யாழ்ப்பாணத்தில் தயா மாஸ்டர் மீது தாக்குதல்
கத்தி வெட்டில் இருந்து தப்பினார்
விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைமையகத்தில் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய தயா மாஸ்டர் யாழ்ப்பாணத்தில் நேற்று தாக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி, போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தார். போர் முடிவுக்கு வந்த பின்னர், நீதிமன்றத்தினால் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றின் செய்திப்பிரிவில் தற்போது பணியாற்றி வருகிறார்.
நேற்று பிற்பகல் 3.56 மணியளவில், குறிப்பிட்ட தொலைக்காட்சி பணியகத்துக்குள் நுழைந்த ஒருவர், தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தினார்.
அங்கிருந்த நாற்காலியைத் தூக்கி வீசி தாக்கிய அவர், பின்னர் வெளியில் சென்று கத்தி ஒன்றுடன் வந்து தயா மாஸ்டரை வெட்ட முயன்றார். எனினும் தயா மாஸ்டர் அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை அங்கிருந்தவர்கள், மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறிப்பிட்ட தொலைக்காட்சியின் வணிக செயற்பாடுகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமுற்ற ஒருவரே தயா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment