தமிழ்
அரசியல்வாதிகள் போன்று முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் இல்லையே
அம்பாறை மாவட்ட
மக்கள் கவலை
அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர்
விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை கிளிநொச்சிக்கு அழைத்து
அம்மாவட்ட மக்களின் குறைபாடுகள், தேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு
கலந்துரையாடல்களைச் செய்து அம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமானால்
ஏன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸல்
காசீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம். நஸீர் ஆகியோர் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்திலுள்ள
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிரதமரை அம்பாறை மாவட்டத்தின்
கரையோரப் பிரதேசங்களுக்கு அழைத்து வந்து
அதிகாரிகள் முன்னிலையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏன் சந்தர்ப்பத்தை
ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என இப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்திற்குச் சென்ற பிரதமர் மாவட்டத்தின்
அபிவிருத்திக்காக விசேட குழுவொன்று அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன்
மூலம் மக்களின் காணிப்பிரச்சனைகள் மாத்திரமன்றி அபிவிருத்தி செயற்பாடுகள்
தொடர்பிலும் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுமாத்திரமல்லாமல் கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகளின்
பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கப்படவுள்ளது. இங்கு மழை நீரை சேமித்து அதனை
பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தையும் பிரதமர் அங்கு தெரிவித்துள்ளார்.
இப்படியான நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில்
வாழும் மக்கள் பல பிரச்சினைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் கிராம மக்களின் காணி விவகாரம்,
ஒலுவில்
மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், சுவிகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் பிரச்சினைகள், கடலரிப்பினால் எதிர்நோக்கப்பகின்ற பிரச்சினைகள், ஒலுவில் வெளிச்ச வீட்டை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பு காரணமாக தென்னந் தோட்டங்கள், மீனவர் வாடிகள் மற்றும் கட்டடங்கள் என்பன கடல் அலையினால் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெளிச்ச வீட்டுக்குச் செல்லும் பாதையும் முற்றாக சேதமுற்றுள்ளது.
கடலரிப்பினால் இப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்களின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான தென்னந் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒலுவில், நிந்தவூர் பிரதேசங்களில் ஒவ்வொரு வருடமும் பல தடவைகள் மிக மோசமான கடலரிப்பு ஏற்படுவதோடு இக்கடலரிப்பைத் தடுக்க இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது, பொத்துவில் வைத்தியசாலைக்கான சிற்றூழியர்களை
சீராக நியமித்தல், பொதுமைதானம் அமைத்தல், கல்வியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள்
மற்றும் பொதுச் சந்தை சதுக்கத்தின் நிர்மானங்களை மேற்கொள்வது.
நீண்ட காலமாக விவசாயம் செய்து வந்த வட்டமடு விவசாயிகளின் காணிகள், வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளினால் விவசாயம் செய்வதற்கு தடுக்கப்படும் விடயம் .
கல்முனை பொதுச் சந்தை, கல்முனை மாநகர சபைக் கட்டடம் ஆகியன
புதிதாக நிர்மானித்தல், கல்முனை விளையாட்டு மைதான அபிவிருத்தி, கல்முனையில் சுமார்
38 வருடங்களாக அத்திபாரம் இட்ட நிலையில் காணப்படும் அரச செயலகத்தின் ஒரு பகுதியை
அலுவலகத் தேவைகளுக்காக நிர்மானித்தல், கரைவலை மீனவர்களின் பல பிரச்சினைகள்,
விவசாயிகளின் பொதுவான பிரச்சினைகள், மாவட்டத்திலுள்ள
வேலயற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள்
மற்றும் வேலையற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தொழிற்பேட்டைகளை
கரையோரப் பிரதேசங்களில் நிர்மனித்தல் என்பன போன்ற பிரச்சினைகளை முன் வைத்து
பிரதமர் முன்னிலையில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும் அல்லவா?
ஆனால், இதற்கான முயற்சிகள்
எதுவும் சரியான முறையில் தமிழ் அரசியல்வாதிகள் எடுப்பது போன்று முஸ்லிம்
அரசியல்வாதிகளால் எடுக்கப்படுவதாக இல்லை என பிரதேச நலன் விரும்பிகள் கவலை
தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்ட கரையோர முஸ்லிம்
வாக்காளர்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பிரதி அமைச்சர்களும் இரண்டு
பாராளுமன்ற உறுப்பினர்களும் என மொத்தமாக 4 உறுப்பினர்களும் இம்மாவட்ட வாக்காளர்களின்
வாக்களிப்பின் மூலமாகவும் கிடைக்கப்பெற்றுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்
ஒருவர் இருந்தும் கூட இம்மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களில் இடம்பெறுவது போன்று அபிவிருத்தி
வேலைகள் இடம்பெறுவதாக இல்லை என மக்கள் குறை தெரிவிக்கின்றனர்.
எமது மக்களால் தெரிவு செய்யப்பட்டு அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளிடம்
இதற்கான சமார்த்தியம் ( Talent ) போதாதா என பிரதேச நலனில் அக்கறையுள்ளவர்கள்
கேள்வி எழுப்புகின்றனர்.
ஏ.எல்.ஜுனைதீன்
0 comments:
Post a Comment