வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக

தமிழ்பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

இணைப்பு குறித்து சிங்கள மக்கள்

அச்சம் கொள்ள வேண்டியதில்லை

இரா.சம்பந்தன்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக தமிழ்பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இதனடிப்படையில் இந்த மாகாணங்கள் இணைந்த ஒரு மாகாணமாக இருக்க வேண்டும். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்படுவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குப் பயணம்  மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் ஆசிய- பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்டுடன், நேற்று கொழும்பில் நடந்த சந்திப்பின் போதே, இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தள்ளார்.

சமகால அரசியல் நிலவரம் குறித்து தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், “புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  இதயசுத்தியுடன் பங்குபற்றியுள்ளது.

1957ம்ஆண்டிலிருந்தே அதிகாரப் பகிர்வுக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், துரதிஷ்டவசமாக எந்த முயற்சியும் இதுவரை யதார்த்தமாகவில்லை.

இந்திய அரசாங்கத்தின் பங்குபற்றுதலுடன் 1987ம்ஆண்டு முதன்முறையாக அதிகாரப் பகிர்வானது இந்நாட்டின் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டது.

அன்றிலிருந்து ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தேசிய பிரச்சினை தொடர்பில் ஒரு தீர்வை எட்டும் முகமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.


மக்கள், இந்த நாட்டின் குடிமக்கள் என்ற தங்களது இறையாண்மையின் அடிப்படையில் அவர்களது சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தக் கூடியவாறான ஒரு அதிகாரப்பகிர்வு ஒழுங்கையே நாம் வலியுறுத்துகிறோம். இத்தகைய அதிகாரங்கள் எவ்வகையிலும் மீளப்பெறப்படலாகாது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக தமிழ்பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இதனடிப்படையில் இந்த மாகாணங்கள் இணைந்த ஒரு மாகாணமாக இருக்க வேண்டும்.

அரசியலமைப்பில் பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு கொடுக்கப்பட்டுள்ளமையினால், இந்த இரு மாகாணங்களும் இணைவதை பெரும்பான்மை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டிய அவசியமில்லை.

அதிகாரபகிர்வானது ஒன்றுபட்ட, பிளவுபடாத, பிரிக்க முடியாத இலங்கைக்குள் எட்டப்படும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு  உருவாக்கப்படுவது அவசியம்.

இந்த கருமத்தில் நாம் தவறிழைக்க முடியாது. அவ்வாறு நாம் தவறிழைக்கின்ற பட்சத்தில் அது வன்முறையின் மீள் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.

மிகமுக்கியமான இந்த கட்டத்தில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு அவசியம். இம்முயற்சிகள் சாதகமான முடிவொன்றினை அடைவதற்கு பிரித்தானியா ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top