சிமி விசாரணைக் கைதிகளை சுட்டு வீழ்த்திய 'என்கவுன்ட்டர்':

நீதிப்போராட்டத்துக்குத் தயாராகும் உறவுகள்



'சிமி' விசாரணைக் கைதிகள் 8 பேர் போபால் மத்திய சிறையிலிருந்து தப்பித்தது முதல் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் புறநகர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது வரையில் நடந்தது நடந்தபடி. வன்முறையில் தொடங்கி வன்முறையுடன் முடிந்த ஒரு கதை.

அக்டோபர் 31, காலை 11 மணிக்கு நிகழ்த்தப்பட்ட 'என்கவுன்ட்டர்'

போபாலின் புறநகர் பகுதியில் இருக்கிறது அசார்புரா கிராமம். அங்கு ஒரு கட்டுமான பணியிடத்தின் ஒற்றைக் காவலாளி ராம் குமார் சோனி. ஒற்றையாளாக காவல் காப்பது என்பதால் ராம் குமாரின் பணி சற்றே சலிப்பூட்டுவதுதான். என்றாலும், கட்டிடத் தொழிலாளர்களுடனான சிறு உரையாடல்கள், கட்டிடத்துக்குள் புகுந்துவிடும் மான்களையும், முயல்களையும் துரத்துவது என்று அவ்வப்போது பணி தோய்விலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனால், அன்றைய தினம் நடந்த சம்பவம் ஒட்டுமொத்தமாக ஓராண்டுக்கான நிகழ்ச்சி அனுபவத்தை அவருக்கு கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

அக்டோபர் 31, காலை 7 மணி. என்றைக்கும் இல்லாமல் அன்றுமட்டும் அத்தனை போலீஸார் அப்பகுதிக்கு வந்தபோதே ராம் குமாருக்கு பிரச்சினை ஏதோ இருக்கிறது என்பதுமட்டும் புரிந்துவிட்டது. அவர் எதிர்பார்த்தபடியே போலீஸார் சில கேள்விகளை முன்வைத்துள்ளனர். "போபால் மத்திய சிறையிலிருந்து நேற்றிரவு 'சிமி' செயற்பாட்டாளர்கள் 8 பேர் தப்பிவிட்டனர். சந்தேகத்துக்கிடமான வகையில் யாராவது சுற்றித் திரிந்தால் தகவல் சொல்லவும்" என்று கூறிச் சென்றனர். 8 என்ற எண்ணிக்கை தவிர அப்போதைக்கு ராம் குமாருக்கு ஏதும் புரியவில்லை,

போலீஸார் வந்துபோனதையும் விசாரித்ததையும் தற்காலிகமாக மறந்து போயிருந்தார். அப்போதுதான் கிராமத்தார் சிலர் அருகிலிருக்கும் மலைப் பகுதியில் சிலர் சுற்றித் திரிவதாக பரபரப்பாக பேசிக் கொண்டனர். போலீஸார் சொன்ன '8 பேர்' நினைவுக்கு வர மோட்டார் சைக்கிளில் ஏறி விரைந்திருக்கிறார் ராம் குமார். தொலைபேசி இயங்கும் நிலையில் இல்லாததால் மோட்டார் சைக்கிளில் விரைந்த அவர் வழியில் போலீஸாரை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வாகனத்தை செலுத்த, அவர் நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் போலீஸாரை கண்டார். "போலீஸிடம் தகவல் சொல்ல நீண்ட தூரம் பயணிக்கும் அவசியமில்லாமல் போனதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார் ராம் குமார்.

தேடிவந்த 'சிமி' செயற்பாட்டாளர்கள் மலைப் பகுதியில்தான் பதுங்கியிருக்கிறார்கள் என்பது உறுதியான நிலையில் அப்பகுதியைச் சுற்றி வளைக்க அவர்களுக்கு உள்ளூர்வாசியின் உதவி தேவைப்பட்டது. ராம்குமார் சோனியை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதுமே மலையில் ஒரு பாறையின் மீது 8 பேரும் நின்றிருப்பதை போலீஸார் கவனித்துவிட்டனர்.

