முன்னுக்குப்பின் முரணாகப் பேசும்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
அல்லாஹ்விடம் நீதி கேட்டு பாரத்தை
முன் வைத்துள்ள சாய்ந்தமருது மக்கள்
குர் ஆன், ஹதீஸ் என்பனவற்றின் வழிகாட்டலில் செயல்பட்டு மசூறா அடிப்படையில் முடிவுகளை
எடுப்பதாகக் கூறும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள்
சாய்ந்தமருது மக்களின் பிரச்சினை தொடர்பாக தற்போது முன்னுக்குப் பின் முரணாக
இடத்திற்கு இடம் மேடைக்கு மேடை மாறுபட்டு பேசத் தொடங்கியிருப்பதாக சாய்ந்தமருது
மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
யானைப்பாகனாக நாம் செயல்படுகின்றோம் முழு யானைக் கூட்டத்தையும் எங்களது
கட்டுப்பட்டுக்குள் வைத்திருக்கிறோம் எனத் தேர்தல் மேடைகளில் மக்கள் மத்தியில்
கூறும் மு.கா.தலைவர் ஹக்கீம் நாட்டின் பிரதமரால் கல்முனையில் இடம்பெற்ற தேர்தல்
மேடையில் அன்று பகிரங்கமாக மக்களுக்கு வழங்கப்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான
உள்ளூராட்சி சபை வழங்கும் உறுதிமொழியை நிறைவேற்றிக் கொடுக்காமல் சாய்ந்தமருது
மக்கள் மூன்று நாட்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திய போதும் மெளனியாக
கொழும்பில் இருந்துவிட்டு தற்போது தேர்தல் ஒன்று வந்ததும் இப்பிரதேசங்களுக்கு
வருகை தந்து மேடைகளில் ஏறி மாறுபட்ட கருத்துக்களை கூறத் தொடங்கியிருக்கிறார்
என்றும் மக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
அன்று சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை பெற்றுத் தருவேன். அது முஸ்லிம்
காங்கிரஸால்தான் முடியும் என்று கூறிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை (2018.01.20)
கல்முனையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் “இன்னொரு பிரதேசத்தைப் பகைத்துக் கொண்டு
தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண் மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள்
கைவிடல் வேண்டும்‘ என்று பேசியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை பெற்றுத் தருவேன்.
அது முஸ்லிம் காங்கிரஸால்தான் முடியும் என்று அன்று வாக்குறுதி வழங்கும்போது அவருக்கு
அது கண்மூடித்தனமான சிந்தனையாகத் தெரியவில்லையா? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்
தாருங்கள் என சாய்ந்தமருது மக்கள் போராட்டம் நடத்தும்போது கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடல் வேண்டும் என்று எவ்வாறு
பேசலாம் என எந்த மார்க்கம் கட்சியின் தலைமைத்துவத்திற்குப் போதித்துள்ளது என்று சாய்ந்தமருது
மக்கள் ஹக்கீமை நோக்கி ஆத்திரத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
இது மாத்திரல்லாமல் அன்றைய பொதுக்கூட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ஹக்கீம் தொடர்ந்து பேசுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் சாய்ந்தமருதில்
எவ்வளவு விபரிதங்கள் நடந்தபோதும் நான் சாய்ந்தமருது பிரதேச சபை சம்மந்தமாக எதிராக ஒரு
வார்த்தைதானும் இதுவரை பேசவில்லை. பகிரங்கமாக எதுவும் சொல்லவில்லை.
என்னால் சாய்ந்தமருது மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்
சம்மந்தமாக முழுத் தார்மீகப் பொறுப்பையும் சுமந்தவனாக மிகத் தெளிவான எண்ணத்தோடுதான்
மிகப் பொறுமையாக இப்பிரதேசத்தில் நடக்கின்ற அத்தனை விடயங்களையும் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
சாய்ந்தமருது மக்களுக்கு எதிராக அல்லது அந்த மக்களின் சிவில்
சமூக போராட்டங்களுக்கு எதிராக ஒரு வார்த்தைதானும் பகிரங்கமாக நான் பேசவில்லை.
இப்படிப் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் 2018.01.04
ஆம் திகதி அதாவது 16 நாட்களுக்கு முன் இறக்காமத்தில் என்ன பேசியது?
“சாய்ந்தமருதில் இப்போது குழப்பத்திற்கு வந்துள்ளார்கள். அவர்கள்
தோண்டிய குழிக்குள் அவர்களாகவே விழுந்திருக்கிறார்கள். இப்பொழுது தாராளமாக நாங்கள்
சாய்ந்தமருதில் கூட்டம் நடத்தலாம். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கின்றது.
அவர்களே வன்முறையைத் தொடங்கினார்கள். தோண்டிய அந்தக் குழிக்குள் அவர்களே வீழ்ந்துவிட்டு
ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள்.
தேர்தல் ஆணையாளர் இப்போது விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்.
நாளை பள்ளிவாசல் நிர்வாகத்தை அப்படியே கலைக்கப்போகின்றார்.
தேர்தல் ஆணையாளரே கலைக்கப்போகின்றார் அதோட அவர்களின் கதை முடிகின்றது.
பள்ளிவாயலால் ஒன்றும் செய்ய இயலாது. முழுக்க சட்ட விரோதம்.
அங்குள்ள (சாய்ந்தமருதில்) சுயேட்சைக்குழு தெரிவு செய்யப்பட்டாலும்
சபையில் உட்கார இயலாது என்ற நிலைமை வரப்போகின்றது” இவ்வாறு சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தை
பரிகாசமாகப் பேசியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை விடயத்தில்
திக்குமுக்காடிப் போயுள்ளார். அதனால் முன்னுக்குப்பின் முரணாகப் பேசவேண்டிய நிலைக்கு
அவர் தள்ளப்பட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் கடந்தகாலத்தில் சாய்ந்தமருது
மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளையும் அவரின்
தற்கால மேடைப் பேச்சுக்களையும் கேட்கும் மக்கள் எல்லாவத்திற்கும் படைத்த அல்லாஹ் போதுமானவன்
என்ற பதிலை மாத்திரம் அளித்து அல்லாஹ்விடமே இதற்கான நீதியைக் கேட்டு பாரத்தை முன் வைத்துள்ளார்கள்.
நாமும் சொல்கின்றோம் எல்லாவத்திற்கும் அல்லாஹ் போதுமானவன். சரியான நீதியை சரியான சந்தர்ப்பத்தில் நிச்சயமாக வழங்கவே செய்வான்.
நாமும் சொல்கின்றோம் எல்லாவத்திற்கும் அல்லாஹ் போதுமானவன். சரியான நீதியை சரியான சந்தர்ப்பத்தில் நிச்சயமாக வழங்கவே செய்வான்.
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment