நான்கு தசாப்தங்களின் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட

மொரகஹந்தை நீர்த்தேக்கத்திட்டம்

இன்று மக்களிடம் கையளிப்பு

நான்கு தசாப்தங்களின் பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.
மொரகஹகந்த அபிவிருத்தி திட்ட வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த மகாவலி இயக்கத்தின் 40 வருட நிறைவை முன்னிட்டு இடம்பெறும் அரச விழா அதனோடு இணைந்ததாக ஜனாதிபதியின் தலைமையில் பொல்கொல்ல அணைக்கட்டுக்கு அருகாமையில் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
மகாவலி பெருந்திட்டத்தின் நோக்கங்களை அடைந்துகொள்ளும் பயணத்தில் முதலாவது திட்டமாக பொல்கொல்லை போவத்தென்ன அணைக்கட்டு நிர்மாணப்பணிகள் பிரதமர் டட்லி சேனாநாயக்க மற்றும் அப்போதைய காணி, நீர்ப்பாசன மின்சாரத்துறை அமைச்சர் சீ.பி.டி.சில்வா ஆகியோர்களினால் 1970ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 1976ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
3 இலட்சம் ஏக்கர் காணிகள் புதிதாக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நன்மையளிக்கும் அதேநேரம் மூன்று இலட்சம் பேருக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் மொரகஹகந்தகளுகங்கை பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டலின் பேரில் துரிதப்படுத்தப்பட்டதுடன், இது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமாகும்.


இந்நீர்த்தேக்கத் திட்டத்தின் மொத்த நீர் கொள்ளளவு 660,000 ஏக்கர் அடிகளாகும் என்பதுடன் இது பராக்கிரம சமுத்திரத்தை பார்க்கிலும் 6 மடங்கு நீரைக் கொண்டதாகும். தற்போது இந்நீர்த் தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவில் நூற்றுக்கு 99 வீதம் நீரினால் நிறைந்துள்ளது.
மொரகஹகந்தகளுகங்கை திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களில் 2000 குளங்களுக்கு புதிய நீர் கிடைக்கவுள்ளது. அந்தவகையில் வடமேல் மாகாணத்தில் 303 குளங்களுக்கும் வடமத்திய மாகாணத்தில் 1600 குளங்களுக்கும் நீரை வழங்குவதுடன் நவ லக்கல மற்றும் மெதிரிகிரிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய நகரம் மற்றும் புதிய குடியேற்றங்களிலும் 48 புதிய குளங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
வடமத்திய மாகாணத்திலிருந்து 9.8 கிலோமீற்றர் தூரத்திற்கான நீரோடையை அடிப்படையாக கொண்ட விவசாயிகளின் நீர்ப்பிரச்சனை உள்ளிட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் குடிநீர்பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் இரணைமடு, யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி , நீர்வழங்கள் உத்தேசதிட்டத்திற்கு இத்திட்டத்தின் மூலம் பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
இதன்மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 140ஆயிரம் பேருக்கு வசதிகள் வழங்கப்படவுள்ளன. யுhழ்ப்பாண மாவட்டத்தில் 6இலட்சத்து 50ஆயிரம் பேர் இதன்மூலம் பயனடையக்கூடும். இந்நீர்வழங்கல் உத்தேசத்திட்டத்துடன் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் 3இலட்சம் மக்களுக்கும் கிளிநொச்சியில் 50ஆயிரம் மக்களுக்கும் குடிநீரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மொரகஹந்தை திட்டத்திலிருந்து நீரை மாற்றி அனுப்புவதன் மூலம் வடமத்திய மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளின் புராதன மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் 1000 சிறிய குளங்களும் புனரமைக்கப்படவுள்ளன.


இத் திட்டத்தின் காரணமாக நாவுல, லக்கல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெயர்ந்த சுமார் 3500 குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருவதுடன், சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈடும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நீர்த் தேக்கத்தில் எதிர்பார்க்கப்படும் நன்னீர் மீன் உற்பதியின் அளவு வருடாந்தம் 3000 தொன்களாகும் என்பதுடன், இதன் மூலம் வருடாந்தம் 225 மில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் 25 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார முறைமையுடன் சேர்க்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் 336 மில்லியன் ரூபா எரிபொருள் மீதப்படுத்தப்படவுள்ளது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்ததாக வருடாந்தம் கிடைக்கும் மழை 818 மில்லியன் கனமீற்றராகும் என்பதுடன் இந்நீர்த்தேக்கத்தின் மூலம் மன்னம்பிடிய, சோமாவதிய பிரதேசங்களில் வருடாந்தம் ஏற்படும் வெள்ள நிலைமையை பெருமளவு குறைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
மூன்று மாகாணங்களில் வாழும் ஆயிரக் கணக்கான விவசாய குடும்பங்களுக்கு நேரடி பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும் மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நீர்ப்பாசன திட்டமான மொரகஹகந்தகளுகங்கை திட்டத்தின் மூலம் முழு தேசத்திற்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கவுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top