ஒலுவில் வயல் வாடிக்கு அருகாமையில்
பஸ் ஆட்டோவுடன் மோதுண்டு விபத்து


கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று வந்த  (சுப்பர் லைன்) தனியார் சொகுசு பஸ் முச்சக்கரவண்டியுடன் மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை ஒலுவில் வயலினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் தம்பிலுவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த இராஜலிங்கம் கவீந்திரன் என்னும் 37 வயதுடைய குடும்பஸ்தரரே உயிரிழந்துள்ளார்.

இவர், மீன் வியாபாரம் நிமித்தம் மீன்களைக் கொள்வனவு செய்வதற்காக, தனது இல்லத்திலிருந்து அதிகாலை 4.30 மணியளவில் மாளிகைக்காடு நோக்கிப் புறப்பட்டாரென, உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின்போது, வயற் காணிக்குள் மேற்படி வாகனங்கள் இரண்டும் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன எனவும் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பிரதான வீதியிலிருந்து சுமார் 100 மீற்றருக்கும் அதிகமான தூரத்துக்கு ஓட்டோவை இழுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


பஸ்ஸில் பயணித்தோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற குறித்த பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

அதிக வேகமும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையுமே விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top