ஜும்ஆப் பள்ளிவாசலின் வேண்டுகோளுக்கிணங்க
சிகரட் விற்பனை செய்வதை நிறுத்திய
சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தகர்கள்

(சாய்ந்தமருது- - எம்.எஸ்.எம். ஸாகிர்)


சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் சிகரட் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க செவிசாய்த்துள்ள பிரதேச வர்த்தகர்கள், நேற்று முன்தினம் (08) முதல் தங்கள் கடைகளின் மூலம் சிகரட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளனர்.
சாய்ந்தமருது  மற்றும்  மாளிகைக்காடு பிரதேச நிர்வாகத்தின் ஆளுகைக்குட்பட்ட கடைகளில் சிகரட் விற்பனையை நிறுத்தி மேலும் போதைவஸ்து, மதுபாவனையை நிறுத்தி இஸ்லாத்திற்கு மதிப்பளிக்குமாறு விடுத்த வேண்டுகோளை விற்பனை வர்த்தகர்கள் ஏற்றுள்ளதாக சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிகரட் புகைப்பது மட்டுமல்ல, போதை வஸ்து, மதுபானம் பாவிப்பது இஸ்லாத்திற்கு விரோதமானது. இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால் சமூகத்திற்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன, இதைவிட அவர்களது குடும்பங்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர்.
எனவேதான், நாம் பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் இணைந்து சமூக நன்மைக்காக எமது கடை உரிமையாளர்களிடம் இவற்றின் விற்பனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுவதென்றொரு தீர்மானம் எடுத்து, அவர்களிடம் தெரிவித்தோம், அதற்கான ஒரு துண்டுப்பிரசுரமொன்றையும் வெளியிட்டோம்.
உண்மையில் விற்பனை செய்பவர்களிடமிருந்து சாதகமான பதில் வந்ததுடன் விற்பனையையும் நிறுத்தியுள்ளனர், எனவே அவர்களுக்கு முதலில் நாம் எமது பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இல்லத்தரசிகள் முதல் பொதுமக்கள் வரை சந்தோசமடைகின்றனர்.

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் மேற்கொண்ட முற்போக்கு சிந்தனையுள்ள இத்தீர்மானத்திற்கு பொதுமக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதுடன் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top