மோகன் சிங் மீனாவும், சூரஜ் சிங் மீனாவும் இருவரும் என்கவுன்ட்டர் நடத்தப்பட்ட பகுதியிலிருந்து வெறும் 2 கி.மீ. தூரத்தில் உள்ள கேஜ்ரா தேவ் கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். சிமி ஆட்களை முதலில் நாங்கள்தான் பார்த்தோம். நாங்களே போலீஸுக்கு முதல் தகவலும் கொடுத்தோம் என அவர்கள் கூறுகின்றனர். அன்றைய தினம் காலை 6 மணிக்கெல்லாம் வாட்ஸ் அப்பில் தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும். அதனையடுத்து ஊர் மக்களிடம் அந்த வாட்ஸ் அப் தகவலை பகிர்ந்து சந்தேகத்துக்கு இடமாக யாராவது நடமாடுவதைப் பார்த்தால் தகவல் அளிக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறுகிறார்.

ஊராருக்கு தகவல் பகிர்ந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் இருவரும் புறப்பட்டுள்ளனர். அப்புறம் நடந்தது குறித்து சூரஜ் கூறும்போது, "சிறிது தூரம் சென்றிருப்போம். மணி 8.30 ஆகியிருந்தது. இரண்டு பேர் அங்கிருந்த நீரோடையில் முகம் கழுவிக் கொண்டிந்தனர். அவர்கள் இருவரும் புரியாத மொழியில் பேசியது எங்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது. சில நிமிடங்களில் அந்த இடத்துக்கு மேலும் 6 பேர் வந்தனர். அப்போதுதான் நாங்கள் அந்த 6 பேரும் தப்பியோடிய கைதிகளாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம்" என்றார்.

அவர் மேலும் கூறும்போது, "சந்தேகம் வலுப்பெறவே நாங்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தோம். சில நிமிடங்களில் உள்ளூர்வாசிகள் அதிகளவில் திரண்டனர். போலீஸாருடன் நாங்கள் அனைவரும் அவர்களை பின் தொடர்ந்தோம். சற்றே பாதுகாப்பான இடைவெளியில் அவர்களைப் பிந்தொடர்ந்தோம். அவர்கள் எங்களை நோக்கி வசைபாட ஆரம்பித்தனர். ஊர் எல்லையிலிருந்த மலையை நோக்கி முன்னேறிச் சென்றனர்" என்றார்.

ஆனால், 60 அடி உயரம் செங்குத்தான குன்றின் மீது 8 பேர் எப்படி ஏறினார்கள் என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது. அதுவும் ஊரார், போலீஸார் பின் தொடர்ந்துவரும்போது அவர்கள் எப்படி குன்றின் மேல் சென்றனர் என்பது கேள்விக்குறியே.

அசார்புராவைச் சேர்ந்த விவசாயி பப்பு மீனா கூறும்போது, "குன்றின் மீது அவர்கள் 8 பேரும் ஏறிக் கொண்டனர். ஆனால், அங்கிருந்து அவர்கள் வேறு திசையில் செல்ல வழியில்லாமல் போனது. காரணம் கீழே போலீஸார் துப்பாக்கியுடன் சூழ்ந்து கொண்டனர். தவிர அக்கம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் வேற திரண்டிருந்தனர். இதனால் அவர்கள் எந்த வழியிலும் தப்பிக்க முடியாமல் சிக்கியிருந்தனர்" என்றார்.

தப்பிக்க வழியில்லாமல் 8 பேரும் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததாக பப்பு கூறிய நிலையில் சூரஜ் கூறும்போது, "குன்றின் மீது நின்றிருந்த விசாரணைக் கைதிகள் எங்களை நோக்கி கற்களை வீசினர். மேலும், துப்பாக்கியால் சில முறை சுட்டனர். இதற்கு பதிலடியாக போலீஸார் வானத்தை நோக்கிச் சுட்டு எச்சரித்தனர்" என்றார்.

அங்கு என்கவுன்ட்டர் நடந்தபோது ஏராளமானோர் திரண்டிருந்தனர். ஆனால், அவர்களில் சூரஜ், மோகன் சகோதரர்களைத் தவிர யாருமே 'சிமி' விசாரணைக் கைதிகளிடம் துப்பாக்கி இருந்ததாகக் கூறவில்லை.

"போலீஸார் அடுத்தடுத்து பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதை நான் பார்த்தேன். அதே வேளையில் மற்றொரு திசையிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடந்தது. அது அந்த 8 பேர் நடத்திய தாக்குதலா அல்லது குன்றின் மற்றொரு அடிவாரத்திலிருந்த போலீஸார் நடத்திய தாக்குதலா எனத் தெரியவில்லை" என்றார் விவசாயி பப்பு. சிமி ஆட்கள் கைகளில் ஆயுதம் ஏதுமில்லை என மனிகேடி கோட் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் மீனாவும் கூறினார். கற்களை வீசி எறிந்தனர் ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. 8 பேரும் கொல்லப்பட்ட பிறகும்கூட அவர்கள் அருகில் துப்பாக்கி ஏதும் நான் பார்க்கவில்லை என்றார்.

அதே ஊரைச் சேர்ந்த ஹல்கோரி லால், "அங்கு என்னதான் நடக்கிறது என்ற ஆர்வத்தின் உந்துதலால் நான் சென்றேன். 8 பேரும் இறந்துகிடந்த இடத்துக்கு அருகே செல்வதற்குள் 11.30 மணியாகிவிட்டது. சுற்றியிருந்த மக்களெல்லாம் பாரத் மாதா கி ஜே, ஜெய் ஜவான்; ஜெய் கிசான், போலீஸ் ஜிந்தாபாத் என முழங்கிக் கொண்டிருந்தனர். அந்த முழக்கங்களை நிறுத்தும் போலீஸ் முயற்சி தோற்றுக் கொண்டிருந்ததது" என்றார்.

"அங்கு திரண்டிருந்த மக்கள் பலரது கைகளிலும் மொபைல் போன் இருந்தது. கிட்டத்தட்ட எல்லோருமே அங்கு நடந்தவற்றை மொபைலில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். போலீஸார் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களும் எத்தனை பேரைத் தான் கட்டுப்படுத்துவார்கள்" என ராம் குமார் சோனி கூறினார்.

என்கவுன்ட்டர் பரபரப்பு எல்லாம் அடங்கிய பின்னர் போலீஸார் கிராமவாசிகள் மொபைல் போன்கள் சிலவற்றை கைப்பற்றி அவற்றிலிருந்த வீடியோ பதிவை அழித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், சில வீடியோக்களும், ஆடியோ ஆதாரங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அவற்றின் அடிப்படையில் பார்த்தால் 8 பேரும் கச்சிதமாக திட்டமிட்டே கொல்லப்பட்டிருக்கின்றனர். ஓர் ஆடியோ பதிவில் 8 பேரையும் சுற்றி வளைத்து கொலை செய்யுமாறு ஒரு குரல் உத்தரவிடுவது பதிவாகியுள்ளது. கையசைத்துக் கொண்டிருந்தவர்கள் கன நேரத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஆனால், போலீஸ் தரப்பில் இறந்து கிடந்தவர்களிடமிருந்து நான்கு நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. போபால் சரக போலீஸ் .ஜி. யோகேஷ் சவுத்ரி கூறும்போது, "கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்டதில் 3 போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர்" என்றார். போலீஸாரும் - தப்பியோடியவர்களும் ஒருவரை கைகளால் தாக்கிக் கொள்ளும் தூரத்தில் இல்லை என கிராமவாசிகள் பலரும் உறுதிப்படுத்தியும் போலீஸ் தரப்பில் இவ்வாறாக கூறப்படுகிறது.

நிலைமை இவ்வாறாக இருக்க பிடிபட்டவர்களில் ஓரிருவரையாவது உயிரோடு பிடித்திருக்கலாம் என்கிறார் அசோக் சவுக்சே. அவர்கள் மூன்று பக்கம் போலீஸாரால் சூழப் பட்டிருந்தனர். மரண பிடி என்றே சொல்ல வேண்டும். குன்றின் மீது இருந்து கீழே குதித்தால் மரணம் நிச்சயம். எனவே, மரணத்தின் பிடியில் இருந்த அவர்களில் ஓரிருவரையாவது உயிருடன் போலீஸார் பிடித்திருக்க வேண்டும் என்பதே அவரது கருத்து.

