மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் நாமம்
மர்ஹும் கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர்

கிழக்கு மாகாணத்தின் புகழ்பெற்ற வன்னியராகவும் பின்னர் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் தனது வாழ்நாளில் சுமார் எழுபது வருடங்கள் மக்களினதும் நாட்டின் நலனுக்காகவும் அர்ப்பணித்தவர்தான் மர்ஹும் கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர்.
(.எல்.ஜுனைதீன்)
மஹ்மூத் சம்சுதீன் காரியப்பர் அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது எனும் ஊரில் 1901 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி பிறந்தார் இவர் தனது  கல்வியை கல்முனை லீஸ் உயர்தரப் பாடசாலையிலும், ( தற்பொழுது கல்முனை, உவெஸ்லி உயர்தரப் பாடசாலை) கொழும்பு வெஸ்லிக் கல்லூரியிலும் பெற்றார். மெற்றிக் குலேஷன் பரீட்சையிலும், இண்டர் சைன்ஸ் பரீட்சையிலும் சித்தியடைந்து, மருத்துவத் துறையில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில், இவருக்கு பொத்துவில்மகாபிட்டிவன்னிமை பதவி 1921.01.01 ஆம் திகதியில் இவரின் 20 ஆவது வயதில் வழங்கப்பட்டது.
எம்.எஸ்.காரியப்பரின் திறமையைக் கண்ணுற்ற ஆங்கில கவர்னர்கள் 1927 ஆம் ஆண்டில் சம்மாந்துறை நாடுகாடுப் பற்று வன்னிமையாகவும், இறுதியாக 1932 ஆம் ஆண்டில் கரைவாகு நிந்தவூர்பற்று வன்னிமையாகவும் பதவிகளை வழங்கினர். மொத்தமாக  25 ½ வருட காலம் சேவையாற்றிய பின் இலங்கை அரசாங்கம்வன்னிமைநிர்வாக முறையை பிரதேச இறைவரி உத்தியோகத்தர் (D.R.O) முறையாக மாற்றியமைத்ததன் காரணமாக 1946.07.01 ஆம் ஆண்டு வன்னிமைப் பதவியிலிருந்து இவர் ஓய்வு பெற்றார்.
பொத்துவில்-பாணமை பிரதேசத்தில் வன்னிய முதலியாராக பதவி வகித்த காலத்தில் ஏழை விவசாய மக்களுக்கு அரச காணிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களை பகிர்ந்தளித்து பொத்துவில் பிரதேசத்தின் விவசாய, பொருளாதார வளர்ச்சிக்கு இவர் வழிவகுத்தார்.
காடாகக் கிடந்த பகுதிகளைக் களனியாக்கும் பணியிற் எம்.எஸ்.காரியப்பர் பெரும் பங்கு வகித்திருக்கிறார். அப்போதய மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருந்த சீ.வீ.பிரய்ன் என்பவர் இதற்கான ஊக்கத்தை வரைவின்றி வழங்கியதன் காரணமாகப் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காட்டு நிலம் வயல் வெளியாக மாறியது. அன்று பொத்துவில் மக்களுக்கு தலா 05 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு பகுதி இன்றும்பிரய்ன்துரைக்கண்டம்எனும் பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றது.
விண்ணாங்கடி நிலப் பிரதேச அபிவிருத்தி, மஹாகண்டியத் திட்டம் என்பன இவரது முயற்சிகளின் பலனேயாகும். வீரமுனை சிந்தாத்துரைப் பிள்ளையார் கோவிலுக்கு 110 ஏக்கர் நிலமும், கல்லாறு பிள்ளையார் கோவிலுக்கு 100 ஏக்கர் நிலமும் கிடைக்கச் செய்தார். இவ்வாறு இவர் சாதி, மத, இன, பிரதேச பாகுபாடற்ற முறையில் தனது சேவைகளை நிறைவேற்றியிருப்பதைக் காண முடியும்.
எம்.எஸ்.காரியப்பர் விவசாயம், நீர்பாசனம், கைத்தொழில், கூட்டுறவு போன்ற துறைகளில் அதிகமாக ஈடுபட்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். இவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய பொதுநல சேவை, தூரநோக்கு, அறிவாற்றல் போன்றவற்றைக் கெளரவிக்கும் நோக்கமாக ஜுன் 1944 ஆம் ஆண்டில்கேற்முதலியார்” ( இராசவாச) என்ற தேசிய பட்டத்தை இலங்கை அரசின் தலைவராக இருந்த கவர்னர் இவருக்கு வழங்கினார். சிங்கள அரச நிருவாக முறையின் கீழ் ஒருநிலமேஎன்பவருக்கு இப்பட்டம் சமனாக இருந்தது. இது அரசருக்கு அடுத்த மூன்றாவது பதவி நிலையாகும். இந்த அரச கெளரவத்தைப் பெற்ற முதலாவது முஸ்லிம் இவராவார். இப்படியான உயர்பதவி பெற்ற தமிழ் பெருமகன் சேர்.பொன். அருணாசலத்துடைய தந்தை கேற்முதலியார் .பொன்னம்பலம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இரண்டாவது உலக யுத்தத்தின்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் பீதியிலே வாழ்ந்தார்கள். ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு உணவு எடுத்துச் செல்லக்கூடாது எனும் தடைச்சட்டம் அமுலில் இருந்த அக்காலகட்டத்தில் கல்முனையில் அவசரகால கச்சேரி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கச்சேரிக்கு முதலாவது முஸ்லிம் சிவில்சேவை உத்தியோகத்தராக அன்று நியமிக்கப்பட்ட மர்ஹும் .எம்..அஸீஸுடன் கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் இணைந்து செயல்பட்டு இப்பிரதேச மக்களுக்கு பல ஏக்கர் காணிகளை பகிர்ந்தளிப்பதற்குக் காரணகர்த்தாவாக விளங்கினார்.அம்பாறை மாவட்டத்தில் அஸீஸ்துரைக் கண்டம், பளவெளிக் கண்டம், நெய்னாகாடு என்பன போன்ற திட்டங்கள் எல்லாம் இவர் காலத்தில்தான் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன.
இவருடைய அறிவு,செயல்திறன் நாட்டின் சிங்கள, தமிழ் தலைவர்களைக் கவர்ந்தது. குறிப்பாக  அப்போது அரசாங்க சபை தலைவராக இருந்த தேசபிதா டி.எஸ்.சேனநாயக்க, சிங்கள மகாசபைத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, யுத்த காலத்தில் உள்நாட்டு,பாதுகாப்பு நிருவாக ஆணையாளராகக் கடமையாற்றிய சேர் ஒலிவர் குணதிலக்க போன்றோர் இவருடன் அக்காலத்தில் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.
இரண்டாவது உலக யுத்த காலத்தில் எம்.எஸ். காரியப்பரின் முழு முயற்சியினால்அதிக உணவு பயிரிடுகஎன்னும் கருப்பொருளைக் கொண்ட  கண்காட்சி ஒன்று கல்முனையில் சிறப்பாக நடந்தேறியது. இக்கண்காட்சியை டி.எஸ்.சேனநாயக்க வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.  கல்முனைப் பிரதேச மக்கள் வரலாறு காணாத நிகழ்ச்சியாக இந்த கண்காட்சியை கண்டு களித்தனர்.
எம்.எஸ்.காரியப்பர் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றதும் டி.எஸ்.சேனநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, சேர் ஒலிவர் குணதிலக்க ஆகிய அரசியல் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1947 ஆம் ஆண்டில் (1947.09.15) நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பிரவேசித்தார். கல்முனை தொகுதியில் (கல்முனை,சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி,சம்மாந்துறை, காரைதீவு, இறக்காமம், வரிப்பத்தான்சேனை, அம்பாரை, தமன, உஹன ஆகிய ஊர்கள் கல்முனைத் தொகுதியில் அன்று உள்ளடக்கப்பட்டிருந்தன)  ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசபிதா டி.எஸ்.சேனநாயக்கவினால் இவர் உள்நாட்டு கிராமிய அபிவிருத்தி உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவரது பாராளுமன்ற பிரநிதித்துவ காலத்தில் முஸ்லிம்களுக்கு உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பிரச்சினைகள், அவலங்கள் ஏற்படும்போது, முஸ்லிம்களின் நல உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்ற முதல் நபராகவும் இவர் விளங்கினார்.
சுயஸ் கால்வாயின்போட் ஸெய்ட்துறைமுகப் பகுதியில் அமைந்திருந்த குடியிருப்புக்களை, பிரிட்டிஷ் படைகள் தாக்கி அழித்தபோது அன்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி அங்கத்தவராக இருந்த .அஸீஸ் பிரித்தானியாவின் செயலைக் கண்டித்து, பாராளுமன்றத்தில் கண்டனப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்து உரை நிகழ்த்தினார். அரசாங்கத்தின் உதவி அமைச்சராக இருந்த கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அப்பிரேரணையை ஆமோதித்து சபையில் பேசினார்.
அக்கால கட்டத்தில் பாராளுமன்ற அங்கத்தவராக இருந்த எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியும், இப்பிரேரணையை ஆமோதித்து பேசுவதற்கு முன் வராத நிலையில் இவர் ஆமோதித்து  உரை நிகழ்த்தியமை அவரது அதீத சமூக உணர்வினை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
பாராளுமன்றத்தில் ஆலோசிக்கப்படுகின்ற அத்தனை விடயங்களிலும், கொண்டுவரப்படுகின்ற பிரேரணைகள் எல்லாவற்றிலும் பங்குபற்றி தனது வாசிப்புத் திறனையும், பேச்சாற்றலையும் வெளிப்படுத்தியதன் காரணமாக இவர் அனைத்துத் தரப்பினரதும் பாராட்டுதலைப் பெற்றிருந்தார்.
முதலியார் எம்.எஸ்.காரியப்பர் கல்லோயா அனைக்கட்டு கட்டுவதற்கான முக்கியத்துவத்தை அன்று விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கவிடம் எடுத்துரைத்தற்கு இணங்க இவருடைய சிந்தனையையும், செயலாற்றலையும், அறிவையும் தெரிந்து கொண்ட அவர் இவருடன் இணைந்து கல்லோயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை விரைவு படுத்தினார்.
1950 ஆம் ஆண்டில் விவசாய அமைச்சராக இருந்த டட்லி சேனநாயக பாராளுமன்ற விவாதத்தில் பதிலளித்துப் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்,
கல்லோயா நீர்த்தேக்கத் திட்டத்திற்காக, கேற்முதலியார் பல வருடங்கள் நடாத்திய போராட்டம் பலன் பெற்று விட்டது. “கல்லோயாத் திட்டத்தின் பிதாஎன்று அழைப்பதற்கு அருகதையுடையவர் யாரேனும் இருப்பாரேயானால், அவர் உண்மையில் கேற்முதலியார் காரியப்பர்தான். இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சகல அதிகாரிகளுக்கும் எனது நன்றி உரித்தாகுக. கல்லோயா பள்ளத்தாக்கு ஒரு கிருஷிகர்களின் சுவர்க்கமாக மாறும் நன்னாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.”  இதிலிருந்து இவர் இப்பிரதேச விவசாயிகளின் முன்னேற்றத்தில் எவ்வளவு கரிசனை கொண்டிருந்தார் என்பதை அறியமுடியும்.
கலோயாத் திட்டம் உருப்பெறுவதிலும், பூரணத்துவம் அடைவதிலும் எம்.எஸ்.காரியப்பர் பெரும் பங்கு செலுத்தினார். இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனநாயக்க 1951 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி  கல்லோயா அணைக்கட்டு திட்டத்தை பார்வையிட எம்.எஸ்.காரியப்பருடன் இங்கினியாக்கலைக்குச் சென்றிருந்தார். அங்கு பிரதமர் தனது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்றுச் சம்பவக் குறிப்பு இவ்வாறு அமைந்திருந்தது.
