அவர்கள் தோண்டிய குழிக்குள்
அவர்களாகவே
விழுந்துள்ளார்கள்
சாய்ந்தமருது மக்களின் முடிவு குறித்து
கர்வத்துடனான ஹக்கீமின் அகங்காரப் பேச்சு!
சாய்ந்தமருதில் அவர்கள் தோண்டிய குழிக்குள் அவர்களாகவே விழுந்துள்ளார்கள் என
மு.கா. தலைவர் இறக்காமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது
சாய்ந்தமருது மக்களின் ஒற்றுமையைப் பொறுக்க முடியாமல் அவரின் வெற்றியை மட்டும்
மனதில் வைத்து அகங்காரமாகப் பேசியுள்ளதானது இங்குள்ள மக்களின் மனதைப்
புண்படுத்தியுள்ளது.
சாய்ந்தமருது மக்கள் தாங்களாகவே விழுவதற்கு குழி தோண்டக்கூடிய முட்டாள் மக்கள்
அல்ல என்பதை மு.கா.தலைவர் ஹக்கீம் அவர்கள் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை.
அவர் விரைவில் அம்பாறை மாவட்ட மக்களைப் புரிந்துகொள்வார் என்றும் இப்பிரதேச
மக்களால் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
மு.கா.தலைவர் ஹக்கீமை கட்சியின் தனித் தலைவராகத் தீர்மானிப்பதற்கு 2001 ஆம்
ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஒரு பொதுக்கூட்டம்தான்
வழிவகுத்தது என்பதை ஹக்கீம் மறந்தாலும் இப்பிரதேச மக்கள் மறந்துவிடவில்லை. அது
எங்களைப் போன்றவர்களுக்கு நன்கு தெரியும்.
நாட்டில் ஆயுதக் கலாச்சாரம் இருந்த பயங்கரமான அந்த சூழ்நிலையில் மர்ஹும் எம்.எச். எம். அஷ்ரப் அவர்கள் சமூகத்திலுள்ள உலமாக்கள்,
புத்திஜீவிகள், சமூக நலன் விரும்பிகள் என பலரை ஒன்றுபடுத்தி முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி உணர்ச்சிவசப்பட்டிருந்த
முஸ்லிம் இளைஞர்களை ஒன்றுபடுத்தி வழி நடாத்தாமல் இருந்திருந்தால் எமது முஸ்லிம்
இளைஞர்களும் ஆயுதங்கள் ஏந்தி திசைமாறி அழிந்திருப்பார்கள். சமூகத்தில் பல
உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருக்கும். இதனை மர்ஹும் அஷ்ரப் அவர்கள் பகிரங்கமாக பல
மேடைகளில் தெரிவித்துள்ளார்.
மர்ஹும் அஷ்ரபினால் கையாளப்பட்ட அதே வழிமுறையைத்தான் சாய்ந்தமருது பள்ளிவாசல்
தலைமையிலான அமைப்பினரும் சாய்ந்தமருதில் கையாண்டுள்ளார்கள்
என்பதை மு.கா. தலைமைத்துவம் உணரத்தவறி ஏளனமாக முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவது போன்று கதைகளைப் பேசுகின்றது.
சாய்ந்தமருது மக்களின் நியாயமான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையானது
அரசியல் தலைமைத்துவங்களால் உறுதிமொழி வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டதைப் பொறுக்க முடியாத
இளைஞர்கள் இது விடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் அமைதியான செயல்பாட்டைக் கண்டித்து
பொங்கி எழுந்த போதுதான் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் மர்ஹும் அஷ்ரப்பின் வழிகாட்டலில்
உலமாக்கள், புத்திஜீவிகள், சமூக நலன் விரும்பிகள் அடங்கிய குழுவினரை ஒன்று கூட்டி குழுவினரை
அமைத்து இளைஞர்களின் போராட்டத்தை அமைதிப் போராட்டமாக மாற்றினார்கள்.
இளைஞர்கள் அமைதிப் போராட்டத்தில் இருந்த அந்த நாட்களிலும் இளைஞர்கள் ஆத்திரப்பட்டு அறிவிழந்து திசைமாறி விடக்கூடாது
என்பதற்காக உலமாக்களை அழைத்து இளைஞர்கள் மத்தியில் மார்க்க உபன்னியாசங்களும் பள்ளிவாசல்
தலைமையிலான அமைப்பினரால் செய்யப்பட்டன.
ஊர் மக்களின் நியாயமான கோரிக்கையை வென்றெடுப்பதற்காக இப்படி அமைதிப் போக்கைக் கையாண்டு செயல்பட்ட சாய்ந்தமருது மக்களை நக்கலடித்து நையாண்டி
பண்ணுவது போல அவர்கள் தோண்டிய குழிக்குள் அவர்களாகவே விழுந்துள்ளார்கள் என மு.கா.
தலைவர் பேசியிருப்பது சாய்ந்தமருது மக்களால் கண்டிக்கத்தக்க விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
சாய்ந்தமருது மக்களால் சுயேட்சைக் குழுவில் உறுப்பினர்கள் தெரிவானாலும்
சபையில் உட்கார முடியாது என்று அக்கூட்டத்தில் கூறியிருப்பதும் மக்களின் விருப்பத்திற்கு
மாறாக கட்சித் தலைமைத்துவம் மக்கள்மீது மிக மோசமான அத்துமீறலையும் அவரது அகங்காரத்தையும்
கர்வத்தையும் காட்டுகின்றது என்றும் மக்களால் சுட்டிக்கட்டப்படுகின்றது..
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுபவர்களாகவே
தலைவர்கள் இருக்கவேண்டும் அதைவிடுத்து தலைவர்களின் விருப்பங்களை மக்களிடம் பலாத்காரமாக திணிப்பவர்களாக
தலைவர்கள் இருக்கக்கூடாது.
ஏ.எல்.ஜுனைதீன்,
ஊடகவியலாளர்.
0 comments:
Post a Comment