனவந்தர்களின் உதவியை நாடி வடக்கிலுள்ள வீடு வசதியற்ற பலருக்கு வீடுகள் அமைத்துக்கொடுத்திருக்கும் நிலையில் தற்போது அம்பாறை மாவட்டத்திலும் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளார்.
பொத்துவில் பிரதேசத்திலுள்ள வீடு வசதியற்ற ஏழை எளிய மக்களுக்கும் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு இவர் நடவடிக்கை எடுத்திருப்பது இங்குள்ள மக்களுக்கு ரிஷாட் பதியுதீன் மீது பாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரதேச மக்களின் இரத்தத்தினாலும், கண்ணீரினாலும், வியர்வையினாலும் வளர்த்தெடுத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகளால் கடந்த 17 வருட காலமாக அமைச்சுப் பதவிகளைப் பெற்று தன்னை அலங்கரித்துக் கொண்ட மு.கா.தலைமைத்துவமும் அக்கட்சியின் மூலம் பாராளுமன்றம் சென்ற மக்கள் பிரதிநிதிகளும் இம்மாவட்ட மக்களுக்கு அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின்படி எந்தச் சேவைகளையும் செய்யாத நிலையில் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் அன்று இங்கிருந்த மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து கூறிய கிளிக்குஞ்சுக் கதைக்கு ஏற்றால் போல் மூன்று கிளிக்குஞ்சுகள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் இருந்து கொண்டிருப்பதாக இப்பிரதேச மக்கள் கூறி இம்மாவட்ட மக்கள் அவர்கள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இது போன்ற காரணங்களாலும் இன்னும் பல காரணங்களாலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால போராளிகள் மற்றும் ஏனைய கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அவரிடம் உள்ள நல்ல பண்புகள் மற்றும் சிறப்பான குணாதிசயங்கள்எல்லாப் பிரதேச மக்களையும் ஒன்றாக மதிக்கும் பண்பு அவரால் மக்களுக்கு செய்யப்படும் சேவைகள் என்பனவற்றை மதித்து அவரோடு இணைய உதவியுள்ளது.
.எல்.ஜுனைதீன்,
ஊடகவியலாளர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top