சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய
33 தொழிலாளர்களும் பலி
சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு கசிந்து தீப்பிடித்த
விபத்தில் சிக்கிய 33 தொழிலாளர்களும் பலியானதாக தெரியவந்துள்ளது.
தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தினுள் கடந்த திங்கட்கிழமை 35 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இதனால் தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்தின் வாசலுக்கு மிக அருகாமையில் இருந்த 2 பேர் மட்டும் உடனடியாக வெளியேறிவிட்டனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து நிகழ்ந்த நாளன்று, 15 தொழிலாளர்கள் உயிரிழந்ததை அரசு ஊடகம் உறுதி செய்தது.
காணாமல்போன மேலும் 18 தொழிலாளர்களை தேடி கண்டுபிடித்து, மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அவர்கள் 18 பேரின் உடல்களும் இன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானதால் இந்த சுரங்க விபத்தின் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சீனாவில், இதுபோன்ற சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. முன்னதாக, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 பேரும், மார்ச் மாதம் 19 பேரும் சுரங்க விபத்துகளில் சிக்கி பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
.
0 comments:
Post a Comment