நடைபாதை வாசிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும்
இலவசமாக சிகிச்சை அளிக்கும் டாக்டர்
   
எமது அண்டை நாடான இந்தியாவிலுள்ள மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் அபிஜித் சோனாவானே என்ற டாக்டர் வீடு இல்லாத நடைபாதை வாசிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.
இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் டாக்டர்களை அனைவரும் கடவுளாக பார்க்கின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அபிஜித் சோனாவானே என்ற டாக்டர் தினமும் கோவில்களுக்கும், ஆன்மீக ஸ்தலங்களுக்கும் சென்று அங்குள்ள நடைபாதை வாசிகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.
இதுகுறித்து டாக்டர் அபிஜித் சோனாவானே கூறுகையில், ‘எனது வாழ்வின் முக்கியமான நெருக்கடியின்போது வீடுகள் இல்லாத இவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர். தற்போது என்னுடைய புனிதமிக்க தொழில் மூலம் நான் அவர்களுக்கு உதவி செய்கிறேன். இதன் மூலம் சமூகத்துக்கு நான் நன்றிகடன் செலுத்துகிறேன்என தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை புனே நகரின் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கிறார். நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனை வழங்குவது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு மருந்துகளும் இலவசமாக அளித்து வருகிறார். நோயாளிகளின் நிலைமை மோசமாக இருக்கும்பட்சத்தில் அவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் பரிந்துரைத்து அனுப்பி வைக்கிறார்.
இவரது இந்த மனித நேயத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக நடைபாதை வாசிகளிடமும், உடல் ஊனமுற்றோரிடமும் இவர் சகஜமாக உரையாடி அவர்களின் மனக்குறைகளையும் கேட்டறிகிறார். அதே சமயம், நல்ல உடல்நிலையில் இருந்து பிச்சை எடுப்பவர்களை உழைத்து வாழும்படி அறிவுறுத்தியும் வருகிறார்.
மருத்துவ தொழில் வியாபாரம் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் டாக்டர்களை மதிக்கக்கூடிய சகல தகுதிகளுடன் ரோல் மாடலாக திகழ்கிறார் அபிஜித் சோனாவானே.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top