தாய்லாந்து மன்னர் இறந்து

ஒரு வருடத்துக்குபிறகு இறுதிசடங்கு

3 லட்சம் பேர் திரண்டனர்

தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யா தேஜ் இறந்து ஒரு வருடத்திற்குப் பின் இறுதிசடங்கு இன்று நடைபெற்றது. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில் பரம்பரையாக மன்னர் ஆட்சி நடந்து வந்தது. இடையில் ஜனநாயக ஆட்சிக்கு மாறியது.

ஆனாலும், பரம்பரையாக மன்னரை தேர்வு செய்யும் முறையும் தொடர்ந்து இருந்து வருகிறது. மன்னருக்கு குறைந்த பட்ச அதிகாரங்கள் மட்டும் வழங்கப்பட்டு உள்ளது.

அங்கு மன்னராக இருந்து வந்த பூமிபால் அதுல்யாதேஜ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.

மன்னர் இறந்தாலும் உடனடியாக அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படவில்லை. பிரமாண்ட நினைவிடம் ஒன்று அமைத்து அதில் இறுதி சடங்குகள் நடத்துவது என்று முடிவு செய்திருந்தனர். இதற்காக பல கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வந்தது.



பாங்காக்கில் சனம் லூவாங் என்ற இடத்தில் நினைவிடம் கட்டும் பணி நடந்தது. மிகப்பெரிய நிலப்பரப்பில் செயற்கை ஏரியுடன் இந்த நினைவிடம் கட்டப்பட்டது. அதன் பணிகள் முடிவடைந்தன.

இதையடுத்து ஓராண்டுக்கு பிறகு மன்னரின் இறுதி சடங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 4 நாட்களுக்கு முன்பே இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் எராளமான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். இன்று கடைசி நாள் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது.

அதை தொடர்ந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. மரத்தினாலான ரதம் ஒன்று செய்யப்பட்டு அதில் உடலை வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக மன்னரின் உடல் எடுத்து செல்லப்படுகிறது. ஊர்வலம் 5 மணி நேரம் நடைபெற இருக்கிறது.

இறுதியாக நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு உடல் கொண்டு செல்லப்படும். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. தற்போதைய மன்னர் வஜிரா லாங்கோவா மன்னர் உடலுக்கு தீ மூட்டுகிறார்.

ஊர்வலத்தில் பங்கேற்க இன்று காலை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அரண்மனை அருகே கூடி இருந்தனர். இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.


இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்கு 40 நாடுகளின் தலைவர்கள் வந்துள்ளனர். 16 நாடுகளில் இருந்து மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களும் அங்கு வந்துள்ளனர்.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top