சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேசசபை இன்றேல்

அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் புறக்கணிப்போம்

மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் வேண்டுகோள்



சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை கிடைக்கும்வரை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் புறக்கணிப்பது என சாய்ந்தமருது  ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைமையிலான பொது அமைப்புக்கள்  முடிவு செய்துள்ள.

சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள் அபிலாஷையான தனியான உள்ளூராட்சி சபையை பெற்றுத்தருவதில் இந்த மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளும் கட்சிகளும் அசமந்தபோக்கைக் கடைப்பிடிப்பதால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை கிடைக்கும்வரை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் புறக்கணிப்பது என சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனிபா தலைமையில் கடந்த 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டத்தில் மரைக்காயர் சபையினர், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள்  மற்றும் ஊர்ப்பிரமுகர்களால் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்ளூராட்சி சபை விடயமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களால் பகிரங்க வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் இந்த மக்களின் நியாயமான கோரிக்கையை மழுங்கடிக்கும் விதத்தில் கிடப்பில் போடுவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் ஒரு கட்டமாகவே சபையைக் கோரும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாது எந்த கோரிக்கைகளையும் முன்வைக்காத ஏனைய ஊர்களை இணைத்து சிக்கலாக்க முனைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ங்கு நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு;
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயமாக செவ்வாய்க்கிழமை (24) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில் கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது எனவும் அதற்காக பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் குழுவொன்றை அமைப்பது எனவும் எடுக்கப்பட்ட தீர்மானமானது சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையை மழுங்கடித்து, தடுப்பதற்கான செயற்பாடாக நாம் கருதுவதுடன் அதனை முற்றாக நிராகரிக்கின்றோம்.
பிரதமர்  தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கும், சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்குமிடையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பதை உறுதியாக அறிவிக்கின்றோம்.
இத்தீர்மானமானது பிரதமர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும்.
இவை தொடர்பாக மொத்தமாக 40 கூட்டங்கள் பல்வேறு தரப்புடனும் நடாத்தப்பட்டு முடிவடைந்திருக்கின்ற நிலையில் மீண்டுமொரு குழு நியமனம் என்பது இவ்வூர் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டாகுமென கருதுகின்றோம்.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதில் பிரத்தியோகமான எல்லைப் பிரச்சினைகளோ, இனக்கலப்போ இல்லாமையால் ஏற்கனவே வாக்குறுதியளித்தற்கிணங்க அதனை உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு வேண்டுகின்றோம். அது வரை எமது போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
அவ்வாறு பிரகடனம் செய்யப்படா விட்டால் அரசியல் ரீதியாக எந்தக் கட்சியோ, அரசியல்வாதிகளோ தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எவ்வித ஒத்துழைப்புகளும் வழங்கப்படாது என்பதுடன், அவர்களும் அவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
இதற்காக பொது மக்கள் அனைவரும் தமது அரசியல், கொள்கை வேறுபாடுகளை மறந்து எதிர்காலத்தில் எங்களால் மேற்கொள்ளப்பட இருக்கின்ற தீர்மானக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இக்கோரிக்கையை தொடர்ந்து இழுத்தடிப்பதானது இரண்டு ஊர்களுக்குமிடையில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துமென அரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top