அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு
உரிமை கோருகிறது சீனா


அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனா பெற்றுள்ளது.
இந்தநிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா இப்போது உரிமை கோரி வருகிறது.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக நிலப்பரப்பில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு, துறைமுகத்துக்கு வெளியே செயற்கைத் தீவு ஒன்று அமைக்கப்பட்டது.
50 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட இந்த தீவு 110 ஹெக்ரெயர் பரப்பளவைக் கொண்டது. இதனை சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இந்தநிலையிலேயே, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டுக்குள், இந்த தீவும் அடங்கியிருப்பதாகவும், அதனைத் தம்மிடம் ஒப்படைக்குமாறும் சீனா வலியுறுத்தி வருகிறது.
அத்துடன், தீவைத் தம்மிடம் கையளிக்கும் வரை, அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான அடுத்தகட்ட தவணைக் கொடுப்பனவை வழங்க முடியாது என்றும் அடம்பிடித்து வருகிறது.
சீனாவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இந்த தீவை ஒப்படைப்பதாயின் தென் மாகாணசபையின் ஒப்புதலை அரசாங்கம் பெற வேண்டும்.
ஆனால் தென் மாகாணசபை இதனை கடுமையாக எதிர்த்து வருவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top