நல்ல பிரஜைகளை சமூகத்திற்கு வழங்க உள்ள
சிறந்த நிறுவனமே பாடசாலையாகும்
அதிபர் எம்.ரீ.எம். உஸ்மான்
(எஸ்.அஷ்ரப்கான்)
நல்ல பிரஜைகளை சமூகத்திற்கு வழங்க உள்ள சிறந்த நிறுவனமே பாடசாலையாகும். நல்ல பண்புகளைக் கொண்ட சிறந்த மாணவ சமூகத்தை உருவாக்கும் பொறுப்பையும் பாடசாலைகள் கொண்டிருக்கின்றன என்று உளஹிட்டிவள அல்- மஹ்மூத் வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். உஸ்மான் குறிப்பிட்டார்.
பாடசாலையில் கடந்த வருடம் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட சாதாரண தர மாணவர்களின்; ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.தௌசீர் மற்றும் கல்வியியலாளர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்ட இவ்விழாவில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பாடசாலைக்கு பௌதிக வளம் முக்கியமானதுதான். அடைவிடவும் முக்கியமானது அப்பாடசாலையின் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பும் பாடசாலைச் சமூகத்திற்கிடையிலான பொறுப்புமிக்க செயற்பாடுகளும். கல்வியானது கட்டிடங்களில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. கட்டிடங்கள் இல்லாமலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறலாம். எமது பாடசாலையை பொறுத்தளவில் அவ்வாறான பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டாலும் ஆசிரியர்களின் அயராத முயற்சியினால் இன்று கல்வியில் குருகிய காலத்தில் பல்வேறு முன்னோக்கிய அடைவுகளை பெற்றுவருகின்றமையால் நான் அதிபர் என்ற வகையில் எமது ஆசிரியர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. கல்விக்கு மதிப்பளித்து ஆசிரியத்துவத்திற்கான கௌரவத்தினையும் பாதுகாத்து கல்வி போதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பணி மேலும் சிறக்க பிரார்த்திப்பதோடு பெற்றோர்களும் எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் மேலும் பங்காற்ற முனைய வேண்டும்.
ஆசிரிய சமமின்மையால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. பாடசாலைகளில் ஆசிரிய சமப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு ஒரு பொதுவான கொள்கை பின்பற்ற வேண்டிய தேவையுள்ளது.
பாடசாலைகளின் முன்னேற்றத்திலும் மாணவர்களின் வாழ்க்கைப் பண்புகளிலும் கல்வி வளர்ச்சியிலும் ஆசிரியர்களின் வகிபங்கு இன்றியமையாதது. அது தவிர, பாடசாலை நிர்வாகத்தின் முழு முயற்சியினூடான செயற்பாடும் அவசியமாகும். அப்போதுதான் அப்பாடசாலையை தரமுள்ள பாடசாலையாக மாற்ற முடியும்.
சிறந்த பாடசாலைகளினூடாகவே சிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் சிறந்த பாடசாலைகளாக நமது பாடசாலை மிளிர வேண்டுமாயின் ஆசிரியர்கள் உட்பட பாடசாலைச் சமூகம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென வேண்டுகின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment