அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில்

தீர்வு காணப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள்



அம்பாறை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல் கேட்டிருந்தது. அந்த பொதுத் தேர்தலில் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை இம்மாவட்ட முஸ்லிம் மக்கள் பெற்றார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து வெற்றி பெற்ற மூவரும் அம்பாறை மாவட்டத்தின் சாரதிகளும் நாங்களே, நடத்துனர்களும் நாங்களே என்று ஆரம்பத்தில் மார்பு தட்டினர். அவர்கள் அன்று கூறியது போன்று மாவட்டத்தின் சாரதிகளாகவும், நடத்துனர்களாகவும் இயங்கியுள்ளார்களா என்பதை இம்மாவட்டத்தில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளை வாசித்து எம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
இதோ, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பல பிரச்சினைகளும் தேவைகளும் இதுவரை தீர்க்கப்படாமல்   இருந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் சில :-

v  பொத்துவில்  மக்களின் பூர்வீக காணிப்பிரச்சினை மீனவர் பிரச்சினை, பாதுகாப்புத் தரப்பினரால் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தீர்த்து  வைக்கப்பட்வில்லை.
v  அக்கரைப்பற்று விவசாயிகளின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட்டமடு விவசாயக் காணிகளில் விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்குமிடையில் இருக்கின்ற காணி தொடர்பான பிரச்சினை இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை.
v  முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரபினால் சவூதி அரசினால் வழங்கப்பட்ட 500 வீடுகள் கொண்ட சுனாமி வீடமைப்புத் திட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடில்லாமல் வாழும் முஸ்லிம் குடும்பங்களுக்கு மீள கையளிப்பதற்கு துரித  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுவரையும் அந்த வீடுகள் எவருக்கும் வழங்கப்படவில்லை.
v  அம்பாறை மாவட்டத்தில் இளைஞா், யுவதிகளுக்கான தொழில் வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எந்த தொழில் பேட்டைகளையும் அமைப்பதற்கு அரசாங்கத்திடம் திட்டங்களை முன் வைத்து அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
v  நுரைச்சோலையில் முஸ்லிம்களால் செய்யப்பட்டு வந்த விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள பொருத்தமான தீர்வுகள் வழங்கப்படவில்லை.  
v  அட்டாளைச்சேனை - அஷ்ரப் நகரில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளுக்கு தீர்வு இல்லை.  
v  ஒலுவில்  துறைமுகத்திட்டத்தினால் பாதிப்படைந்துள்ள முஸ்லிம்களுக்கு ரிய நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
v  ஒலுவில், நிந்தவூர்  பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கும் கடலரிப்பை தடுக்க பொருத்தமான  திட்டங்கள் வகுத்து தடுக்கப்படவில்லை.
v  கல்முனை அஸ்ரப் ஞாபக வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவிவரும் நிபுனத்துவ வைத்தியர்கள், தாதியா் விடுதிகள் மற்றும் கட்டிட வசதிகள் தீர்க்கப்படவில்லை.
v  கல்முனையில் நவீன கூட்ட மண்டபம் அமைக்கப்படவில்லை.
v  கல்முனை பொதுச் சந்தைக் கட்டடம் நவீனப்படுத்திக் கட்டப்படவில்லை.
v  கல்முனை பஸ் நிலையம் நவீனப்படுத்தப்படவில்லை
v  கல்முனை ஸாஹிறா மற்றும் மஹ்மூத் மகளிர்  கல்லூரிகளில் கட்டிடங்கள் மற்றும், மைதாணங்கள்,பற்சிகிச்சை நிலையங்கள் போன்ற குறைபாடுகள் நிவா்த்தி செய்யப்படவில்லை.
v  கல்முனைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்ளூராட்சி சபை பிரிப்பு சம்மந்தமாக சரியான தீர்வுக்கு வர முடியவில்லை.
v  சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை பிரதேச சபையை ஏற்படுத்தித் தரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