மற்றொரு கிராமவாசி லலித் கூறும்போது, "போலீஸார் அந்த இடத்துக்கு முன்னரே மக்கள் கூட்டம் கூடிவிட்டது. 8 பேரை ஊர் பொதுமக்கள் சமாளிப்பது எளிதானதே. நாங்களே அவர்களைப் பிடித்து அடித்து உதைத்து போலீஸாரிடம் ஒப்படைத்திருப்போம்" என்றார்

அக்டோபர் 31, அதிகாலை 1 மணி - தப்பித்தது எப்படி?

என்கவுன்ட்டர் நடந்த இடத்துக்கும் போபால் மத்திய சிறைக்கும் 10 முதல் 12 கி.மீ. தூரமே இருக்கும். சிறையிலிருந்து தப்பும்போது காவலர் ஒருவரை கொலை செய்துவிட்டு மற்றொருவரை கட்டிபோட்டுவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. சிறைச்சாலையின் சுற்றுச்சுவரில் ஏறிக் குதித்திருந்தாலும் சம்பவம் நடந்த பகுதிக்குச் செல்ல விவசாய நிலங்களுக்குள் நடந்து சென்றிருக்க வேண்டும்.

மேலும், தப்பியோடியதாக கூறப்படும் 8 பேரும் அதிமுக்கிய குற்றவாளிகள் எனக் கருதப்படுவோர் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்தவர்கள். அந்த கட்டிடத்தில் மொத்த 21 கைதிகள் அடைபட்டிருந்தனர். ஒவ்வொருக்கும் ஒரு தனி செல். சப்பிடும்போதும், குளிக்கும், துணி துவைக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவர்கள் ஒருவர் மற்றொருவோடு பேச வாய்ப்பில்லை என்றே சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். இவையெல்லாம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

சட்டம் ஒழுங்கு .ஜி. மக்ரந்த் துஸ்கார், "சிமி விசாரணைக் கைதிகள் அனைவரையும் ஒரே பகுதியில் அடைத்தற்கும் காரணம் இருக்கிறது. பாதுகாப்பு பலமாக அமையும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை மேற்கொள்வதும் எளிதாக இருக்கும் என்பதாலேயே அவ்வாறு அடைத்தோம்" என்றார். ஆனால், அத்தனை பேருக்கும் சேர்த்து கண்காணிப்புக்கு 4 போலீஸார் மட்டுமே இருந்துள்ளனர்.

இதற்கிடையில் சிறைத்துறை .ஜி. எம்.ஆர்.பாட்டீல் சிறையிலிருந்து 8 பேரும் தப்பியது தொடர்பாக கூறுவது என்னவென்றால், "அந்த 8 பேரில் 2 அல்லது 3 பேர் தங்களது பிளாஸ்டிக் டூத் பிரஷ்சை கொண்டு தயாரித்த சாவியால் பூட்டைத் திறந்துள்ளனர். அவர்கள் செல்லில் இருந்து வெளியேறியதும் ராம்சங்கர் யாதவின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர். பின்னர் மற்றொரு காவலரை கட்டிப் போட்டுள்ளனர். பின்னர் மற்ற அறைகளுக்கான சாவிகளை பறித்துக் கொண்டு அவர்களையும் தப்பிக்கச் செய்துள்ளனர். கைதிகளுக்கென வழங்கப்படும் ஈயத் தட்டு கரண்டிகளை ஆயுதங்களாக பயன்படுத்தியுள்ளனர். அவற்றை கூர்மையாக்கி ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர்.

