சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை; ஒரு வார காலக்கெடு;

இல்லையேல் ஹர்த்தால், கடையடைப்பு

நோன்பு நோற்று துஆ கேட்டு இலக்கை அடைய

ஒன்று திரளுமாரும் வேண்டுகோள்



சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவது தொடர்பில் தீர்க்கமான முடிவை அறிவிப்பதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் ஹர்த்தால் கடையடைப்பு நடவடிக்கையை முன்னெடுப்பது என சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற சிவில் சமூக பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை ஸ்தாபிக்கப்படா விட்டால் அத்தேர்தலில் பொதுவான சுயேட்சைக் குழுவொன்றை களமிறக்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒரே கொள்கையின் கீழ் சாய்ந்தமருது மக்கள் என்ற ரீதியில் ஒற்றுமையுடனும் பள்ளிவாசல் தலைமைத்துவத்தின் கட்டுக்கோப்பை மீறாத வகையிலும் உள்ளூராட்சி சபைக்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு உறுதி பூணுவதாக கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சாய்ந்தமருது உலமா சபையினால் பையத் (சத்திய உறுதி) செய்து வைக்கப்பட்டனர்.
உள்ளுராட்சி சபை சாய்ந்தமருதுக்கு கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியின் பிரதிபலிப்பாய் கடந்த 2017-10-24ஆம் திகதி சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பள்ளிவாசல் மற்றும் பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கிடையே இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட உடன்பாட்டை ஊர் மக்களுக்கு அறிவித்து அவர்களது அங்கீகாரத்தை பெறும் நோக்கில் 2017-10-25 ஆம் திகதி தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற மக்கள் ஒன்றுகூடலின்போதே  இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
சாய்ந்தமருது மக்கள் தற்போது முன்னெடுத்துள்ள போராட்டமானது இந்த மக்களின் நீண்டகால கோரிக்கயாகவுள்ள தனியானதொரு உள்ளுராட்சிசபையை பெற்றுக்கொள்வதற்காகவேயொழிய எங்களது சகோதர அயல் கிராமங்களுக்கு எதிரானதோ அல்லது யாரும் அரசியல்வாதிகளுக்கோ கட்சிகளுக்கோ எதிரானது அல்ல.
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை சம்மந்தமாக கடந்த 19, 20 ஆம் திகதிகளில் உள்ளுராட்சிசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்திப்பதற்காக மரைக்காயர் சபையின் பிரதிநிதிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கொழும்பு சென்றிருந்தோம் பைசர் முஸ்தபாவை சந்தித்தோம். குறித்த சந்திப்பின்போது அமைச்சர்களான றவூப் ஹக்கீம் றிஷாத் பதியூதீன் போன்றோர் பிரசன்னமாக இருந்தார்கள்.
அங்கு தீர்மானிக்கப்பட்டது என்னவென்றால், சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை வழங்குவது விடயமாக அமைச்சர்களான றவூப் ஹக்கீம் றிஷாத் பதியூதீன் ஆகியோர் பிரதமரிடம் சென்று கடிதம் ஒன்றைப் பெற்றுத்தந்தால் நாளைக்கே அதனை பிரகடனப்படுத்துவேன் என்று பைசர் முஸ்தபா தெரிவித்தார். இதனை அந்த அமைச்சர்கள் ஒத்துக்கொண்டார்கள் இந்த கடிதத்தை பெற்றுத்தராவிட்டால் சாய்ந்தமருதை தனியான உள்ளுராட்சி சபையாக பிரகடனப்படுத்துவேன் என்று அமைச்சர் எங்களுக்கு வாக்குறுதியளித்தார்.
அந்த அடிப்படையில் பின்னர் பிரதமர் முன்னிலையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக அறிகின்றோம். இதன்போது அன்று எங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அப்பால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம்.
இவர்களால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானத்தை, பிழையான தீர்மானமாக தாங்கள் பார்ப்பதாகவும், சாய்ந்தமருது மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை தான் உணர்வதாகவும், ஊர்மக்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்த வேண்டிய வேண்டிய கடப்பாடு தாங்களுக்கு இருப்பதாகவும், இனியும் தாங்கள் ஏமாறுவதற்கு தயாறில்லை என்றும் எதிர்காலத்தில் சாய்ந்தமருது மக்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உள்ளுராட்சிசபையை பெறுவதற்காய் ஊர்மக்கள் அனைவரும் விசேடமாக பெண்கள் உட்பட நிலைமையை உணர்ந்து நோன்பு நோற்று துஆ கேட்டு நமது இலக்கை அடைய ஒன்று திரளுமாரும் இங்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டது.
திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஊரைச்சேர்ந்த வைத்திய கலாநிதி என்.ஆரீப், சாய்ந்தமருது ஷூரா கவுன்சில் செயலாளர் எம்..முகம்மட் சதாத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைவர் அன்வர் ஹாஜியார், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல், லங்கா அசோக் லேலன்ட் கிழக்கு நிறுவனத்தின் தலைவர் .ஆர்.முகம்மட் அஸீம், அபியா குறுப் நிறுவனத்தின் தலைவர் வர்த்தக பிரமுகர் எம்.எஸ்.அஷ்ரப், தேசிய காங்கிரஸின் பிரமுகர் எம்.எஸ்.எம்.சபான் இளைஞர்கள் சார்பில் அபூவக்கர் றம்ஸான் உள்ளிட்ட பலரும் பல்வேறு ஆக்ரோஷமான கருத்துக்களை முன்வைத்தனர்.
பள்ளிவாசல் மற்றும் பொதுமக்களின் அபிலாஷைகளை மதிக்கும் விதத்தில் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை தங்களது கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைவர் அன்வர் ஹாஜியார் தெரிவித்தார்.
அபியா குறுப் நிறுவனத்தின் தலைவர் வர்த்தக பிரமுகர் எம்.எஸ்.அஷ்ரப் கருத்து வெளியிடும் போது சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையானது கட்சிகளைத் தாண்டியது என்றும் இதில் எந்தக் கட்சியினரோ தனி நபர்களோ தனிப்பட்ட தங்களது வேலைத்திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள இந்த மக்களது உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மரைக்காயர்கள், சிவில் மற்றும் இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், கல்விமான்கள், வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top