v  அட்டாளைச்சேனை மக்களுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் தரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
v  சாய்ந்தமருது, கல்முனைக்குடி, இஸ்லாமாபாத் ஆகிய பிரதேச முஸ்லிம்கள் எதிர்நோக்கும் குடியிருப்பு நிலப் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கான எந்த திட்டமும் முன் வைக்கப்படவில்லை.
v  கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்று விளையாட்டு வீரர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது அது நிறைவேறவில்லை.
v  கல்முனைப் பிரதேசம்  நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நவீன நகரமாக நிர்மாணிக்கப்படும் என வரவு செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறி அதிகாரிகள், ஆலோசகர்களை அமைச்சிலும் கல்முனைக்கும் அழைத்து பல கூட்டங்கள் நடத்தியிருந்த போதிலும் எந்தக் காரியமும் நடக்கவில்லை.
v  இம்மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள், நகர சபைகள் என்பனவத்திற்கு நவீன கட்டட வசதிகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பது போன்று கல்முனை மாநகர சபைக்கு சகல வசதிகளும் கொண்ட செயலகம் இதுவரை நிர்மாணிக்கப்படவில்லை.
v  சம்மாந்துறை தபாலகக் கட்டடம் பாழடைந்த கட்டமாக விழுந்துவிடும் அபாய நிலையில் காணப்படுகின்றது. அக்கட்டடத்திற்கு பதிலாக நவீன கட்டடம் நிர்மாணிப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
v  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தரமுயா்த்தப்பட்டு கல்முனையில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அது நடைமுறைப்படவில்லை.
v  மட்டக்களப்பு புகையிரத பாதை கல்முனை- பொத்துவில் வரை விஸ்தரிக்கப்படல் வேண்டும். இது குறித்து எந்தக் கரிசனையும் இல்லை.
v  பயங்கரவாதிகளினால் உயிழந்தவா்களுக்கு நஸ்ட ஈடு மற்றும் உயிரிழந் முஸ்லிம் பொலிஸ், ஊர்காவல் படை அவா்களது குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
v  கல்முனையில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உப அலுவலகம் கரையோர மாவட்ட அலுவலகமாக தரமுயா்த்தப்படல் வேண்டும்.இது குறித்து கவனிப்பாரில்லை.
v  கல்முனை அரச செயலகத்திற்கு அருகாமையில்  கடந்த 37 வருடங்களுக்கு முன் அத்திபாரமிடப்பட்ட ஒரு நிலம் அப்படியே அத்திபாரத் தூண்களுடன் காணப்படுகின்றது அந்நிலம் அபிவிருத்திக்கு உபயோகப்படுத்தப்படவில்லை.
v  தமிழ்மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி பேசும் அரச அதிபரை நியமிப்பதற்கு அரசுக்கு  சரியான அழுத்தம் கொடுக்கப்படவில்லை.
v  சாய்ந்தமருதில் மீன்பிடி இறங்குதுறை அமைப்பதாக பல்முறை அடிக்கல் நடப்பட்டது. அந்த திட்டம் அடிக்கல் நடப்பட்டதோடு அப்படியே  விடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து எவரும் கவனிப்பாரில்லை.
v  சாய்ந்தமருதில் ஜஸ் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டது. சுனாமிக்குப் பின்னர் அது இயங்கவில்லை. புதிதாக சாய்ந்தமருதில் வேறு ஒரு இடத்தில் அது நிர்மாணிக்கப்பட்டு செயல்படுத்தப்படவில்லை.
v  சாய்ந்தமருது, தோணா அபிவிருத்திக்கு என  அமைச்சரவையினால் 16 கோடியே 20 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும்  தோணா அபிவிருத்தி திட்டம் குறித்து வெளிப்படையான  தகவல்கள் எதுவும் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் மந்தகதியில் சல்வீனியாக்களை அகற்றுவதும் கற்களை அடுக்குவதிலும் காலங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
v  சாய்ந்தமருதிலுள்ள தோணா பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு பாதைகள் சீராக்கப்படவில்லை. இது போன்ற பிரச்சினைகள் இன்னும் பல உள்ளன.
ஏ.எல்.ஜுனைதீன்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top