நான்காவது போட்டியிலும் இலங்கை ஏமாற்றியது

தொடர்ச்சியாக பதினோராவது தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை ஏற்கனவே தோற்றிருந்த நிலையில், நேற்றைய (20) நான்காவது போட்டியிலும் இலங்கை ஏமாற்றியது. இலங்கை அணி தொடர்ச்சியாக அடைந்த பதினோராவது தோல்வி இதுவாகும்!

முன்னைய போட்டிகளை விட, ஷார்ஜாவில் நடைபெற்ற நேற்றைய போட்டியில், வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நிகராக இலங்கை ரசிகர்களும் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

ஆனால், அவர்களது ஆவலைத் தவிடுபொடியாக்கும் வகையில், 173 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஆட்டமிழந்தது இலங்கை.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலாவதாகத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்டம் மோசமாகவே அமைந்தது.

இலங்கை அணியில் நேற்று மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயமடைந்திருந்த சாமர கபுகெதரவிற்கு பதிலாக சதீர சமரவிக்கிரம ஒருநாள் அணியில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டார். அதேபோல், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் சுஷ்மந்த சமீர ஆகியோருக்குப் பதிலாக, சீகுகே பிரசன்ன மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

போட்டியின் இரண்டாவது ஓவரில் அணித் தலைவர் உபுல் தரங்க ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை வெறும் இரண்டாகத்தான் இருந்தது.

தொடர்ந்து வந்த சந்திமால், திக்வெல்லவுடன் சோடி சேர்ந்து சற்று அடித்தாடினார். ஆனாலும் இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. 22 ஓட்டங்களுடன் திக்வெல்ல ஆட்டமிழந்தார். மறுமுனையிலிருந்த சந்திமால் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

அதன்பிறகு களமிங்கிய சதீர (0), மிலிந்த சிறிவர்தன (13), சீகுகே பிரசன்ன (5), திஸர டி பெரேரா (0) என சொற்ப ஓட்டங்களுக்கு விக்கெட்களை இழந்த இலங்கை அணி 99 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

அதன்பிறகு திரிமான்னவுடன் ஜோடி சேர்ந்த அகில தனஞ்சய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த கடுமையாகப் போராடினார். மறுமுனையில் நின்ற திரிமான்னவுக்கு சிறந்ததொரு இணைப்பாட்டத்தை வழங்கி 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த சுரங்க லக்மால் திரிமான்னவுடன் ஜோடி சேர மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த திரிமான்ன 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் திரிமான்ன மாத்திரமே சிறப்பாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தார். அவர் நிலைத்திருக்காவிடடால் இலங்கை அணி இன்னும் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்டிருக்கும்.

அதனைத் தொடர்ந்து லக்மால் 23 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க இலங்கை அணி 173 ஓட்டங்களுக்கு சுரண்டது.

பந்துவீச்சில் அசத்திய பாகிஸ்தானின் ஹஸன் அலி 3 விக்கெட்டுக்களையும், இமாட் வசீம் மற்றும் ஷடாப் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

174 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முப்பத்தொன்பது ஓவர்கள் மட்டுமே முகங்கொடுத்து, மூன்று விக்கட்களை மட்டுமே இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

அவ்வணி சார்பில் பாபர் அஸாம் மற்றும் ஷொஐப் மாலிக் ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 69 ஓட்டங்களைப் பெற்று அணியை வெற்றிக்கு நடத்திச் சென்றனர். ஆட்ட நாயகனாக பாபர் அஸாம் தெரிவுசெய்யப்பட்டார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top