கல்லோயாப் பிரதேசத்திற்கு 1951 ஜூன் 10 ஆம் திகதி விஜயம் செய்து திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நேரடியாக அவதானித்தேன். குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே இத்திட்டம் பூரணமடையக் கூடிய வேகத்தில் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன் ஆரம்பத்தில் இருந்தே கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் காட்டிய அதீத அக்கறையை இச்சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறேன். இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் அணை கட்டப்படும் இடத்தில் முதலாவது மரத்தை நான் வெட்டி இன்றுடன் பத்து வருடங்கள் ஆகின்றன. இப்பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியே எமது விசுவாசமான அபிலாசையாக இருந்தது. இப்பணியில் என்றுமே துயிலாத காரியப்பர், இத்திட்டம் நிறைவேறுவதையிட்டு மிகவும் சந்தோஷமுடைய மனிதராக இருப்பார். எங்கள் இருவரதும் கனவுகள் நிறைவேறியதை அவரும் நானும் கூட்டாக உணர்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் காரியப்பரின் கனவில் ஒரு பகுதி நிறைவேறாமல் போய்விட்டது. கல்லோயாத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது, அம்மாவட்டக் கரையோரப் பிரதேச மக்கள் அங்கு குடியேறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுமென டி.எஸ்.சேனநாயக்க பகிரங்கமாக அறிவித்தார். காரியப்பர் போன்றவர்கள் அம் மக்களை அங்கு செல்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் அன்று வற்புறுத்தினார். அவ்வாறு அவர்கள் செல்லாவிட்டால், பிற மாகாணத்தவர் அங்கு வந்து குடியேறுவர் எனவும் எச்சரித்தார்.
இருப்பினும், குடியேற்றப் பிரதேசங்களான கொலனிகளில் குடியேறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது கரையோரப் பிரதேச முஸ்லிம்களும், தமிழர்களும் அக்கறை காட்டவில்லை. தத்தமது ஊர்களில் போதிய நில வசதியிருந்ததும், ஊரை விட்டு குடிபெயரும் கெளரவப் பிரச்சினையும் தடையாயிருந்தன.
அதனால், தலா 150 வீடுகளையும் ஒவ்வொரு வீட்டுக்கும் 05 ஏக்கர் நிலத்தையும் கொண்ட 36 கொலனிகளில், கொலனிகள் இலக்கம் 4,5,6,11,12,13,15 என்பனவற்றுக்கு மாத்திரமே இவர்கள் சென்றனர். அப்படிச் சென்றவர்களில் சிலர் மீண்டும் தமது ஊர்களுக்கே திரும்பி வந்து விட்டனர்.
அம்பாறை மாவட்ட குறிப்பாக கல்முனைப் பிரதேச மக்களுடைய பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய தொண்டு மகத்தானது. கல்முனை நகரம் என்று ஒன்று சிறப்பாக மிளிர்வதற்கு இவரே காரணகர்த்தாவாக இருந்தார். இதன் காரணமாகவோ என்னவோ மறைந்த மாபெரும் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஒருமுறை   கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர்  ஒரு முஸ்லிமாகப் பிறந்து விட்டார். இதனால் அவருக்கு கல்முனையில் சிலை வைக்க முடியாமல் போய்விட்டது.” என்று இவரின் சேவையை பாராட்டிப் பேசி இருக்கின்றார்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் இவர் மக்கள் சபையில் உதவி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல முஸ்லிம் பாடசாலைகளை இப்பிரதேசங்களில் உருவாக்கப் பாடுபட்டார். நூற்றுக்கணக்கான படித்த வாலிபர்கள் ஆசிரியர்களாக நியமனம் பெறுவதற்கு வசதியாக கல்வித் தகைமைகளை இலகுவாக்கி பெரும் தொண்டாற்றினார். இந்த ஆசிரியர் நியமனங்கள் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்தது எனலாம்.
