2018.05.22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவையில்
எடுக்கப்பட்ட முடிவுகள்
அமைச்சரவை தீர்மானங்கள்



01.இலங்கை பவள தட்டுகள் தொடர்பிலான சர்வதேச நிகழ்ச்சித்திட்டத்தில் அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 08)
பவள வளங்களை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற சர்வதேச அமைப்பான பவள தட்டுகள் தொடர்பிலான சர்வதேச நிகழ்ச்சித்திட்டத்தின் (International Coral Reef Initiative) உறுப்புரிமையினை இலங்கை பெற்றுக் கொள்வதன் மூலம் பவள வளங்களை பாதுகாப்பதற்காக சர்வதேச நன்மைகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பவள தட்டுகள் தொடர்பிலான சர்வதேச நிகழ்ச்சித்திட்டத்தில் அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்வது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. இலங்கை மற்றும் ருவண்டா ஆகிய நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளல் (விடய இல. 09)
இலங்கை மற்றும் ருவண்டா ஆகிய நாடுகளுக்கு இடையில் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. அரச பிரிவுகளில் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக அரச-தனியார் இணை செயன்முறையின் (PPP) கீழ் தனியார் துறையினரின் முதலீட்டினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 11)
சுகாதாரம், கல்வி, உயர் கல்வி, திறன் விருத்தி மற்றும் தொழில் பயிற்சி ஆகிய துறைகளில் அரச கட்டிட நிர்மாணப்பணிகளுக்காக அரச-தனியார் இணை செயன்முறையினை பயன்படுத்துவதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளின் முன்னெடுக்கப்பட உள்ள குறித்த நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் முதலீட்டாளர்களிடத்தில் இருந்து யோசனைகளை கோருவதற்கு அவசியமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. 'சிசு செரிய' 'கெமி செரிய', மற்றும் 'நிசி செரிய' ஆகிய பொது மக்கள் போக்குவரத்து சேவைகளுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற சலுகை தொகையினை அதிகரித்தல் (விடய இல. 13)
காலத்தின் தேவையினையும் செலவீனத்தினையும் கருத்திற் கொண்டு, 'சிசு செரிய', 'கெமி செரிய', மற்றும் 'நிசி செரிய' ஆகிய பொது மக்கள் போக்குவரத்து சேவைகளுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற சலுகை தொகையினை (செலவீனத்தினை) அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. தெரிவு செய்யப்பட்ட தொழில் துறைகளுக்கு அவசியமான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வேண்டி புதிய செயன்முறையொன்றை ஸ்தாபித்தல் (விடய இல. 18)
2018ம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் படி ஒளடதங்கள் உற்பத்தி கைத்தொழில், பாலுடன் தொடர்பான உற்பத்திக் கைத்தொழில், திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்திகளை வெளியிடும் வியாபாரம் ஆகியவற்றுக்கான மூலதன பொருட்களை இறக்குமதி செய்யும் போது வரி சலுகையினை பெற்றுக் கொடுத்தல் மற்றும் சுங்கத்திடமிருந்து விடுவிப்பதில் ஏற்படுகின்ற கால தாமதத்தினை தடுத்தல் ஆகியவற்றுக்காக வசதிகளை செய்து கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டது. அதனடிப்படையில், ஒளடதங்கள் உற்பத்தி கைத்தொழில், பாலுடன் தொடர்பான உற்பத்திக் கைத்தொழில், திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்திகளை வெளியிடும் வியாபாரம் ஆகிய தறைகளில் புதிய முதலீடுகள் மற்றும் விரிவு படுத்துவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக புதிய செயன்முறையொன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. ஆசிய பத்திரிகை சபையின் கூட்டுறவு மாநாட்டினை (Conference on Asia Press Co-operative Councils) இலங்கையில் நடாத்துதல் (விடய இல.22)
இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில் ஆசிய பத்திரிகை சபையின் கூட்டுறவு மாநாட்டினை (Conference on Asia Press Co-operative Councils) 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடாத்துவதற்கான தலைமைத்துவதத்னை வழங்குவது தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. இந்நாட்டின் தடுப்பு முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் (ICRC) புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 27)
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ள தடுப்பு முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் யோசனையொன்றை முன்வைத்துள்ளது. அதனடிப்படையில், சுய சுதந்திரத்தினை இழந்த நபர்களுக்கு விடிவினை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் குறித்த முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இலங்கை சார்பில் தமது அமைச்சு கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திலக் மாரப்பன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வது (Certificate of Recognition) தொடர்பில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல. 30)
வெளிநாட்டு கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள கப்பல்களில் பணிபுரிவதற்காக வேண்டி இரு நாடுகளினாலும் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களினை (Certificate of Recognition) பெற்றிருத்தல் அவசியமாகும். அவ்வாறு சான்றிதழ்களினை வழங்குவதற்காக இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருத்தல் வேண்டும். இலங்கை இவ்வாறு 32 நாடுகளுடன் இதுவரை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கமும் தனது விருப்பத்தினை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. 2018ம் ஆண்டின் சிறுபோகத்திலிருந்து உயிரியல் விஞ்ஞான (இயற்கை வாயு) முறை பயன்பாட்டினால் நெற்பயிர் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்காக உர மானிய நிதிச்சலுகை முறையொன்றை அறிமுகம் செய்தல் (விடய இல. 36)
