முஸ்லிம் தலைவர்கள் ஈமான் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையாகச்
செயல்பட்டு
சமூகத்திற்கான முடிவுகளைக் காணவேண்டும்.
மர்ஹும் கலாநிதி ஏ.ஆர். மன்சூர்
அன்று வழங்கிய பேட்டி.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்களை
5 வருடங்களுக்கு முன் அவரது கொழும்பு வீட்டில் சந்தித்த போது எடுக்கப்பட்ட பேட்டி இது.
அன்னாரின் பிறந்த நாளான இன்று 30 ஆம் திகதி அன்னாரின் பேட்டியை பதிவேற்றுகின்றோம்
( ஏ.எல்.ஜுனைதீன்
)
முன்னாள்
வர்த்தக, வாணிபத்துறை
அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர்
கல்முனைத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினராக, ஜே.ஆர் ஜெயவர்த்தன
ஆட்சி காலத்தில்
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராக,
குவைத் நாட்டுக்கு
இலங்கையின் தூதுவராக பதவி வகித்து முஸ்லிம்,
தமிழ் சமூகங்களுக்கு
சிறப்பான சேவையாற்றியவர்.
அவர் கொழும்பிலுள்ள
தனது வீட்டிலிருந்து வழங்கிய
பேட்டி:-
கேள்வி:- தற்போதய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு உங்கள் அனுபவத்தைக் கொண்டு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்:- இன்றைய அரசியல் இன அடிப்படையிலான ஒரு அரசியலாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் தேசிய அரசியல்தான் இந் நாட்டில் இருந்தது. அந்த சூழ்நிலையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எல்லாம் ஏனைய சமூகங்களை அரவனைத்துச் செல்கின்ற சிந்தனையுள்ள தீர்மானங்களாகவே எடுக்கப்பட்டன. அவ்வாறேதான் எங்களுடைய அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் இருந்தன.
அரசியல் ரீதியாக எடுக்கப்படும் தீர்மானங்கள் எதுவாக இருந்தாலும் அடுத்த சமூகங்களை அணைத்துச் செல்கின்ற சிந்தனையுள்ள தீர்மானங்களாக இருக்க வேண்டுமே தவிர ஒதுங்கிப் போகின்ற அரசியல் எமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் சரிவரப் போவதில்லை. தமிழர்களைப் பொறுத்த வரையில் இந்தியா இருக்கின்றது. முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் எந்த நாடு இருக்கின்றது? முஸ்லிம் நாடுகள் எல்லாம் கதைப்பார்கள் அவைகள் எல்லாம் ஜனநாயக நாடுகள் அல்ல. அதிகமானவர்கள் தலிபான்களின் கொள்கைகளோடு ஒத்துப்போகின்றவர்களாக இருக்கின்றார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஒற்றுமையாகவும் நிதானமாகவும் எல்லோரிடமும் கலந்து பேசி எந்தப் பிரச்சினைகளுக்கும் முடிவு எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. முஸ்லிம்களாகிய நாம் ஒரு சக்தியல்ல, தமிழர்கள் சக்தியாக இருந்து போர் கூடச் செய்து பார்த்தார்கள். அதில் அவர்கள் அழிந்து விட்டார்கள். எமது முஸ்லிம் தலைவர்கள் ஈமான் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒற்றுமையாகச் செயல்பட்டு சமூகத்திற்குத் தேவையான முடிவுகளைக் காணவேண்டும். என்றே நான் விரும்புகின்றேன்
கேள்வி:- எமது இலங்கை நாட்டில் தற்போது
முஸ்லிம்களின்
மத
சம்பந்தப்பட்ட
நடவடிக்கைகளுக்கு
ஏற்பட்டுள்ள
கவலைக்கிடமான
நிலைமைகள்
பற்றி
முஸ்லிம்
மக்கள்
ஆத்திரப்படுவதுடன்
கவலையும்
தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி
உங்கள்
கருத்து
என்ன?
பதில்:- முஸ்லிம்
மக்களின் வணக்க
ஸ்தலங்களான. மஸ்ஜித்கள் தாக்கப்படுவதை அவதானிக்கும்பொழுது உண்மையில்
மன வேதனை
அடையவேண்டியிருக்கிறது. எமது இலங்கை
நாடு பல
மதம், மொழி,
கலாச்சார விழுமியங்களை
உள்ளடக்கியதாக மக்கள் சிறப்பாக வாழும் ஒரு
நாடு என
எமது அண்டை
நாடுகளில் ஏன் உலக நாடுகளில்
மதிக்கப்படுகின்ற அந்த நல்லெண்ணமும் மதிப்பும் படிப்படியாக
அழிந்து விடுமோ
என்ற அச்சமும்
கவலையும்
அமைதியை விரும்புகின்ற எல்லா இன, மதங்களைச்
சேர்ந்த மக்களின்
சிந்தனையிலும் இருந்து கொண்டிருக்கிறது.
எனது
சிந்தனையில் இதற்கு முக்கிய காரணம் இந்
நாட்டில் சட்டமும்
ஒழுங்கும் முறையாக
அமுல்படுத்தப்படவில்லை என்றே நான்
கருதுகின்றேன். ஒரு நாட்டின் உயிர்நாடி அரசியல்
அடிப்படைச் சட்டம் என்று கூறுவார்கள். இந்தச்
சட்டங்கள் புத்தகங்களில்
மட்டும்தான் இருந்து கொண்டிருக்கின்றதே தவிர செயல் முறையில்
நடைமுறைப்படுத்தவில்லை என்பது எனது
கருத்தாகும். இந்த அடிப்படைச் சட்டத்தில் மனித
உரிமை,வாக்குரிமை,
வதிவிட உரிமை,
மத உரிமை,மொழி உரிமை
என்பன போன்றவைகள்
அடங்கியுள்ளன.
உலக
நாடுகளைப் பிரநிதித்துவப்
படுத்தும் ஐக்கிய
நாடுகள் சபை
மற்றும் மனித
உரிமைகள் ஸ்தாபனம்
என்பன போன்றவை
ஏற்றுக் கொள்ளக்கூடிய
அடிப்படைச் சட்டம்தான் எமது இலங்கை நாட்டில்
இருக்கின்றது. ஆனால் இந்த அடிப்படைச் சட்டம்
உரிய முறையில்
எமது நாட்டில்
நடை முறையிலுள்ளதா?
என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வியாகும். உதாரணமாக
மொழி உரிமை
அது அடிப்படைச்
சட்டத்தில் உள்ளது ஆனால் நடைமுறையில் இல்லை.
அதே போன்றுதான்
மத உரிமை,
கலாச்சார உரிமை
என்பனவும் மனிதனின்
தனிப்பட்ட அடிப்படை
உரிமையாகும் என எமது அரசியல்சாசனத்தில் பதியப்பட்டிருக்கிறது. ஆனால்,
இதுவும் நடை
முறையில் செயல்படவில்லை
என்பதற்கு குறிப்பாக
தற்பொழுது முஸ்லிம்களால்
இதயம் போன்று
கருதப்படுகின்ற மஸ்ஜித்கள் தாக்கப்படுவதைக்
குறிப்பிடலாம்.
எவராவது
வணக்க ஸ்தலங்கள்
தாக்கப்படுவதை நியாயப்படுத்தவோ ஆதரிக்கவோ முற்படுவாரேயானால் அவர் இந் நாட்டின் விரோதி
இந் நாட்டின்
அடிப்படைச் சட்டத்திற்கு விரோதி ஏன் உலகலாவிய
ரீதியில் ஐக்கிய
நாடுகள் சபையால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளை
அவமதித்து செயல்படுகின்ற
ஒருவர் என்றே
நாம் கருத
வேண்டும்.
உலகலாவிய
ரீதியில் எல்லா
நாடுகளிலும் பல இன, பல மத, பல கலாச்சாரங்களைக்
கொண்ட மக்கள்
இனைந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்தியா
போன்ற நாடுகளில்
எல்லாம் இந்த
அடிப்படை உரிமைகளை
மிகவும் கவனமாக
அமுல்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பதை
நாம் காண்கின்றோம்.
அப்படியாக அந்நாடுகளில்
மனித உரிமைக்கான
நடைமுறைகள் சிறப்பாக இருக்கும்போது எமது சின்னஞ்
சிறிய நாட்டில்
ஏன் இப்படியெல்லாம்
நடக்க வேண்டும்
எனக் கேள்வி
எழுப்பி என்னைப்
போன்றவர்கள் கவலை அடைகின்றோம்.
சமீபத்தில்
நான் லண்டனில்
உள்ள ஒரு
புகையிரத நிலையத்தில்
கண்டறிந்த ஒரு
காட்சியை இங்கு
குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கின்றேன். அந்நாட்டில்
முஸ்லிம் கலாச்சாரத்தைப்
பின்பற்றுகின்ற சில பெண்கள் முகம்
மூடப்பட்ட நிகாப்
ஆடை அணிந்தவர்களாக
அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். அந்த
புகையிரத நிலையத்தில்
மேலத்தேய கலாச்சாரத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கின்ற
இளைஞர், யுவதிகள்,நிகாப் அணிந்திருந்த
பெண்கள் அவர்களோடு
வந்த ஆண்கள்
எல்லோரும் ஒற்றுமையாகக்
கூடியிருந்ததைப் பார்த்த எனக்கு 90 வீதமான மக்கள்
மேலத்தேய கலாச்சாரத்தில்
வாழ்கின்ற இந்நாட்டில்
இவ்வாறு முஸ்லிம்
பெண்கள் துணிச்சலாக
முகத்தை மூடியவர்களாக நிகாப்
அணிந்திருப்பது ஏனையவர்கள் இவர்களைப் பார்த்து ஏளனம்
செய்வதற்கு அல்லது சொல்வதற்கு இடமளிப்பது போல்
இருக்காதா? இதன் மூலமாக இங்கு அமைதி
குலையாதா? என்ற
சிந்தனை எனது
மனதில் எழுந்து
அங்குள்ள பல்கலைக்கழகம்
ஒன்றில் வைத்தியத்துறையில்
கடமையாற்றுகின்ற கலாநிதி ஒருவரிடம் எனது சந்தேகத்தை
வினவிய போது
அவர் சிரித்தவராக என்னை நோக்கி (Grandpa) தாத்தா உங்களுக்கு தெரியுமா பிரிட்டன்
போன்ற நாட்டிலே
அடிப்படை மனித
உரிமை என்ற
கொள்கையும் அந்த சிந்தனையும் எல்லோரும் சமமாகவும்
நிம்மதியாகவும் வாழக்கூடிய சட்ட நடைமுறையும் ஒழுங்கும்
இந்நாட்டில் இருக்கின்றது. அது மதிக்கப்பட்டு சரியான
முறையில் அமுல்படுத்தப்படுவதன்
காரணமாக ஒரு
சமூகத்தினரின் கலாச்சாரங்கள், விழுமியங்கள்
என்பனவற்றை ஏணைய சமூகத்தினர் மதித்து நடக்கின்றனர்.
அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.
இதற்கு நீங்கள்
கவலைப்பட வேண்டிய
அவசியமில்லை. ஏன் இந்நாட்டில் இன்னுமொரு சிறப்பம்சம்
என்னவென்றால் ஐந்து வருடங்களுக்கு மேல் ஒருவர்
தொழில் செய்து
இங்கு சீவிப்பாரேயானால்
இங்குள்ள சட்டத்தின்
அடிப்படையில் அவர்களை இந்நாட்டுப் பிரசையாகப் பதிவு
செய்கின்றார்கள். ஆனால் முஸ்லிம் சகோதரத்துவம் என்றெல்லாம்
பேசப்படுகின்ற சவுதிஅரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளில்
நூறு வருடங்கள்
அந்நாட்டில் வாழ்ந்தாலும் அவர் ஒரு இஸ்லாமிய
மகனாக இருந்தாலும்
சரியே அப்படிப்பட்டவர்களை
அந்நாட்டுப் பிரசைகளாக ஏற்றுக் கொள்வார்களா? பாருங்கள்
இந்த நவீன
உலகத்தில் எப்படி
நாகரிகங்களும் பண்புகளும் இருந்து கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்(Grandpa) தாத்தா என்று பிரித்தானியா
நாட்டின் நடைமுறைச் சட்டங்கள், கொள்கைகள் பற்றி விபரித்தார்.
நானும் திகைத்துப்
போனேன்.
இதனை
நான் இங்கு
சொல்வதற்குக் காரணம் சட்டமும் ஒழுங்கும் நிலை
குலைந்து போய்க்கொண்டிருப்பதை
நாம் எல்லோரும்
பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.அதற்கான
உரிய நடவடிக்கைகளை
பொறுப்பானவர்கள் எடுக்கவில்லை. எமது உரிமைகள் தடுக்கப்படுகின்றபொழுது
அல்லது மத
ஸ்தலங்கள் தாக்கப்படுகின்ற
பொழுது நீதித்துறைக்குப்
போகவும் தயங்குகின்றோம்.
ஏனெனில் சரியான
நியாயம் கிடைக்குமா என்ற சந்தேகமும் அச்சமும்
எமது மனதில்
இருந்து கொண்டிருக்கின்றது.
இந்த சூழ்நிலை
மாறாத வரை அச்சம்
தொடர்ந்து இருந்து
கொண்டே இருக்கும்.
இதனைப் போக்குவதற்கான
ஒரே வழி
ஜனநாயக வழியே
தவிர தலிபான்கள்
கூறுகின்ற வழிகளை
என் போன்றவர்கள்
ஒரு போதும்
ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
அன்பு,
ஆதரவு, சகிப்புத்
தன்மை, என்பனவற்றையும்
சிறந்த கலை,
கலாச்சாரத்தயும் கொண்ட நல்ல சமூகம் என்ற
நற்பெயரைப் பெற்றார்களோ அந்த நற்பெயர் அழிந்துவிடாதவாறு
சிங்கள வாக்காள
மக்களும் நாமும்
இணைந்து ஜனநாயக
வழியில் தமது
பொன்னான வாக்குகளைக்
கொண்டு தற்போதுள்ள
ஆட்சியாளர்களை அகற்ற வேண்டும். இதுதான் இதற்கு
சரியான வழியே
தவிர வேறு
வழி எதுவும்
எனக்கு தெரியவில்லை.
கேள்வி:-
மாகாண சபை முறையைக் கொண்டு வந்த அரசியலமைப்பின் 13 ஆவது
திருத்தச்
சட்டத்தில்
அமைந்துள்ள
அதிகாரங்களை
நீக்கும்
விடயத்தில்
உங்களின்
அபிப்பிராயம்
என்ன?
பதில்:- எமது
நாடு வரலாற்று
ஆசிரியர்களால் போற்றப்பட்ட ஒரு நாடு .இந்
நாட்டில் மகாவம்ச
காலத்திலிருந்து தமிழர்களும் சிங்களவர்களும்
வாழ்ந்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் வர்த்தக
நோக்கத்திற்காக இந்நாட்டிற்கு வருகை தந்தவர்கள் இவர்களும்
இங்கு வாழ்ந்த
பழங்குடி மக்களுடன்
இணைந்து வாழப்
பழகிக்கொண்டனர். இதன் மூலம் சிங்களவர்களும் தமிழர்களும்
இந்நாட்டை ஆட்சி
செய்திருக்கிறார்கள் என்பது கட்டுக்
கதையல்ல. இது
ஒரு வரலாற்று
உண்மை. முஸ்லிம்கள்
இந்நாட்டை அரசாண்டவர்களுமல்ல
அந்த நோக்கத்திற்காக
வந்தவர்களுமல்ல. இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக
இருந்தவர்கள்.
இந்நாட்டின்
இன வரலாற்றை
அவதானிக்கின்ற பொழுது அதிகப்படியான மக்கள் சிங்கள
பெளத்த மக்களாகவே
வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.புத்த தர்மத்தின்
அடிப்படையில்தான் அவர்கள் ஆட்சி அதிகாரங்களைச் செய்து
வந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவேதான் திராவிட
சமூகத்தைச் சேர்ந்த தமிழர்கள் இஸ்லாம் சமயத்தை
ஏற்றுக் கொண்ட
முஸ்லிம்கள் எல்லோரும் சிறப்பான முறையில்
இணைந்தவர்களாக வாழ்ந்து இந் நாட்டின் பெருமையை
வளர்த்தார்கள்.
கவிஞர்
சுப்ரமணிய பாரதியார்
“சிங்கள தீவுக்கு
பாலம் அமைப்போம்”என எமது
நாட்டுக்கு மகுடம் சூட்டியது போல் கவிதை
தீட்டியிருந்தார். இதன் மூலம்
இந் நாட்டில்
சிங்களவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்
என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட
ஒரு உண்மை
இதில் எதுவித
மற்றமுமில்லை.
குறிப்பாக
பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் எமது நாடு
இருந்த போது
அவர்களால் சட்ட
ஒழுங்குகளை சரிவரப் பேணி ஆட்சி செய்து
வந்திருப்பதை எம்மால் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
எமது நாடு
சுதந்திரம் பெறுவதற்கு இங்கு வாழ்ந்த சிங்களவர்,
தமிழர், முஸ்லிம்கள்
மற்றும் பறங்கியர்
எல்லோரும் ஒன்றாகக்
குரல் கொடுத்து
பாடுபட்டதையும் யாராலும் மறுக்கவும் முடியாது.
1948 ஆம்
ஆண்டு பிரித்தானியா
அரசிடமிருந்து பெற்ற அந்த சுதந்திரத்திற்குப் பின்னர் ஏறக்குறைய சுமார் 10 ஆண்டுகளுக்குப்
பின்னர் அதாவது
1958 ஆம் ஆண்டிற்குப்
பிறகு ஆட்சிமுறை
நடைமுறையில் பகிரங்கமாகச் சீர்குலைவதைத்
தெளிவாகப் பார்க்க
முடிந்தது. ஆங்கில
மொழி மட்டும்
ஆட்சி மொழியாக
இருந்த காலத்தை
விட சிங்களம்,
தமிழ் ஆகிய
மொழிகளுக்கு சம உரிமை வழங்கிய காலத்தில்
இங்குள்ள மக்களின்
பழக்க வழக்கங்களில்
சம உரிமயைக்
கண்டோம். ஆனால்
சிங்கள மொழி
மட்டும் என்னும்
ஒரு மொழிக்
கொள்கை அமுல்
படுத்தப்பட்டதன் பின்னர்தான் சமூகங்கள் சம உரிமை இழந்து, நாட்டில்
சிக்கலும் சீரழிவுகளும்
ஏற்படத் தொடங்கின.