பின்னர் 10 அடி உயரச் சுற்றுச் சுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று கடந்துள்ளனர். அதனைக் கடந்து இருந்த 35 அடி உயர சுற்றுச் சுவரைக் கடக்க போர்வைகளையும் அருகிலிருந்த மரக் கடைகளையும் பயன்படுத்தியுள்ளனர். உயரமான மரத்தடிகள் இரண்டின் ஊடே போர்வைகளை இணைத்து ஏணி போல் செய்துள்ளனர். 45 நிமிடங்களுக்குள் அவர்கள் அங்கிருந்து தப்பியிருக்கின்றனர். இந்த இடைவெளியில் அவர்கள் காவலர்கள் பார்வையில் சிக்கவில்லை. இரண்டு சுவர்களுக்கும் இடையே அவ்வப்போது காவலர்கள் ரோந்து மேற்கொள்வர். ஆனாலும், கைதிகள் தேர்ந்தெடுத்த அந்தப் பகுதியில் ரோந்து மேற்கொள்ளப்படுவதில்லை" என்றார்.

வெளிப்புற சுற்றுச்சுவரிலிருந்து 50 மீட்டர் தொலைவில் பிரதான வாயில் இருக்கிறது. அந்த வாயிலில் எப்போதுமே மூன்று காவலர்கள் பணியில் இருப்பர். ஆனால் அன்றிரவு பணியிலிருந்த உம்ரவ் சிங் வித்தியாசமாக, சந்தேகப்படுபடியாக அன்றிரவு எதையும் கவனிக்கவில்லை என்கிறார்.

எந்தவித தடையும் இல்லாமல் காவலரையும் கொன்றுவிட்ட 8 பேரும் தப்பி சாலையைக் கடந்து அருகிலிருந்த விசாய நிலத்தின் ஊடாக சென்றிருக்கின்றனர். சிறைக்காவலர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதை சிறை அதிகாரிகள் தெரிந்து கொள்வதற்கு முன்னதாக தப்பியவர்கள் வெகு தூரம் சென்றிருக்க வேண்டும். சராசரியாக ஒரு மனிதன் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நடக்க முடியும். சிறையிலிருந்து தப்பித்தவர்கள் அவ்வாறாக வேகமாக நடந்திருந்தால், அவர்கள் தப்பியதில் இருந்து பிடிபட்ட நேரத்தை கணக்கிட்டால் 30 கி.மீ. தூரம் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அனைவரும் 10 கி.மீ தூரத்திலிருக்கும் ஒரு பகுதியில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டும் என்றே சிறைத்துறை .ஜி. துஸ்கர் கூறுகிறார்.

என்கவுன்டரும் இறுதிச்சடங்கும்

இறந்துபோன 8 பேரது குடும்பத்தினரும் "அரசு உத்தரவின்பேரில் இந்த என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது" என்கின்றனர். என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 8 பேரில் 5 பேர் க்வாண்டா எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஜாகிர் ஹுசைன், ஷேக் மஹபூப், அம்ஜத் கான், அகில் கில்ஜி, முகமது சாலிக் ஆகிய 5 பேர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

அவர்கள் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றது குறித்து அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஜாவேத் சவுகான் கூறும்போது, "5 சடலங்களையும் அங்கு கொண்டு சென்றபோது மக்கள் பதற்றத்தை என்னால் உணர முடிந்தது. சடலங்களைப் பார்த்ததும் அவர்கள் வெகுண்டெழுந்தனர். அவர்களை ஆசுவாசப்படுத்த நான் மிகவும் சிரமப்பட்டேன்" என்றார்.

சவுகான் கூற்றின்படி அகில் என்பவரைத் தவிர மற்ற 7 பேருக்கும் சிமி அமைப்புடன் எவ்வித தொடர்பும் இல்லை. அகிலும்கூட 2001-ல் சிமி தடை செய்யப்படுவதற்கு முன்னதாக மட்டுமே அந்த அமைப்போடு இணக்கமாக இருந்திருக்கிறார். 8 பேரும் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர் என்பதே சவுகானின் வாதம்.