ஒவ்வொரு போகங்களிலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிர்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் மற்றும் அவ்வாறு பயிர்செய்யப்படுகின்ற நிலப் பெறுமானங்களை கிராம சேவையாளர் பிரிவுகள் மட்டத்தில் இனங்கண்டு, உயிரியல் விஞ்ஞான (இயற்கை வாயு) முறை பயன்பாட்டினால் நெற்பயிர் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்காக உர மானிய நிதிச்சலுகையினை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்வதற்கும், அதனை இரசாயன உரங்களின் விலைமாற்றத்திற்கு ஏற்ப திருத்தம் செய்வதற்கு உகந்த நடவடிக்கைளை மேற்கொள்வது தொடர்பில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
10. ஜனாதிபதி செயற் படையணியின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற 05 வேலைத்திட்டங்களை 'முன்மாதிரி கிராமம்' வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சமூகமயப்படுத்தல் (விடய இல. 39)
ஜனாதிபதி செயற் படையணியின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற 05 பிரதான வேலைத்திட்டங்களை 'முன்மாதிரி கிராமம்' வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சமூகமயப்படுத்துவதற்கு அவசியமான வளங்கள் மற்றும் உரிய நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்காக தேசிய செயற்பாட்டு குழுவொன்றினை ஸ்தாபிப்பதற்கும், அவ்வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையொன்றை ஒவ்வொரு 06 மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சரவையில் சமரப்பிப்பதற்குமாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


11. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக கடோல் மற்றும் சிமெந்து ஆகியவற்றினை பயன்படுத்தி நிர்மாணிக்கப்படுகின்ற சம்பிரதாயபூர்வமான வீடுகளை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் (விடய இல. 44)
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக கடோல் மற்றும் சிமெந்து ஆகியவற்றினை பயன்படுத்தி நிர்மாணிக்கப்படுகின்ற சம்பிரதாயபூர்வமான வீடுகள் 50,000இனை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஒப்பந்தக்காரர்களிடத்தில் இருந்து யோசனைகள் கோரப்பட்டதுடன், அவற்றிலிருந்து இலாப நோக்கமற்ற 04 அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மிகவும் பொருத்தமானது என அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழு சிபார்சு செய்துள்ளது. அதனடிப்படையில், முதற் கட்டமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அவ்வாறான 25,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட அமைப்புக்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 40,000 நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுத்தல் (விடய இல. 45)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கொங்கிறீட் பேனல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, 650 சதுர அடி அளவிலான 40,000 நிரந்தர வீடுகளை இரு வருட காலப்பிரிவிற்குள் நிர்hமணிப்பது தொடர்பில் மீள்குடியேற்றம், புனருத்தாபனம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் -மோட்டரிங் வேலைத்திட்டம் (விடய இல. 47)
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் -மோட்டரிங் வேலைத்திட்டத்திற்கான தகவல் தொழில்நுட்ப தீர்வொன்றை தயாரித்து, செயற்படுத்தி பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தினை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் Face Technologies and Metropolitan இணை நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. பாடசாலை மாணவர்களுக்காக வேண்டி பெற்றுக் கொடுக்கப்படுகின்ற 'சுரக்ஷh' சுகாதார காப்புறுதி செயன்முறையினை 2018/2019ம் ஆண்டினுள் செயற்படுத்துதல் (விடய இல. 54)
பாடசாலை மாணவர்களுக்காக வேண்டி பெற்றுக் கொடுக்கப்படுகின்ற 'சுரக்ஷh' சுகாதார காப்புறுதி செயன்முறையினை 2018/2019ம் ஆண்டினுள் செயற்படுத்துவதற்கு உகந்த காப்புறுதி நிறுவனம் ஒன்றினை தெரிவு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு, அதற்காக அரச காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து யோசனைகளை கோருவதற்கும், பாடசாலை மாணவர்களுக்கு கூடிய நன்மைகளை பெற்றுக் கொடுக்கின்ற காப்புறுதி நிறுவனத்தினை தெரிவு செய்வதற்கு அவசியமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. எரிபொருள் விலையேற்றத்திற்கு சமமாக பஸ் கட்டணங்களையும் திருத்தம் செய்தல் (விடய இல. 59)
எரிபொருள் விலையேற்றத்திற்கு சமமாக பஸ் கட்டணங்களை ஆகக் குறைந்த கட்டணம் 10 ரூபாவாக அமையும் படி ஏனைய கட்டணங்களை 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு 2018-05-15ம் திகதி அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. எனினும் குறித்த திருத்தத்திற்கு இணங்குவதில்லை என  பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். வருடாந்த பேரூந்து கட்டண திருத்தங்களினை மேற்கொள்ளும் சூத்திரத்தின் சில பிரிவுகளை தற்காலத்திற்கு ஏற்றாற் போல் திருத்தம் செய்ய வேண்டும் என அரசாங்கத்தினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அக்காரணங்களினை அடிப்படையாகக் கொண்டு இரு தரப்பினருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் விளைவினால், இறுதியில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு, அடுத்து வருகின்ற இரு வருட காலத்தினுள் மீண்டும் எவ்வித கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என்கின்ற நிபந்தனைக்கு அமைவாக, 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், 10 ரூபா என்கின்ற ஆகக் குறைந்த கட்டணத்தினை 12 ரூபாவாக அதிகரிப்பதற்கும், ஏனைய கட்டணங்களை 12.5 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top