இலங்கைக்கான அமெரிக்காவின்
புதிய தூதுவர் அலய்னா பி ரெப்ளிட்ஸ்



வெளிவிவகாரச் சேவையின் மூத்த உறுப்பினரான அலய்னா பி ரெப்ளிட்ஸ், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு, பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.
கொலராடோவைச் சேர்ந்த அலய்னா பி ரெப்ளிட்ஸ், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இவர் தற்போது நேபாளத்தில் அமெரிக்க தூதுவராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது நியமனம், செனட் சபையின் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டுளள்ளது.
இந்த நியமனத்தை, அமெரிக்க செனட் உறுதிப்படுத்தினால், அதுல் கெசாப்புக்குப் பதிலாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவராகப் பதவியேற்பார்.
அலய்னா பி ரெப்ளிட்ஸ் 1991ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இணைந்து கொண்டவர். இவர் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில், வெளிவிவகாரச் சேவை பாடசாலையில், வெளிவிவகாரச் சேவையில் விஞ்ஞானமாணி பட்டத்தை பெற்றவர்.
முன்னதாக இவர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், கொள்கை, முகாமைத்துவத்துக்கான பணியகப் பணிப்பாளராக, 2012-2015 காலத்தில், உதவிச் செயலாள்ர் நிலையில் பணியாற்றியிருந்தார்.
அதற்கு முன்னர், 2011-2012 காலப்பகுதியில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் முகாமைத்துவத்துக்கான மினிஸ்டர் கவுன்சிலராகவும், 2009-2011 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை உள்ளடக்கிய, தூரகிழக்கு மற்றும் தெற்கு மத்திய ஆசிய பிரிவின் இணை நிறைவேற்றுப் பணியகத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், பணியாற்றியிருந்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top