விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும்

பல்வேறு யோசனைகள் :

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று வெளியிட்டார்

விவசாய தொழில்நுட்ப உபகரணங்களுக்கு வரிவிலக்கு, 2018 ஆம் ஆண்டு தேசிய உணவு உற்பத்தி ஆண்டாகப் பிரகடனம், 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விவசாயப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகள், விவசாயத் தொழிற்துறையைப் பலப்படுத்துவதற்காக தேசிய வீடமைப்புக் கொள்கை ஆகிய சில முன்மொழிவுகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று வெளியிட்டார்.
தேசிய உணவு உற்பத்தி புரட்சியை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து விவசாய தொழிற்துறை பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று முற்பகல் கெக்கிராவ திப்படுவௌ நீர்த்தேக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற தேசிய உணவு உற்பத்திப் புரட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தேசிய ஏர்பூட்டு விழா நடத்தப்பட்டு 2017 ,2018 பெரும்போகப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் புதிய உத்வேகத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
காலநிலை மாற்றத்தினால் சவாலுக்குட்பட்டுள்ள உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்  வழிகாட்டலில் தேசிய உணவு உற்பத்திப் புரட்சி அமுல்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை விரிவாக முன்னெடுக்கும்வகையில் 2018 ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
தென்னை முக்கோண வலயம் உட்பட ஏக்கர் கணக்கான தென்னங்காணிகள் வீடமைப்புத் திட்டங்களாக மாற்றப்பட்டுள்ள காரணத்தினால் தென்னை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு வீடமைப்பு தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வறுமையை ஒழித்து நாட்டை மீண்டும் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கிக் கொண்டு செல்லும் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அரசியல், இனம், சமயம் மற்றும் கலாசார பேதங்களின்றி நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் ஒன்றுபட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசாங்கத்திற்கெதிராக ஊர்வலம் செல்லும் அனைவரிடமும் அந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு நாட்டை விரும்பும் உண்மையான பிரஜைகளாக இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறு தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய உணவு உற்பத்திப் புரட்சி இன்றைய தினம் நடைபெறும் விழாவுடன் அல்லது இந்த வாரத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சித்திட்டம் அல்ல என்றும் இது மூன்றுவருட திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ள விரிவான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பமாகும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அனைத்து அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்களும் இதனை தமது முக்கிய பொறுப்பாகக் கருதி பங்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் விவசாயிகளை கடன்சுமையிலிருந்து விடுவித்து அவர்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் சமூக அங்கீகாரத்துடன்கூடிய சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தேவையான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு நாட்டின் விவசாயத்துறைக்குத் தேவையான வசதிகள் மற்றும் வளங்களைப் பெற்றுக்கொடுத்து உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் என்றவகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாய சமூகத்திற்கு அரசாங்க வங்கிகள் மற்றும் அரசசார்பற்ற வங்கிகள்மூலம் கிடைக்கும் உதவிகள் குறித்து அறிவிக்குமாறு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், விவசாயத் தொழிற்துறையுடன் தொடர்பான பொருட்களுக்கு சலுகை அடிப்படையிலான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு தனியார் துறையிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விவசாயத் தொழிற்துறையையும் விவசாயப் பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகளை உள்ளடக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மகாவலி காணி உறுதிகள் வழங்குதல், மகாவலி வலயங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்கள், விவசாயக் காப்புறுதிகளை வழங்குதல், வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு விதை நெல் வழங்குதல், விவசாய அமைப்புகளை பாராட்டுதல், 2017 ஆம் ஆண்டு வீட்டுத்தோட்டச் செய்கை வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் போன்றவையும் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.
மகாவலி அதிகாரசபையின் 2017, 2018 விவசாயத் திட்டம் மகாவலி பணிப்பாளர் நாயகம் கோட்டாபய ஜயரத்னவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், மண் பாதுகாப்பு தொடர்பான நூல் ஜனாதிபதியினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.


அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top