சவூதி அரேபியாவில் ஏப்ரல் 18 முதல்
சினிமா தியேட்டர் திறக்கப்படும்
சவூதி அரசு அறிவிப்பு
   
சவூதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் திகதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் முலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவூதி அரசு தடை விதித்தது.
ஆனால் தற்போது சவூதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முஹ்ம்மது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். இதில் முக்கியமாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அந்த நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவூதி அரசு முடிவு செய்தள்ளது.
இந்நிலையில், சவூதி அரேபியா நாட்டில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் திகதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அரசின் ஊடகங்கள் கூறுகையில், சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏப்ரல் 18-ம் திகதி முதல் சினிமா தியேட்டர்கள் செயல்பட தொடங்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவூதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும்.
சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என  சவூதி அரசு தெரிவித்து உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், பலருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top