ஆங்கிலேயர்
ஆட்சி காலத்தில்
திறமைக்கும் உரிமைக்குமாக
மனிதனை சமமாக
மதித்து நடைபெற்ற
நிர்வாகம் எல்லாம்
சிங்கள மொழி
மாத்திரம் என்ற
அந்த கொள்கையின்
காரணமாக சிதைக்கப்பட்டு
தமிழ் சமூகத்தைச்
சேர்ந்த மக்களை
ஆட்சியிலுள்ளவர்கள் புறக்கனிக்கத் தொடங்கினார்கள்.
சமீப காலத்தில்
சமூகங்களிடையே வேற்றுமையும் சீரற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கு
ஆணி வேராக
அமைந்தது
இந்த சிங்கள மொழி மட்டும் என்ற
சட்டமேயாகும் என்பதை எம்மால் துணிந்து கூறமுடியும்.
ஆங்கிலேயர்
ஆட்சி காலத்தில்
இங்கு சட்டசபை
இயங்கியது அதில்
சிங்களமும் தமிழும் ஆட்சி மொழிகளாக இருக்க
வேண்டும் என்பதை
ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால், சுதந்திரமடைந்து
10 வருடங்களுக்குள் ஆட்சியாளர்கள் அதனை
மாற்றி ஆளத்
தொடங்கினார்கள். இதனால் ஏற்பட்ட விளைவுகள் அனர்த்தங்கள்
எல்லாம் உலகம்
அறிந்த விடயங்களாகி
விட்டன.
அரசியலமைப்பின்
13 ஆவது திருத்தச்
சட்டத்திற்கு முக்கிய காரணமே தமிழ் மொழி
பேசும் மக்களின்
உரிமைகள், உடமைகள்
எல்லாம் சிதைந்து
போய் அநியாயமான
முறையில் அவர்கள்
நடத்தப்பட்டு வாழ்ந்த
காலத்தில் அவர்களுக்கு
ஒரு பரிகாரமாக
அமைய வேண்டும்
அவர்கள் பாதுகாக்கப்படல்
வேண்டும் என்ற
நோக்கமேயாகும்.
உள்நாட்டு
யுத்தம் முடிந்து
சமாதானம் நிலவுகின்ற
இந்த சூழ்
நிலையிலே ஆட்சியாளர்கள்
மற்றும் சமூகத்
தலைவர்களின் சிந்தனை எல்லாம் இந்நாட்டிலுள்ள சமூகங்களை
ஒற்றுமைப்படுத்தி கடந்த காலங்களில் நாம் எவ்வாறு
வாழ்ந்தோமோ அவ்வாறு வாழ வைக்க வேண்டும்
என்று சிந்தித்து
செயல்பட வேண்டிய
நிலையில்
இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க
வேண்டும் எனக்
கோருவதும் அதற்கான
நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் இந்த நாட்டை நல்ல
வழிக்கு கொண்டு
போவதற்காக அல்ல அவர்கள்
மீண்டும் இந்நாட்டை
அழிவுப் பாதைக்கே
இட்டுச் செல்கின்றார்கள்.
இவர்களை நாட்டுப்
பற்றுள்ளவர்கள் என்று நான் கூற மாட்டேன்.
நாட்டுத் துரோகிகள்
என்றே
என்னால் கூறமுடியும்.
கேள்வி:-
இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு
நீங்கள்
கூறும்
உபதேசம்
என்ன?
பதில்:- ஆத்திரப்பட்டு
அழிவுகளுக்கு வழி வகுத்து விடவேண்டாம் என்பதை
முதலில் அழுத்தமாகக்
கூறிக்கொள்ள விரும்புகின்றேன் எமது சமூகத்திலுள்ள அறிஞர்கள்,
அனுபவசாலிகள், உலமாக்கள் மற்றும் பெரியார்களின் உபதேசங்களையும்
மீறிப் போய்
விடவும் கூடாது.
அதே நேரம்
தன்னிச்சையாக உணர்ச்சிவசப்பட்டவராக செயல்பட்டு
விடவும் கூடாது.
என்பதயே என்னால்
கூறமுடியும்.
கேள்வி:- தமிழ் முஸ்லிம் உறவுக்கு சிறந்த
முறையில்
சேவையாற்றியவர்
என
தமிழ்
அன்பர்கள்
உங்களைப்
பற்றிக்
கூறுகிறார்கள்
அதுபற்றி
கூறுங்கள்:-
பதில்:- தமிழர்களின்
அபிலாசைகளையும் உணர்வுகளையும் நன்றாக அறிந்தவன் என்பதற்கு
பல காரணங்கள்
இருக்கின்றது. தமிழ் மொழி பேசுகின்ற பிரதேசத்தில்
ஒரு முஸ்லிமாக
வாழ்ந்தவன், வாழ்ந்து கொண்டிருப்பவன். தமிழ் பாடசாலகளில்
தமிழ் மாணவர்களோடு
ஒன்றாகக் கல்வி
கற்றவன். பொது
வாழ்வில் பெருந்தலைவர்கள்
என்று கூறக்
கூடிய எஸ்.ஜெ.வி செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம்
கொல்வின் ஆர்
டி சில்வா போன்ற சிறந்த சட்டத்தரணிகளுடன்
நெருங்கிப் பழகி பல அனுபவங்களைப் பெற்றவன்.
அதனால் நான்
அறிந்த தமிழ்
சமூகம் ஒரு
போதும் இலங்கை
பிளவுபட வேண்டும் தனித் தமிழ் நாடு
உருவாக வேண்டும்
என்ற சிந்தனை
கொண்டவர்கள் அல்ல. அந்த சிந்தனையைத் தூண்டியவர்கள் சிங்களப்
பேரினவாதிகள் என்றுதான் கூற வேண்டும். அநீதிகளைச்
சந்தித்த ஒரு
சமூகம், அழிவுகளைச்
சந்தித்த ஒரு
சமூகம் இன்றும்
அழிந்து போய்க்
கொண்டிருக்கின்ற ஒரு சமூகம் என்றால் அது
தமிழ் சமூகம்தான்.
அன்று ஆண்டவர்கள்
இன்று அழிந்து
கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையிலும்
பிரிந்து வாழாமல் இணைந்து
வாழ வேண்டும்
என்ற சிந்தனையில்தான்
அவர்கள் இருந்து
கொண்டிருக்கிறார்கள். நான் யாழ்ப்பாணம்
மற்றும் முல்லைத்தீவு
ஆகிய மாவட்டங்களுக்கு
மாவட்ட அமைச்சராகப்
பதவி வகித்த
அனுபவத்தைக் கொண்டுதான் நான் கூறுகின்றேன் தமிழ்
மக்கள் மிகவும்
பண்பானவர்கள், நன்றியுள்ளவர்கள், எதிலும் நியாயமானவர்கள் அநாவசியமாக
எதையும் செய்யச்
சொல்ல மாட்டார்கள்.
அப்படியானவர்கள் எனது சேவைகளைக்கு மதிப்புத் தருகிறார்கள்.
இப்படியான
நல்லெண்ணம் படைத்த அந்த தமிழ் சமூகத்திற்கு
மிகவும் கஸ்டமான
துன்பமான, துயரமான
சூழ்நிலையிலுள்ள அவர்களை எல்லோரும் கை கொடுத்து
தூக்கிவிட வேண்டிய
கடமைகளில் சிங்களவர்களும்
இருக்கிறார்கள், முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.
இப்படி
நான் கூறும்
பொழுது ஆங்கிலேயர்
ஆட்சி காலத்தில்
ஒரு சில
தமிழ் தலைவர்கள்
அதிகாரம் இருந்தபோது
செயல்பட்டது போன்று முஸ்லிம்கள் மீது செயல்பட்டு
விடக்கூடாது.வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும்
என்று நான்
சொல்லவில்லை. பிரிந்திருந்தால் முஸ்லிகளின்
விகிதாசாரம் 43 சத வீதமாகும் இணைந்தால் முஸ்லிம்களின்
விகிதாசாரம் 17 சத வீதமாகும், வடக்கும் கிழக்கும்
இணையும்போது முஸ்லிம்கள்
சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக ஆக்கப்படுகின்றார்கள்.
அடிமையாக்கப்படுகின்ற சந்தர்ப்பமும் ஏற்பட்டு
விடும். எது
எப்படியிருந்தாலும் ஒரு சமூகம்
மற்ற சமூகத்தைப்
புரிந்து கொண்டு
பரஸ்பரம் புரிந்துணர்வுடன்
செயல்பட வேண்டும்.
முஸ்லிம்களை தமிழர்களுக்கு அடிமையாகப் போக வேண்டும்
என்று ஒரு
போதும் நான்
கூறமாட்டேன்.
முஸ்லிம்களை
அணைத்துச் செல்லக்
கூடிய வழி
வகைகளை தமிழ்
தலைவர்கள் தேடிக்
கொள்ள வேண்டும்.
அவர்களுடன் சேர்ந்து செல்வதற்கு நாங்கள் எப்போதும்
தயாராகவே உள்ளோம்.
ஆனல், அவர்களுக்குக்
கீழ் சிறுபான்மையினராக
இருந்து முஸ்லிம்கள்
அடிமைகளாக ஆக்கிவிடப்படக்
கூடாது. அதே
நேரம் முஸ்லிம்கள்
மீது ஆதிக்கமும்
செலுத்தக் கூடாது.
அணைத்து ஆளவே
முயற்சிக்க வேண்டும்.
அன்று
எமது ஆட்சி
காலத்தில் மங்கள
முனசிங்க ஆணைக்குழு
ஒன்று நியமிக்கப்பட்டது.
அக் குழுவில்
மர்ஹும் ஏ.சி.எஸ்.
ஹமீதும் நானும்
இருந்து தமிழ்
முஸ்லிம் ஒற்றுமை
கருதி பல
முன்மோழிவுகளைக் கொண்டுவந்தோம். எங்களுடன் லக்க்ஷமன் ஜெயக்கொடி,
எம் எச்,
எம் அஷ்ரப்,
பஷீர் சேகுதாவூத்,
போன்ற பலர்
இருந்தனர். அவ் ஆணைக்குழுவில் வடக்கும்
கிழக்கும் இணைக்கப்படக்
கூடாது.அவைகள்
பிரிந்திருக்க வேண்டும் ஆனல் இம் மாகாணங்களுக்கு இந்தியாவிலுள்ள
மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்
வழங்கப்படல் வேண்டும் என்ற முடிவை எடுத்தோம்.
இந்த முடிவை
ஆணைக்குழு ஏற்றுக்
கொண்டது ஆனால்
யாழ்ப்பாண பிரதேசத்தைச்
சேர்ந்த தமிழ்
பிரதிநிதிகள்.இம்.முடிவை ஏற்றுக் கொள்ளாமல்
நிராகரித்துவிட்டார்கள்.அன்று தமிழர்களின்
நலன் கருதி
எவ்வளவு முயற்சி
எடுத்து பாடுபட்டோம் அதிகாரங்களுடான
மாகாணங்களைப் பிரிப்பதற்கு மறுத்தார்கள் ஆனால் இன்று
என்ன நடந்திருக்கிறது
.மாகாணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதிகாரங்களும் குறைக்கப்பட்டிருக்கின்றன.
கேள்வி:- தாங்கள் குவைத் தூதுவராகப் பதவி
வகித்த
காலத்தில்
அந்நாட்டிலிருந்து
இலங்கை
தென்
கிழக்குப்
பல்கலைகழகத்திற்கு
பெரும்
தொகைப்
பணத்தை
உதவியாகப்
பெறுவதற்கு
உதவியிருக்கிறீர்கள்
அதுபற்றி
கூறுங்கள்:-
பதில்:- முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
மர்ஹும் எம்
எச்.எம்.
அஷ்ரஃப் முஸ்லிம் சமூகத்திற்கு
செய்த மகத்தான சேவை தென் கிழக்குப்
பல்கலைக்கழத்தை இங்கு உருவாக்கியதுதான் என்று கூறமுடியும்.
அன்னார் அப்
பல்கலைக்கழத்தை புதிதாகப் பல்கலைக்கழகம் உருவாக்கும்போது திட்டமிட்டு
கையாளப்படும் எந்த நடவடிக்கைகளும் இல்லாமல் தனது
திறமையினால் எவரும் செய்ய முடியாத முறையில்
வர்த்தமானி அறிவித்தல் மூலம் துணிவுடன் அதணை
ஒலுவிலில் உருவாக்குவதற்கு
உறுதுணையாக இருந்தார். அதற்கான பெருமை அன்னாரைச்
சேரும். அப்படியான
சூழ்நிலை அன்றிருந்தது.
அப்படியான அரசியல்
தலைமையும் அன்றிருந்தது.
இப் பல்கலைக்கழகம் பல வருட காலம்
நெற் சந்தைப்
படுத்தும் சபைக்கென
கட்டப்பட்டிருந்த கட்டிடங்களிலேயே இயங்கி வந்தது. அங்கு
வசதியான கட்டடங்கள்
மற்றும் வசதிகள்
எதுவும் நவீன
முறையில் இருக்கவில்லை.
இப்படியான சூழலில்
அரசாங்கத்தின் உதவியை பல்கலைக்கழக நிர்வாகிகள் நாடினார்கள்
அது அவர்களுக்கு
சரியான முறையில்
கைகூடவில்லை.
என்னைப்
பொறுத்தவரையில் நான் மக்கள் சேவையில் ஈடுபட்ட
காலம் தொடக்கம்
கல்விக்கு முக்கியத்துவம்
கொடுத்து வந்தேன்
முஸ்லிம் சமூகம்
கல்வியில் வளர்ச்சி
காண வேண்டும்
ஏனைய சமூகத்தவர்களோடு
கல்வியில் போட்டிபோட்டு
முன்னேற வேண்டும் என்ற ஆவல் கொண்டவனாகச்
செயல்பட்டு வந்தேன் .நான் பாராளுமன்ற உறுப்பினராகத்
தெரிவு செய்யப்பட்டதும்
எனது முதல்
வேலையாக ஒவ்வொரு
ஊருக்கும் ஒவ்வொரு
பொது நூலகத்தை
உருவாக்கினேன். யாழ்ப்பாணத்திலுள்ள பொது நூலகத்தைப் போன்று
கல்முனையிலும் ஒரு பொது நூலகம் அபிவிருத்தி
செய்யப்படல் வேண்டும் என அவாக் கொண்டு
அங்கும் உருவாக்கினேன்.
ஆனால் அன்றைய
இன ரீதியான
குழப்ப சூழ்நிலை
காரணமாக எனது
எண்ணம் போன்று
அப் பொது
நூலகத்தை அபிவிருத்தி
செய்ய முடியாமல்
போய்விட்டது. இவ்விடத்தில் நான் ஒன்றைக் கூறவேண்டும்
இன்றைய சமாதான
சூழலில் கல்முனை
பொது நூலகத்தை
அதிகாரத்திலுள்ளவர்கள் அபிவிருத்தி செய்வார்கள்
என்று எதிர்
பார்க்கின்றேன். அப்படி அவர்கள் அபிவிருத்தி செய்யாமல்
பீச் பார்க்
கட்டுகிறார்களாம் வேதனையாக இருக்கின்றது.
அது அப்படியிருக்க நான்
குவைத் நாட்டுக்கு
தூதுவராகச் சென்றதும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
குறைபாடுகளை அறிந்த நான் அந்.நாட்டிலிருக்கும்
பல்கலைக்கழக நிர்வாகஸ்தரைச் சந்தித்து இது குறித்து
அவருடன் நீண்ட
உரையாடல் ஒன்றை
நிகழ்த்தி சாதகமான
விருப்பத்தைப் பெற்றுக்கொண்டேன். கல்விக்கு
உதவப்போகின்றோம் என்ற சந்தோசமடைந்தவனாக இங்குள்ள அன்றிருந்த
உப வேந்தருக்கு
உடனடியாகக் கடிதம் ஒன்றை எழுதினேன் ஆறு
மாத காலமாக
எந்த பதிலும்
எனக்கு கிடைக்கவில்லை.
மன வேதனை
அடைந்த நிலையில்
இருந்தேன்.
இதன்
பின்னர் தென்
கிழக்கு பல்கலைக்கழக
நிர்வாகிகள் இதன் அபிவிருத்திக்கு பல முயற்சிகள்
எடுத்தும் முடியாதவர்களாக
அவர்களின் உயர்
அதிகாரியின் ஆலோசனையின் பிரகாரம் 22 பேர் கொண்ட
குழுவொன்று என்னை எனது வீட்டில் சந்தித்து
எனது உதவியை
நாடினர். அவர்களிடம்
பல்கலைக்கழகத்தின் திட்டக் கோவையை
பெற்று அராபிய
பொருளாதார அபிவிருத்திக்கான
குவைத் நிதியம்
என்று சொல்வார்கள்
அதற்கான பணிப்பாளர்
அப்துல் கரீம்
முடாவா (Abdul Kareem Mutawa) என்பவர் இருந்தார்
அவரிடம் எல்லாம்
வல்ல அல்லாஹ்வைப்
பிரார்த்தித்தவனாக பல்கலைகழகத்தின்
திட்டக் கோவை
அடங்கிய ஆவணங்களை
பிஸ்மில் சொல்லி
அவரிடம்
கையளித்து முஸ்லிம்களின் கல்வி நிலை, பல்கலைக்கழகத்தின் குறைபாடுகள்
என்பன போன்ற
விடயங்களை எடுத்துக்
கூறி இக்கோரிக்கையை
நீங்கள் ஏற்றுக்
கொள்ள வேண்டும்
என்று வேண்டினேன்.
எனது பேச்சு
எல்லாவற்றையும் செவி மடுத்த அவர் அல்லாஹ்வை
முன்மொழிந்து இதணை ஏற்றுக் கொள்கின்றேன் என்று
கூறிய அவர்
எனக்கு நீங்கள்
ஒரு உதவி
செய்யவேண்டும். தற்போது நீங்கள் தந்துள்ள ஆவணங்கள்
பல்கலைக்கழக நிர்வாகிகளால் தரப்பட்ட ஆவணங்கள் இதனை
அரசாங்கத்தின் மூலமாக அவர்களின் கோரிக்கை
அடங்கிய பட்டியலில்
பட்டியல் இட்டுத்
தாருங்கள் மற்ற வேலைகளை நான்
தொடர்வேன் என வேண்டிக்கொண்டார். படைத்த இறைவனுக்கு நன்றி சொன்னவனாக
அரசாங்க கோரிக்கைப்
பட்டியலில் சேர்த்துக் கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை
மேற்கொண்டு தருமாறு குவைத் நாட்டிலிருந்து பல்கலைக்கழக
நிர்வாகிகளை வேண்டினேன்.
