கல்முனைப் பிரதேசத்தில் அடிக்கல் விழாக்களை நடத்தி
காலம் கடத்தும் அரசியல்வாதிகள்!

திறப்பு விழாக்களைக் காணோம்! என மக்கள் தெரிவிப்பு

கல்முனைப் பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் தற்போதய அதிகாரமிக்க  அரசியல்வாதிகள் எவரும் செய்வதாக இல்லை என இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அபிவிருத்தி என்ற  பேரில் அடிக்கல் நடும் விழாக்கள், அங்குரார்ப்பன நிகழ்வுகள் என்பன மிகக் கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவே தவிர திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படுவதாக இல்லை எனவும் கூறுகின்றனர்.

அடிக்கல் நடும் விழாக்கள், அங்குரார்ப்பன வைபவங்கள் என்பனவற்றிற்கு கல்முனையிலிருந்து சாய்ந்தமருது வரை மற்றும் மருதமுனை பிரதான பாதைகள் பல்லாயிரக்கணக்கான ரூபா செலவிடப்பட்டு பச்சை,மஞ்சல் நிறப் பொலித்தீன்களாலும்  பல நிற பல்புகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன.

இறுதியில் பொது மேடை ஒன்று போடப்பட்டு கட்சியிலுள்ள முக்கியஸ்த்தர்கள் தொடக்கம் தலைவர் வரை நள்ளிரவையும் தாண்டி தமது பக்க நியாயங்களையும் தாங்கள் பொறுமை காத்திருப்பதையும் நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் சரியான நேரத்தில் சரியான முடிவையும் எடுப்போம் எனவும் கூறுகின்றனர்.

கூட்ட ஆரம்பத்தில் காக்கா வெண்டி, காக்கா வெண்டி என்ற பாடல்கள் கம்பிரமாகப் பாடப்படுகின்றது, கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இசை முரசு .எம் ஹனிபாவின் பாடல்களும் இடையிடையே இசைக்க வைக்கப்பட்டு மக்களுக்கு தமது கருத்துக்களைக் கூறிவிட்டுச் சென்று விடுகின்றனர். கூட்டம் ஒன்றை நடாத்துவதற்காகவே அடிக்கடி ஏதாவது ஒன்றுக்கு அடிக்கல் நடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெரு விழாக்கள் ஏற்பாடுகள் செய்து அடிக்கல் நட்ட வேலைத் திட்டங்கள், அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து இப்பிரதேசத்தில் இடம்பெறுகின்றது. ஆனால், அவைகள் சரியாகப் பூர்த்தியாக்கப்பட்டு மக்களுக்காகக் கையளிக்கப்படுகின்றதா என்பதுதான் கேள்விக் குறி என்று இங்குள்ள மக்களால் கூறப்படுகின்றது.

திறப்பு விழாக்களைக் காணோம்!

கல்முனையில் அடிக்கல் நடுவதற்கும் அங்குரார்ப்பனம் செய்து வைப்பதற்கும் அதிக எண்ணிக்கையான விழாக்கள் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால், திட்டங்கள் நிறைவேறி திறப்பு விழாக்கள் நடைபெறுவது என்பது அரிதிலும் அரிதாக இருப்பதாகவும் இங்குள்ள மக்களால் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனையிலுள்ள தற்போதய அரசியல்வாதிகள் அடிக்கல் நடுவதில்தான் துரிதம் காட்டி அக்கறையுடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக எதிர்வரும் 14 ஆம் திகதி அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வுகளும்  பொதுக்கூட்டமும் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மருதமுனை பொது நூலகத்தில் கோட்போர்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நடுதல்.
*பெரியநீலவணையில் சனசமூக சிகிச்சை மையம் அமைப்பதற்கான அடிக்கல் நடுதல்.
*நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல்.
*சேனைக்குடியிருப்பில் சனசமூக சிகிச்சை மையம் அமைப்பதற்கான அடிக்கல் நடுதல்.
*இஸ்லாமாபாத்தில் சனசமூக சிகிச்சை மையம் அமைப்பதற்கான அடிக்கல் நடுதல்.
*கல்முனை பொதுச் சந்தையினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல்.
*கல்முனை பொது நூலகத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல்.
*கல்முனை கடற்கரையில் மீன் சந்தை அமைப்பதற்கான அடிக்கல் நடுதல்.
*கல்முனை இறைவெளிக்கண்டம்(கிறீன்பீல்ட்) பிரதேச காணிகளில் மண் நிறப்பும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல்.
*சாய்ந்தமருது வொலிவோரியன் பிரதேச காணிகளில் மண் நிறப்பும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல்.
*சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நடுதல்.
*சாய்ந்தமருது அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தின் சுற்றுமதில் அமைக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தல்.
#குறிப்பு பிற்பகல் 6.00 மணிக்கு சாய்ந்தமருது பெளஸி மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெறும்.
இங்கு திறப்பு விழாக்கள் எதுவும் இல்லை என்று மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.  





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top