இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதி தலைமையில்
பொதுமக்களின் பாவனைக்கு திறப்பு
நீண்டகாலமாக பயணிகளுக்கு இடையூராக இருந்துவந்த வாகன நெரிசலுக்கு தீர்வை வழங்கும்வகையில் ராஜகிரியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (08) முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியில் நிறைவு செய்யப்படவிருந்தபோதும் மக்களின் நன்மைக்காக ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின்பேரில் 11 மாதங்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது.
ஸ்பெய்ன் நிறுவனமொன்றும் உள்நாட்டு நிறுவனமொன்றும் இணைந்து 2016 ஆம் ஆண்டு இந்த மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்திருந்தன. இதற்காக மொத்தச் செலவு 4,700 மில்லியன் ரூபாவாகும்.
நான்கு வழிப்பாதைகளைக் கொண்ட இப்பாலம் 534 மீற்றர் நீளமானதாகும். இதனை அண்மித்த பல பாதைகள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் நாராஹேன்பிட்டவுக்கு பயணம் செய்வதற்கான மாற்றுப் பாதையொன்றும் புத்கமுவ திசையில் மூன்று பயணவழிகளுடனான பாதையும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொறியியல் நியமங்களுக்கேற்ப நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பாலம் இரும்பின்மீது கொங்கிரீட் போடப்பட்டு அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மேம்பாலமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளதுடன் இலங்கையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள அழகிய மேம்பாலமாகவும் உள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் லக்ஷ்மன் கிரியெல்ல, சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்த்தன, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரச உத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment