பிரிவினைவாத அரசியலில் சிக்கி மன்சூரை கைவிட்டது
எவ்வளவு பெரிய மகாமடத்தனம் என்பதைப் புரிந்து கொள்ள
கல்முனைப் பிரதேச மக்களுக்கு கிட்டத்தட்ட
கால் நூற்றாண்டுகள் சென்றன.

ஏ.ஆர். மன்சூர் அவர்களின் 85ஆவது பிறந்த தினம் இன்றாகும்.


முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் மர்ஹும் அல்ஹாஜ் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்களின் 85ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
கல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி .ஆர். மன்சூர் அவர்கள் 1977 தொடக்கம் 1994ம் ஆண்டு வரையிலான 17 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு  மாவட்ட அமைச்சராகவும், வர்த்தக, வாணிபம் மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும் பணியாற்றி அரசியலிருந்து  கெளரவமாக ஓய்வு  பெற்றவர். பின்னர் சில ஆண்டுகள் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவராகவும் பணியாற்றினார். அன்னாரின் பிறந்த தினம் மே மாதம் 30 ஆம் திகதி இன்றாகும்.
எக்கின் தம்பி ஆலிம் அப்துல் றஸ்ஸாக் அவர்களுக்கும், மும்மது அப்துல் காதர் சரிபா உம்மா அவர்களுக்கும்  ஆறாவது குழந்தையாக 1933.5.30ம் திகதி பிறந்தவர் முன்னாள் அமைச்சர் .ஆர். மன்சூர் அவர்கள்.
கல்முனைக்குடி அரசினர் தமிழ் ஆண்கள் பாடசாலை (தற்போது அல்-அஸ்ஹர்) தனது ஆரம்பக் கல்வியை கற்கத் தொடங்கினார்.
1943ம் ஆண்டு 5ம் ஆண்டு அரசாங்க புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று மேலதிக கல்வியை காத்தான்குடி முஸ்லிம் கல்லூரியில் 1944ம் ஆண்டு தொடர்ந்தார்.
1945ம் ஆண்டு காலப்பகுதியில் ஆங்கில பாடசாலையாக அறிமுகமான கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இணைந்து ஆங்கிலக் கல்வியை கற்கத் தொடங்கினார்.
1947ம் ஆண்டு மட்டுநகர் சிவானந்தா வித்தியாலயத்தில் இணைந்து கொண்டார். 1948 தொடக்கம் 1952 வரையான காலப்பகுதியில் திரு. ராஜகாரியர் அதிபராக இருந்த மட்டுநகர் அரசினர் கல்லூரியில் இணைந்தார். அக்காலத்தில் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஆசிரியராக இருந்த புலவர்மணி . பெரியதம்பிப் பிள்ளையிடம் தமிழ் கற்றார்.
1953 தொடக்கம் 1954 வரையாக காலப்பகுதியில் உயர்கல்விக்காக கொழும்பு சேன் ஜோசப் கல்லூரியில் சேர்ந்து உயர்தர தராதரப்பத்திர பரீட்சையில் சித்தியடைந்தார்.
1955 தொடக்கம் 1958 வரை காலப்பகுதியில் கொழும்பு சட்டக்கல்லூரியில் இணைந்து கற்றார். இக்காலப்பகுதியில் கட்டக் கல்லூரியின் தூதுக்குழுக்களில் பங்கு பற்றி பாக்கிஸ்தான் நாடு சென்றார்.
1958 காலப்பகுதியில் சட்டக்கல்லூரியில் சித்திபெற்று உயர்நீதிமன்ற  அப்புக்காத்தாக (சட்டத்தரணியாக) சத்தியபிரமானம் செய்து கொண்டார்.
1958 முதல் 1961 வரை பிரபல சட்டத்தரணியான திரு. ஜி.ஜி. பொன்னம்பலம் QC , ஜனாப் இஸ்ஸதீன் மொஹமட் QC, ஜனாப் .சீ.எம். அமீர் QC, முன்னாள் பிரதம நீதியரசர் என்.டீ.என். சமரகோன் ஆகியோருடன் கனிஷ்ட சட்டத்தரணியாக தொழில் புரிந்து வந்தார்.
1958 கல்முனைத் தேர்தல் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும், வன்னிமையுமான கேற் முதலியார் எம்.எஸ். காரியப்பர் அவர்களின் மூன்றாவது புதல்வியான ஸொஹறா காரியப்பரை திருமணம் செய்து இல்லறத்தில் இணைந்து கொண்டார்.
தனது மாமனாரான கேற்முதலியார் எம்.எஸ். காரியப்பர் அரசியலிலிருந்து ஓய்வு  பெற்ற பின்னர் இவர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கல்முனை பட்டின சபை தேர்தலில் முதல்முதலாக போட்டியிட்டார்.
முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கா அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 1970ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு 955 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
மீண்டும் 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு 5547 அதிகப்படியான வாக்குகளினால் வெற்றி பெற்றார்.
 பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குக் குழு உயர் பதவி அபேட்சகராகவும், நெடுஞ்சாலைகள் ஆலோசனைக்குழு, போக்குவரத்துச் சபை ஆலோசனைக்குழு, கைத்தொழில் விஞ்ஞான அலுவல்கள் ஆலோசனைக்குழு, கல்வி ஆலோசனைக்குழு, பிரதேச அபிவிருத்தி ஆலோசனைக்குழு ஆகிய குழுக்களுக்கு தெரிவு  செய்யப்பட்டதோடு மட்டுமல்லாது பேராதனைப் பல்கலைக்கழக  செனட் சபை அங்கத்தவராகவும் நியமனம் பெற்றார்.
இதே காலகட்டத்தில் ஈராக், குவைத், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இலங்கைத் தூதுக் குழுவில் இடம்பெற்று நல்லெண்ண விஜயங்களை மேற்கொண்டார்.
1979ம் ஆண்டு ஜே.ஆர் ஆட்சி காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டு சில மாதங்கள் அம்மாவட்ட மக்களுக்காக பல சேவைகளை பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து அதேவருடம் முல்லைத்தீவு  மாவட்ட அமைச்சராகவும் நியமனம் பெற்று தனது சேவையை மேலும் விரிவாக்கிக் கொண்டார்.
1980ம் ஆண்டு .நா. பொதுச் சபைக்கூட்டத்திற்கு இலங்கை தூதுக்குழுவில் இடம்பெற்று வாஷிங்டன், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று அங்குள்ள இராஜதந்திரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
1981ம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் அல்-ஹாஜ். எம்.எச். முஹம்மது அவர்களுடன் இணைந்து மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியா, குவைத் பஹ்றேன், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றுக்கு நல்லெண்ண விஜயங்களை மேற்கொண்டு இராதந்திரங்களை வளர்த்துக் கொண்டார்.
1981.03.27ம் திகதி கல்முனைத் தொகுதிக்கு ஒரு கலங்கரை விளக்காக கல்முனை பொது நூலகத்தை நிர்மானித்து அதனை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.ஸி.எஸ் ஹமீதை கல்முனைக்கு அழைத்து வந்து திறந்து வைத்தார்.
1982ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களின் வெற்றிக்கு அளப்பெரும் பாடுபட்டு கல்முனைத் தொகுதியில் 18372 வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தார்.
பொதுத் தேர்தலுக்குப் பதிலாக 1982ம் ஆண்டு தேசிய பொது வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடித்து அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் இவர் தெரிவு  செய்யப்பட்டார்.
1987 சர்வதேச பாராளுமன்ற சம்மேளனக் கூட்டம் ஆஜன்ரீனாவில் நடைபெற்றபொழுது முன்னாள் சபாநாயகர் .எல். சேனாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் அனுர பண்டார நாயக்க ஆகியோருடன் இணைந்து பங்கெடுத்துக் கொண்டார்.
அதேபோல் மலேசியாவில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முன்னாள் இந்து சமய தமிழ் மொழியாக்கல் அமைச்சர் செல்லையா இராசதுரையயுடன் இணைந்து கலந்து கொண்டார்.
இதே காலப்பகுதியில் ஈரான் மற்றும் ஈராக் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பக்தாத் நகரில் கூட்டப்பட்ட சர்வதேச மாநாட்டிற்கு இலங்கை தூதுக்குழுவின் சார்பில் முக்கிய பிரமுகராக பங்காற்றினார்.
