பிரபாகரனின் இளைய மகன்
பாலச்சந்திரனும், இசைப்பிரியாவும்
அப்பாவிகள் அல்ல ஆயுதப் போராளிகள் தான்
மஹிந்த ராஜபக்ஸ உறுதிபடத் தெரிவிப்பு.



விடுதலைப் புலிகளின் தலைவர்  வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்
பெங்களூருவில் செய்தியாளர்கள் பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா படுகொலைகள் தொடர்பாக  எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே, அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பாலச்சந்திரன் சிறுவன் அல்ல. அவர் ஒரு போராளி. அவருக்கு 5 மெய்ப்பாதுகாவலர்களைப் பிரபாகரன் வழங்கியிருந்தார்.

இசைப்பிரியாவும் ஆயுதம் தூக்கிய ஒரு போராளி. அவருக்குப் புலிகள் அமைப் பினர் சூட்டிய பெயர்தான் இசைப்பிரியா.

இவர்கள் உள்ளிட்ட பல போராளிகளின் உயிரிழப்புகளுக்குப் புலிகளே பொறுப்புக்கூற வேண்டும். நாம் பொறுப்பல்ல.

இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பின் 12, 500 போராளிகளைப் புனர்வாழ்வு அளித்து நாம் விடுதலை செய்துள்ளோம்.

இப்படிச் செய்த எம் மீதும், போர்வீரர்களான எமது படையினர் மீதும் சில அனைத்துலக அமைப்புகளும், சில நாடுகளும் போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது நியாயமற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் புலம்பெயர் புலிகள் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்தான் நிறைவேற்றப்பட்டன.

எம்மைப் பழிதீர்க்கும் வகையில் புலிகள் ஆதரவு அமைப்புகள் தயாரித்த இந்த நிகழ்ச்சிநிரலுக்குச் சில அனைத்துலக அமைப்புகளும்,சில நாடுகளும் ஒத்துழைத்ததை நினைக்கும்போது கவலையாக உள்ளது.

இந்தத் தீர்மானங்களை வைத்து எமது படையினரை எவரும் தண்டிக்க முடியாது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top