ராமேசுவரம் அருகே கட்டப்படவுள்ள அப்துல்கலாம்
மணிமண்டப மாதிரி புகைப்படம் வெளியீடு

ராமேசுவரம் அருகே கட்டப்படவுள்ள அப்துல்கலாம் மணிமண்டபம் கட்டிடத்தின் மாதிரி புகைப்படத்தை இந்திய மத்திய அரசின் பாதுகாப்புதுறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு அப்துல்கலாம் பெயரில் மணிமண்டபம், அறிவுசார் மையம் கட்டுவதற்காக கடந்த ஜூலை மாதம் 27-ந் திகதி மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
அப்துல்கலாமின் முழு உருவ சிலையும் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து இங்கு கடந்த மாதம் 15-ந் திகதி மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் மூலம் ரூ.18 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளை அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமதுமுத்துமீரான்லெப்பை மரைக்காயர் செய்து தொடங்கிவைத்தார்.
இதையடுத்து மணிமண்டபம் கட்டுவதற்காக அஸ்திவாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் கட்டிட பணிகள் தொடங்க உள்ளன.
இந்தநிலையில் அப்துல்கலாம் நினைவிடத்தில் கட்டப்பட உள்ள மணிமண்டபத்தின் மாதிரி புகைப்படத்தை இந்திய மத்திய அரசின் பாதுகாப்புதுறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதை அவருடைய மூத்த சகோதரர் மற்றும் பேரன் ஷேக் சலீம் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் அதிகாரிகள் காண்பித்தனர். மணிமண்டபத்தின் முழுத்தோற்றத்தை படத்தில் பார்த்து வியந்த அப்துல்கலாம் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.


இதுகுறித்து அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம் கூறியிருப்பதாவது:-

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் அவருடைய நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மணிமண்டபம் மாதிரி புகைப்படத்தை பார்த்தபோது மணிமண்டப கட்டிடம் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது தெரியவந்தது. மிகவும் அழகாகவும், வித்தியாசமான வடிவமைப்பில் மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ள மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அப்துல்கலாமின் குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top