1988இல் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாசா அவர்களின்  வெற்றிக்கு அயராது பாடுபட்டு கல்முனைத் தொகுதியிலிருந்து 18746 வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தார். இதேவருடம் பாங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச பாராளுமன்றக் கூட்டத்தில் பங்குகொண்டார்.
1989ம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், வர்த்தகம், கப்பல்துறை அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதனூடாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர் என்ற பெருமையை இவர் பெற்றுக் கொண்டார்.
அதேகாலகட்டத்தில் பாக்கிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கொண்டு இலங்கை - பாக்கிஸ்தானுக்கிடையிலான உறவை மேம்படுத்தினார். அத்தோடு துருக்கி வர்த்தக அமைச்சரின் விஷேட அழைப்பின் பேரில் அந்நாட்டில் நடந்த சர்வதேச கண்காட்சியில் கலந்து கொண்டார்.
1990ம் ஆண்டு வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக நியமனம் பெற்று அப்போதைய பிரதமருடன் இணைந்து ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் விசேட தூதுவராக ஈரான் நாட்டிற்கு விஜயம் செய்தார். தொடர்ந்து முன்னாள் தோட்டத் துறை அமைச்சர் நிரஞ்சன் விஜயரட்ணவுடன் இணைந்து ஈரான் மற்றும் லிபியா நாடுகளுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.
1991இல் லிபியாவில் நடைபெற்ற மனிதனால் உருவாக்கப்பட்ட மாபெரும் ஆற்றுத்திட்ட நிறைவு  விழாவில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். அதேவருடம் கொலம்பியாவில் நடைபெற்ற அங்ராட் மாநாட்டிற்கு இலங்கையின் வர்த்த அமைச்சர் என்ற வகையில் இலங்கைக் கான குழுவினை தனது தலைமையின் கீழ் கொண்டு சென்றார்.
1992 திருப்பதியில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸின் 79வது மாநாட்டிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலான முன்னாள் அமைச்சர் போல்பெரேரா மற்றும் கொழும்பு பிரதி முதல்வர் கணேசலிங்கம் ஆகியோர் உள்ளடங்கிய தூதுக் குழுவிற்கு தலைமைதாங்கிச் சென்றார்.
2002ம் ஆண்டு குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு அளப்பரிய சேவை புரிந்தார்.
மர்ஹும் .ஆர். மன்சூர் அவர்களை தென்கிழக்கு பல்கலைக்கழகம் கடந்த 2016.03.20ம் திகதி ஞாயிற்குக் கிழமை கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது.
கல்முனைப் பிரதேசத்தில் இவரது நிலையான அபிவிருத்திகளில் கல்முனை பொது நூலகம் அமைத்தமை மற்றும் சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை நூலக அபிவிருத்திகள் பாடசாலைகளுக்காக பௌதீக வளங்கள், கல்முனை பொதுச்சந்தை, கல்முனை நீதிமன்றக் கட்டிடத் தொகுதி, பல கோணங்களில் சிதறிக் காணப்பட்ட நிருவாகங்களை ஒன்றிணைக்கும் வகையில் கல்முனை அரச செயலகக் கட்டிடத் தொகுதி,,
கல்முனை நீர்  வழங்கல் திட்டம், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்மானம் மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அபிவிருத்தி, கல்முனை தொலைத் தொடர்ப்பு பரிவர்த்தன நிலையம், இலங்கை மின்சார சபை பொறியியலாளர் காரியாலயம், , வீடமைப்புத் திட்டங்கள் போன்ற பல அபிவிருத்திப் பணிகள் இன்றும் காலத்தால் அழியாதவைகளாக காணப்படுகின்றன.
இது மாத்திரமல்லாமல் அன்னாரால் கல்முனைப் பிரதேசத்தில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம், தமிழ் இளைஞர்,யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கியமையைக் குறிப்பிட்டுக் கூற முடியும்
தற்போதுள்ள அரசியல்வாதிகளைப் போல் அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ள குறுக்கு வழிகளை செயற்படுத்த விரும்பாத மிகவும் நேர்மையான அரசியல்வாதியாக இறுதிவரையில் செயற்பட்டுவந்தவர். சமூக பொறுப்புகள் நிறைந்த, சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் உயர்ந்த சமூக குறிக்கோள்களைக் கொண்டிருந்தார். ஆயுதக் கலாசாரத்தை அறவே வெறுத்தவர்.