இதற்கான
நடவடிக்கையின் போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது
தென் கிழக்குப்
பல்கலைகழகம் தேசிய கல்வி ஆணைக்குழுவின்
அங்கிகாரத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம்
அல்ல இது
வர்த்தமாணி அறிவித்தல் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு
பல்கலைக்கழகம் இதனால் இதற்கு திறைசேரி உட்பட
எந்த இடத்திலும்
எந்தப் பதிவுமே
இருக்கவில்லை இதன் காரணமாக அரச பட்டியலில்
இணைப்பதற்கு பல சிரமங்களை எதிர் நோக்க
வேண்டியிருந்தது. எனது அமைச்சு பதவிகால அனுபவங்களைக்
கொண்டு நிதி
அமைச்சு, கல்வி
அமைச்சு வெளிநாட்டு
அலுவல்கள் தொடர்பான
உயர் அதிகாரி,மற்றும் பேரியல்
அஷ்ரப் ஆகியோர்களுடன்
குவைத்திலிருந்தே அடிக்கடி தொடர்பு கொண்டு இந்
நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான
முயற்சியை எடுத்து
வெற்றி கண்டோம்,
எங்களின் இந்தக்
கடின முயற்சியின்
காரணமாக சுமார்
6 ஆயிரம் மில்லியன்
ரூபா
இலங்கை நாணயம் உதவி இரண்டு கட்டமாக
இப் பல்கலைக்கழகத்திற்கு
கிடைக்கிறது. இந் நிதியைப் பெறுவதற்கு ஒத்தாசை
புரிந்த அத்தனை
பேருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக பல்கலைக்கழக வேந்தர்
ஹுஸைன் இஸ்மாயில் அவர்கள் இந்த விடயத்தில்
சாதாரண உத்தியோகத்தர்
போன்று பல
தடவைகள் பல
இடங்களுக்கும் சென்று மிகவும் கஷ்டப்பட்டு தேவைகளை
நிறைவு செய்து
தந்தார் அவருக்கு
விஷேட நன்றியைக்
கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.
இதற்கு
மேலாக இன்னும்
ஒன்றை இவ்விடத்தில்
கூறித்தான் ஆக வேண்டும் நான் சாய்ந்தமருது ஜும்ஆ
பெரிய பள்ளி
வாசல் வளவில்
குவைத் நாட்டு
நிதி உதவியுடன்
கலாச்சார மண்டபம்
ஒன்றை சகல
வசதிகளுடனும் நிர்மாணிப்பதற்கும் தேவையான
நடவடிக்கைகள் எடுத்திருந்தேன். எனது பதவிக் காலம்
சடுதியாக முடிவுற்றதன்
காரணத்தால் இவ் வேலையை என்னால் தொடர
முடியாமல் போய்
விட்டது. இது
குறித்து கவலை
கொண்டவனாகவே உள்ளேன்.இருந்தும் தென் கிழக்கு
பல்கலைக்கழகத்திற்கு உதவியதன் மூலம்
நாட்டிலுள்ள அனைத்து பிரதேச மக்களுக்கும் உதவிய
ஆத்ம திருப்தி
அடைகின்றேன். சாய்ந்தமருதில் அமைக்கப்படவிருந்த
கலாச்சார மண்டபத்தை
தற்போதுள்ள மக்கள் பிரதிநிதிகள் எவராவது அரசாங்கத்தின்
அனுமதி பெற்று
முன்னெடுக்கமுடியாதா? என்ற கேள்வியை
எழுப்புகின்றேன் அவர்களால் முன்னெடுக்க முடியும். அவர்கள்
அதனைச் செய்து
முடிக்க வேண்டும்
எனவும் வேண்டுகோள்
விடுக்கின்றேன்.
கேள்வி:- இன்றைய அரசியல்வாதிகளால் அபிவிருத்தி
என்று
அடிக்கடி
கூறப்படுகின்றது
எப்படியான
அபிவிருத்திகளை
அம்பறைக்
கரையோரப்
பிரதேசங்களில்
செய்ய
வேண்டும்
என
எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில்:- அப்பிரதேசத்தில்
செய்யவேண்டிய மிகவும் முக்கியமான அபிவிருத்தி மட்டக்களப்பிலிருந்து
பொத்துவில் வரையும் புகையிரதப் பாதை அமைப்பதேயாகும்.
அடுத்து அங்கு
பாழடைந்த நிலையில்
காணப்படும் பொது நூலகத்தை சீரமைக்க வேண்டும்,
கல்முனையில் அரச செயலகத்தில் ஒரு பகுதி
பூர்த்தி
செய்யப்படாமல் அத்திபாரம் போடப்பட்ட
நிலையில் இருந்து
கொண்டிருக்கிறது. அது பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
சாய்ந்தமருதில் கலாச்சார மண்டபம் அமைக்கப்படல் வேண்டும்
எனத் திட்டமிடப்பட்டிருக்கிறது.அதனை அரசாங்கத்தின்
அனுமதி பெற்று
குவைத் சென்று
தொடர முடியும்.
ஒருவர் கொண்டு
வந்த மக்களுக்குத்
தேவையான நல்ல
வேலைத் திட்டங்களை
புதிதாக வந்துள்ள
மக்கள் பிரதிநிதியால்
செய்ய முடியாதா?
அல்லது செய்யக்கூடாதா?
எந்த ஒரு
அபிவிருத்தி வேலைத் திட்டத்தைச் செய்வதானாலும் சரியான
திட்டம் வகுத்துச்
செய்ய வேண்டும்.
கேள்வி:- தாங்கள் பல பதவிகளை வகித்து சகல சமூகத்தவர்களுக்கும் சேவையாற்றியுள்ளீர்கள்
அதுபற்றி:-
பதில்:- ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின்
ஆட்சி காலத்தில்
சுமார் ஒரு
வருட காலம்
யாழ்ப்பாண மாவட்ட
அமைச்சராக இருந்து
அங்குள்ள மக்களின்
நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் சேவையாற்றியுள்ளேன். இதன் பிறகு முல்லைத்தீவு மாவட்ட
அமைச்சராக பதவி
வகித்து அங்குள்ள
மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து
அவர்களுக்கு வெளிச்சத்தை வழங்கினேன். ஐக்கிய நாடுகள்
பொதுச் சபையில்
கறுப்பு இன
மக்களின் துயரம்
போக்க இன
ஒதுக்கலுக்கு எதிராகவும் மனித உரிமைக்காகவும் அங்கு
காரசாரமான உரை
ஒன்றை நிகழ்த்தியது
என்னால் மறக்க
முடியாது. ஆர்.
பிரேமதாச ஆட்சி
காலத்தில் வர்த்தக,
வாணிபத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து ஏனைய
நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து இந்
நாட்டுக்கு பல நன்மைகளைத் தேடிக் கொடுத்துள்ளேன்.
எனது
அமைச்சு பதவி
காலத்தில்தான் முதன் முதலாக புனித ரமழான்
மாதத்தில் சவூதிஅரேபியா
நாட்டிலிருந்து ஈத்தம் பழம் எமது நாட்டு
முஸ்லிம் மக்களுக்கு
அன்பளிப்பாக வழங்கும் திட்டத்தை அந்நாட்டிலுள்ள உலமாக்களின்
தலைவரிடம் பேசி பெற்றேன். இதனைக்
கண்டு ஏனைய
நாடுகளும் தற்போது
ஈத்தம் பழங்களை
அன்பளிப்பாக எமது நாட்டுக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றன.
இது
மாத்திரமல்லாமல் நான் குவைத் தூதுவராகப் பதவி
வகித்த போது
அந்நாட்டில் எமது நாட்டைச் சேர்ந்த சுமார்
600 பணிப் பெண்கள்
நிர்க்கதியான நிலையில் நாட்டுக்கு திரும்ப
முடியாமல் திண்டாடிய
நிலையில் இருந்து
கொண்டிருந்தார்கள்.இவர்களின் பரிதாப
நிலை கண்டு இது தொடர்பாக குவைத்
நாட்டு பாதுகாப்பு
அமைச்சரிடம் பேசி அந்நாட்டின் இரண்டு
விமானங்களை இலவசமாகப் பெற்று அனைவரையும் இங்கு
திருப்பி அனுப்பியதையும்
நினைத்துப் பார்க்கின்றேன்.
நிறைவேற்று
அதிகாரம் நாட்டை
ஆளுகின்ற ஜனாதிபதிக்கு
மாத்திரமல்ல அமைச்சரவை உறுப்பினர்களுக்கும்
இருக்க வேண்டும்
என அரசியல்
சாசனத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது அந்த
வகையில் மறைந்த
ஆர். பிரேமதாச
அவர்கள் அதனை
மதித்தவராக செயல்பட்டார். நான் வர்த்தக
வாணிபத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் எனது அமைச்சிக்குக் கீழ்
இருந்த (CWE) கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தை
தனியார் மயமாக்கல்
திட்டத்தின் மூலம் ஒரு பெரும் வர்த்தகப்
புள்ளி அதனைக்
கையேற்பதற்கு அன்றிருந்த ஜனாதிபதி பிரேமதாசவை நாடினார்.
அச் சந்தர்ப்பத்தில்
இதற்கான நிறைவேற்று
அதிகாரம் அந்த
அமைச்சுக்குப் பொறுப்பானவரிடம்தான் இருக்கிறது
அவரைப் போய்
சந்தித்து முடிவு
எடுங்கள் எனக்
கூறி அவரை
என்னிடம் அனுப்பியிருந்தார்.
மக்களின் நன்மை
கருதி அந்தப்
பெரும் புள்ளியின்
கோரிக்கையை நிராகரித்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்றினேன்.
கேள்வி:- இறுதியாக பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு
என்ன
சொல்ல
விரும்புகின்றீர்கள்?
பதில்:- ஜனநாயக
ரீதியில் பொதுச்
சேவையில் ஈடுபடுபவர்களிடம்
குறிப்பாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம்
நல்ல பண்புகள்
நல்ல விழுமியங்கள்,
நல்லோழுக்கங்கள் என்பன போன்றவை அவசியம் இருக்க
வேண்டும். இது
மாத்திரமல்லாமல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நேரத்தை
மதித்து கருமமாற்றல்
என்ற நல்ல
அம்சங்களுடன் சேவையாற்ற
வேண்டும். எப்படியும்
மக்களின் நல்லெண்ணத்தைப்
பெற வேண்டும்.
என்ன பொதுச்
சேவை செய்வதாக
இருந்தாலும் அதனை வெளிப்படையாகவும் ஊக்கமாகவும் செய்ய
வேண்டும்.
எங்களின்
பதவி காலத்தில்
இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்குவதற்கான அனுமதி
கிடைத்தால் அந்த உத்தியோகம் என்ன அது யார் யாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது
என்பதும் எல்லோருக்கும்
பகிரங்கமாகத் தெரிந்துவிடும். எங்கள் பதவி காலத்தில் வேலை வங்கி முறையைக்
கொண்டு வந்து
தொகுதிக்கு 2500 வேலை வங்கிப் படிவங்களை
தந்திருந்தார்கள். கிடைக்கப் பெறுகின்ற வேலை வாய்ப்புக்களுக்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்து எடுக்கப்படும்
தீர்மானம் எல்லாம்
மக்கள் தீர்மானமாகத்தான்
இருந்தது. அது
போல் தொகுதியிலுள்ள
அனைத்து ஊர்களுக்கும்
பங்கீடு செய்வதும்
கல்விமான்களும் ஊர் பிரமுகர்களும், பொது
மக்களும்தான் தன்னிச்சையாக இது விடயத்தில் நான் செயல்படவில்லை.
இப்படி செயல்பட்டால்தான்
மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும். என்ன
நம்பிக்கை ஏற்படும்?
பாராளுமன்ற உறுப்பினரில் நம்பிக்கை ஏற்படும். அவர்
செய்யும் கடமையில்
நம்பிக்க ஏற்படும். ஒழிவு,
மறைவாக செயல்படுவதன்
காரணமாகத்தான் பல தில்லு முல்லுகள் ஏற்பட
வாய்ப்புகள் உண்டாகின்றது. அன்று ஒப்பந்த வேலைகளையும்
அப்படித்தான் பொறுப்பு வாய்ந்த மக்களின் விருப்பப்படியே
வழங்கப்பட்டது.இப்படியான நடவடிக்கைகளில்தான்
களவு, ஊழல்
என்பன போன்றவை
நடைபெறாது.
ஏ.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்
0 comments:
Post a Comment