சவூதியிலிருந்து நகைகளை கடத்த முயன்ற

கல்முனைவாசி விமான நிலையத்தில் கைது



சவூதியிலிருந்து நாடு திரும்பும்போது சட்டவிரோதமாக சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 157 தங்க நகைகளை எடுத்து வந்த இலங்கைப் பிரஜையொருவரை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கல்முனையைச் சேர்ந்த 49 வயதுடையவராவாரென சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் பணிப்பாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்தார்.

டபிள்யு.வை 373 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த இந்நபர், விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டவேளை அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவர் கையிலிருந்த பையை ஸ்கேனுக்கு உட்படுத்தியபோதே அதற்குள் துணிகளில் சுற்றப்பட்ட நிலையில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மீட்கப்பட்ட தங்க நகைகளின் மொத்த பெறுமதி 44 இலட்சத்து 72 ஆயிரத்து 380 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

பைக்குள்ளிருந்து 27 சிறிய காப்புகள், 18 நடுத்தர அளவிலான காப்புகள், 19 பாரிய அளவிலான காப்புகள், 77 மோதிரங்கள், 16 பதக்கங்களென மொத்தமாக 157 தங்க நகைகள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்நகைகளின் மொத்த நிறை 815 கிராம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top