1959 ஆம் ஆண்டு பிரதமர் டபிள்யூ. தகநாயக்காவின்காபந்து  அரசாங்கத்தின் அமைச்சரவையில் தபால், கலாச்சார,சமூக சேவைகள் அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார். இலங்கையின் மூன்றாவது பாராளுமன்ற பிரதிநித்துவ காலத்தில் பல பாடசாலைகளை ஆரம்பித்ததுடன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் முன்னேற்றத்திலும் கூடிய கவனம் செலுத்தினார்.
1960ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் டபிள்யூ.தகநாயக்கவினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எல்.பி.பி (LPP) கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு கல்முனை தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போனதால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, 1960 ஜுலையில்  மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் இவர் தன்னால் ஆரம்பிக்கப்பட்டஅகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணிஎனும் கட்சியில்உதயசூரியன்சின்னத்தில் போட்டியிட்டு துரதிஸ்டவசமாக தோல்வியடைந்தார்.
1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற  பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு,வெற்றி பெற்ற கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் 1968 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.அறிவுத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடும் மற்றும் அனுபவமும் கொண்டிருந்த மர்ஹும் எம்.எஸ்.காரியப்பர் கல்வித்துறை வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினார்.
இவர் வன்னியனாராகக் கடமையாற்றிய காலத்திலேயே பல பாடசாலைகளை ஆரம்பிப்பதில் முன் நின்றார். அதிலும் குறிப்பாக பெண் கல்வியில் மிகவும் அக்கறை காட்டினார்.
அக்கால கட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஆண்கள் மட்டும் கல்வியைப் பெற்றுக்கொண்ட அதேவேளை பெண்களைப் பொறுத்தவரையில் அனைவருமே பாடசாலைக்குச் சென்று கல்வி கற்பதில் நாட்டமில்லாதவர்களாகவே இருந்து வந்தனர். ஆனால், (குர்ஆன் பாடசாலை)களுக்குச் சென்று, குர்ஆனை வாசிக்கக் கற்றுக் கொள்ளும் வழமை அவர்களிடம் இருந்து வந்தது.
அன்று சாய்ந்தமருதிலும், கல்முனைக்குடியிலும் சில கலவன் பாடசாலைகள் இயங்கி வந்தாலும் அப்பாடசாலைகளில் 5 ஆம் வகுப்பு வரை மாத்திரமே கல்வி கற்கக்கூடியதாக இருந்தது.
சாய்ந்தமருதில் 1894 ஆம் ஆண்டில் மெதடிஸ்த மிஸனரிப் பாடசாலை ஒன்று கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வீதியிலும், 1913 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி சாய்ந்தமருது பிரதான வீதியில் ஆரம்பிக்கப்பட்ட அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (தற்பொழுது அல்-ஹிலால் வித்தியாலயம்) ஆகியன அமைந்திருந்தன.
இப்பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்க விரும்பாததன் காரணமாக பெண்களுக்கு என்று தனிப் பாடசாலைகள் அமைக்கப்பட வேண்டுமென்று காரியப்பர் எண்ணி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சம்மாந்துறை, நிந்தவூர், கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை போன்ற கிராமங்களில் உள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களுக்கு கல்முனை முஸ்லிம் முன்னேற்றச் சங்க முன்னோடிகளுடன் சென்று ஜும்ஆத் தொழுகைக்குப் பின் பெண்கள் கல்வி கற்பதன் அவசியம் பற்றி பிரசாரங்களை மேற்கொண்டார்.
பெண்களின் கல்வியில் கூடிய அக்கறை கொண்டிருந்த கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் பெண்களுகென்று தனிப்பாடசாலைகளை ஆரம்பித்தார்.
இவர் வன்னிமையாக இரு,ந்தபோது 6 பாடசாலைகளையும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையையும் பாராளுமன்ற உறுப்பினர் காலத்தில் 13 பாடசாலைகளையும் உருவாக்கினார்.