தன்னுடைய அரசியல் காலகட்டத்தில் இனவாத தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போதும் அதை தன் குறிக்கோளை கருக்கி விடாத வகையில் தன்னையும் முரண்பட்டுக்கொள்ள இருந்த சமூகங்களையும் தன்னால் முடிந்தளவு புரிந்துணர்கவுளை ஏற்படுத்தி காத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு செயலாற்றியவர். பிரதேசத்தில் கல்வரங்கள் எற்பட்டபோதெல்லாம் தமிழ் பிரமுகர்களையும் முஸ்லிம் பிரமுகர்களையும் ஒன்று கூட்டி தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைத்தவர்  சமாதானத்தை உண்டுபண்ணியவர்.
அன்னார்விடாமுயற்சி உடையவராகவும் உயர் இலக்குகளைஅடையும் ஆற்றல் கொண்டவராகவுமே காணப்பட்டார். மக்கள் நலன் அவர் மனதில் எப்போதும் காணப்பட்டது. ஏழைகளின் உயர்ச்சிக்காக அவர் அயராது உழைத்தவர். அவர் இதைபுகழுக்காகச் செய்யவில்லை. மாறாகசமூகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்குஉதவவேண்டும் என்றஉயரிய நோக்குடன் அர்ப்பணத்தோடுஅதில் ஈடுபட்டவர்.
அன்னாரின் கரங்கள் சுத்தமானவை ,அவரின் சாதாரண வாழ்க்கை செல்வத்தை வேண்டி நிற்கவில்லை. அவர் குறைந்தளவு வசதிகளோடு எளிமையாக வாழ்ந்தார். ஆனால் அவரி;ன் உள்ளம் எப்போதுமே பெரியதாக இருந்தது. அதுதான் அவரை எல்லோரும் விரும்பும் ஒரு நபராகவும் மாற்றியது. அவரின் எளிமையும் பண்பும் அவர் பழகிய மக்களைக் கவர்ந்தது.
எவ்வாறாயினும் தொடர்ந்து வந்த அரசியல் சந்தர்ப்பவாதம் பல பொய்களை மக்கள் மத்தியில் விற்பனை செய்து ஏமாற்று வித்தைகளைப் பரப்பி அரசியல் ரீதியாக மக்களிடம் இருந்து அவரை ஓரம் கட்டியது. பிரிவினைவாதஅரசியலில் சிக்கி மன்சூரை கைவிட்டது எவ்வளவு பெரிய மகாமடத்தனம் என்பதைப் புரிந்து கொள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு குறிப்பாக கல்முனைப் பிரதேச மக்களுக்கு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் சென்றன.
அன்னாரின் சேவைகள் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் உள்ளங்களில் இன்னமும் பசுமையாகஉள்ளன.
அன்னார் வர்த்தக வாணிபதுறை அமைச்சராக இருந்த போது அவரைச் ச ந்திக்கச் சென்ற ஒரு கோடீஸ்வர வர்த்தகக் குழுவில் ஒருவர் அவருக்கு இலஞ்சம் வழங்கும் வகையில் பேசிய போது தனது ஆசனத்தில் இருந்து எழுந்து நின்ற மன்சூர் நான் அமைச்சராக இருக்கும் வரையில் இனி நீங்கள் இங்கு வரக் கூடாது என்று சொல்லி அவரை அங்கிருந்து வெளியேறும் படி கூறினார்.
ஊழலிலும் இலஞ்சத்திலும் சிக்கித் தவிக்கும் இன்றைய அரசியல் வாதிகளிடமிருந்தும் மிகவும் தூரமான ஒரு விடயமாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
சேவைகள் செய்யக் கூடிய சிறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடைசித் தலைமுறையைச் சேர்ந்த அன்னார் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி எம்மை விட்டுப் பிரிந்தார்.
அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவனவாழ்வு கிட்டவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக.
ஏ.எல்.ஜுனைதீன்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top