போபால் சிறையிலிருந்து ஓராண்டுக்கு முன்னரே விடுதலையான காலில் கூறும்போது, "அதிக பாதுகாப்பு கொண்ட போபால் மத்திய சிறையிலிருந்து தப்பிப்பது என்பது எளிதல்ல. இந்த 8 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்களை விடுவிக்கக்கூடாது என்பதற்காகவே போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்" என்றார். மேலும் அவர் கூறும்போது எனது சகோதரர் அம்ஜத் தீவிரவாதி அல்ல. இதற்கு இப்பகுதிவாசிகளே சாட்சி. தீவிரவாத தடுப்புப் பிரிவினர்கூட அம்ஜத் நல்லவர் என்றே கூறியிருக்கிறார்கள் என்றார் அவரது மைத்துனர் பிரோஸ்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஜாகிரின் தந்தை பத்ருல் ஹுசைன் பேசும்போது "இத்தருணத்தில் என் கவலையெல்லாம் என் மற்ற இரண்டு மகன்கள் குறித்தே" என்றார். என் மகன் காய்கறி விற்றுக்கொண்டிருந்தான். அவனுக்கும் சிமி அமைப்புக்கும் தொடர்பு இருந்ததாக எந்த ஒரு நீதிமன்றமும் நிரூபித்திருக்க முடியாது என்றார் அவர்.

இறந்துபோன மகபூபின் சடலத்தைப் பெற அவரது தாத்தா மட்டுமே இருந்தார். ஏனெனில் மகபூபின் அம்மா ரூர்கேலா சிறையில் இருக்கிறார். அவர் மீதும் சிமி அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. மகபூபின் தந்தை பிச்சையெடுத்து வந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறந்துவிட்டார். "10 நாட்களுக்கு முன்னர் மகபூபை பார்க்கச் சென்றேன். அப்போது அவன் என்னிடம் எங்களை இரவு வரை ஒரே அறையில் அடைத்துவைக்கின்றனர்" எனக் கூறியபோதே எனக்கு பல சந்தேகங்கள் எழுந்தது என்றார் அவரது தாத்தா கல்லான்.

உஜ்ஜைன் நகரின் மகித்பூரைச் சேர்ந்த ஒருவரும் போபால் என்கவுன்ட்டரில் பலியாகியிருந்தார். 38 வயது அப்துல் மஜீத் 2013-ல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் மீதான குற்றச்சாட்டு வெடிபொருட்கள் வைத்திருந்தார் என்பது. இந்நிலையில், என்கவுன்ட்டர் தொடர்பாக அவரது சகோதரி ஜுலேகா பீ கூறும்போது, "என்றாவது ஒருநாள் என்னை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவர்கள் மஜீத் அடிக்கடி என்னிடம் சொல்வான். தொலைக்காட்சியில் 8 பேர் தப்பிவிட்டார்கள் என்ற செய்தி பார்த்தவுடனேயே அது என்கவுன்ட்டருக்கான நாடகம் என்பதை நான் தெரிந்து கொண்டேன்" என்றார்.

தற்போது மகித்பூர் முழுவதும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது. காரணம் அதே ஊரைச் சேர்ந்த மேலும் 4 பேர் போபால் சிறையில் உள்ளனர். மஜீத் இருந்த அதே பிரிவில்தான் அந்த 4 பேரும் அடைபட்டிருக்கின்றனர்.

சாஜித் ஹூசைன் கடந்த 2014-ல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சாஜித்தின் சகோதரர் வாஜித் கூறும்போது, "நான் சிறைக்கு என் சகோதரரைப் பார்க்க செல்லும் போதெல்லாம் என்னை அதிகாரிகள் மிரட்டுவார்கள். என் சகோதரரை கொன்றுவிடுவதாக கூறுவார்கள்" என்றார்.

மகித்பூர் கிராமம் இப்போது ஒரு மிகப் பெரிய நீதி போராட்டத்துக்கு தயாராகி இருக்கிறது. அந்த போராட்டம் கோபத்தின் விளைவு. ஆனாலும், தங்கள் போராட்டத்தை சட்டபூர்வமாகவே அவர்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். மஜீத்தின் மூத்த சகோதரர் கூறும்போது, "போபால் போலி என்கவுன்ட்டர் தொடர்பான உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. உண்மையை வெளிக்கொண்டுவர நாங்கள் செய்ய வேண்டியவற்றில் பாதி வேலை போலீஸாரின் நாடகம் அம்பலமானதால் வெளியாகிவிட்டது" என்றார்.
-    ஷிவ் சன்னி
தமிழில்: பாரதி ஆனந்த்

                                                                                                                              

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top