கேற்முதலியார் காரியப்பர் ஓய்வு பெற்ற 1968 ஆம் ஆண்டிலிருந்து இவர் நோய்வாய்ப்படும்வரை தனது புத்திக் கூர்மையையும், பேனாவையும் தட்டச்சு இயந்தித்தையும் மக்களின் சேவையிலேயே ஈடுபடுத்திக் கொண்டார்.
கிழக்கு மாகாண மக்களுடனேயே என்றும் இவர் வாழ விரும்பினார். அதனால்தான் கொழும்பில் தனக்கென ஒரு வதிவிடத்தை இவர் எற்படுத்திக் கொள்ளவில்லை. அத்துடன் நாட்டுக்கு வெளியே செல்லவும் இவர் விரும்பவில்லை. அதனால்தான் பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவராக இவருக்கு நியமனம் வழங்குவதற்கு  அரசாங்கம் முன் வந்த போது அதனை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தனது நாட்டில் தனது மக்களுடன் வாழ்ந்து அவர்களுக்குச் சேவை செய்யவே விரும்பினார். அதனால்தான் இவரின் நாமம் என்றும் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறது.
கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட கல்விக் கூடங்கள்.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட திகதி
பாடசாலை ஆரம்பிக்கும்போது இடப்பட்ட பெயர்
பாடசாலையின் தற்போதுள்ள பெயர்
01.05.1928
சாய்ந்தமருது அரசினர் தமிழ் பெண்கள் பாடசாலை
.மு..பாடசாலை
11.01.1930
கல்முனைக்குடி அரசினர் முஸ்லிம் தமிழ் பெண்கள் பாடசாலை
அல்-அஷ்ஹர் வித்தியாலயம்
02.04.1936
கல்முனைக்குடி அரசினர் தமிழ் பெண்கள் பாடசாலை
அஸ்-ஸுஹரா வித்தியாலயம்
01.01.1940
மருதமுனை தமிழ் பெண்கள் பாடசாலை
அல்-ஹம்றா வித்தியாலயம்
1940
நீலாவணை தமிழ் பெண்கள் பாடசாலை
விஷ்னு வித்தியாலயம்
01.11.1941
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
அட்டாளைச்சேனை ஆசிரியர்பயிற்சிக் கலாசாலை
25.05.1945
மாவடிப்பள்ளி அரசினர் தமிழ் பெண்கள் பாடசாலை
அல்-அஷ்ரஃப் மஹா வித்தியாலயம்
25.06.1948
கல்முனைக்குடி அரசினர் தமிழ் பெண்கள் பாடசாலை
அல்-பஹ்ரியா மஹா வித்தியாலயம்
16.11.1949
சாய்ந்தமருது ஆங்கில கனிஸ்ட பாடசாலை
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை
01.03.1950
சம்மாந்துறை ஆங்கில கனிஸ்ட பாடசாலை
சம்மாந்துறை தேசிய பாடசாலை
01.09.1950
சம்மாந்துறை கருவாட்டுக்கல் அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
சம்மாந்துறை அல்-மர்ஜான் மத்திய கல்லூரி
01.05.1951
சாய்ந்தமருது வடக்கு அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம்
01.04.1952
சாய்ந்தமருது தெற்கு அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மஹா வித்தியாலயம்
27.07.1959
கல்முனைக்குடி தெற்கு அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயம்
01.09.1959
சாய்ந்தமருது-2ம் குறிச்சி அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
சாய்ந்தமருது றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயம்
01.09.1959
சாய்ந்தமருது-1ம் குறிச்சி அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயம்
01.09.1959
மருதமுனை கிழக்கு அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
சம்சுல் இல்ம் முஸ்லிம் மஹா வித்தியாலயம்
01.09.1959
மருதமுனை ஆலையடி அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
அல்.மனார் ஆரம்ப பாடசாலை
01.09.1959
பெரிய நீலாவணை அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் வித்தியாலயம்
01.09.1959
பாண்டிருப்பு அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை
அல்-மினன் முஸ்லிம் வித்தியாலயம்



.எல்.ஜுனைதீன்,
ஊடகவியலாளர்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top