மாயக்கல்லி மலையடிவாரத்தில்
நிரந்தர மடாலயம் அமைக்கத் திட்டம்
பிரதேச மக்கள் அச்சம்
இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பௌத்த மத வழிபாடுகள் நடைபெறுவதுடன், நிரந்தர மடாலயம் அமைப்பதற்கான முன்னெடுப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இறக்காமம், மாணிக்கமடு வாழ் முஸ்லிம், தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தேரர்களுடன் பெரும்பான்மையின மக்களும் அங்கு வந்து செல்கின்றமை தங்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு அருகில் கடந்த14 ஆம் திகதி திங்கள்கிழமை மாலை புனித போயா நோன்மதித் தின நிகழ்வு முதன்முறையாக அம்பாறை வித்தியானந்த பிரிவனாதிபதி கிரிந்திவெல சோமரத்தின தேரர் தலைமையிலான தேரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அன்றையதினம் மாலை மாயக்கல்லி மலையெங்கும் எண்ணைய் விளக்குகள் ஏற்பட்டு தியான நிகழ்வு நடைபெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.
இதற்காக பஸ் வண்டிகள், வான்கள் மற்றும் கென்டர் ரக வாகனங்களில் பிக்குகள், பௌத்த தர்ம பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் ஏற்றிவரப்பட்டதாக அப்பிரதேச மக்கள் கூறியுள்ளனர். மலையடிவாரத்தில் மடாலயம் அமைப்பதற்கான காணி வழங்குமாறு இறக்காமம் பிரதேச செயலாளரிடம் அண்மையில் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைப்பு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment