வானவில் போல பல வண்ணங்களில்

 நிறம்  மாறும்‘ வானவில் நதி

அது உலகின் நீளமான ஆறும் இல்லை... அகலமான ஆறும் இல்லை. ஆனால் முக்கியமான ஆறுதான். உலகில் உள்ள ஒவ்வோர் ஆற்றின் நிறம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ஆறு, வானவில் போல பல வண்ணங்களில் நிறம் மாறுகிறது.
இந்த ஆற்றின் பெயர் கேனோ கிரிஸ்டலெஸ். பார்க்கக் கரடு, முரடான தோற்றத்தில் காட்சியளிக்கிறது கேனோ கிரிஸ்டலெஸ். கரடு முரடான பாறைகளில் விழும் தண்ணீர், கண்ணாடிபோல பளபளவென ஓடும். இந்த நீருக்கு அடியில்தான் சிவப்பு, பச்சை, ஊதா, ஆரஞ்சு எனப் பலவிதமான நிறங்கள் தெரிகின்றன. இதற்குக் காரணம், நதி நீருக்கடியில் வளரும் வண்ணத் தாவரங்களும், அதில் பூக்கும் பூக்களும்தான். இந்த அழகுதான் பலரை அங்கு அழைத்துச் செல்கிறது.
நிறம் மாறும் அழகுக்காகவே இந்நதி 'நீர்ம வானவில்', 'வானவில் நதி' எனப் புகழப்படுகிறது. கொலம்பியாவின் சியாரா டி லா மெகெரினா பகுதியில் இந்த ஆறு பாய்கிறது. இதன் மற்றொரு சிறப்பு வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீர் நிறைந்து காணப்படுவதுதான். ஒவ்வொரு ஆண்டும் நீருக்குள் இருக்கும் தாவரங்கள் வெடித்துக் குலுங்குகிறது. வருடம் முழுவதும் நீர் நிறைந்து காணப்பட்டாலும், செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரைக்கும் தண்ணீர் குறைந்து காணப்படும். நீருக்குள் வண்ணமயமாகக் காட்சி தரும் அல்கைட் இன பாசியான மெகரேனிய கிளேவிஜெரா மீது சூரிய ஒளிபடுவதால் பாசிகள் வெடித்து நிறம் மாறுகின்றன. சூரிய ஒளி நேராகப் பாசியின்மீது படுவதால் அவை எப்போதும் புதிய பொலிவோடு காட்சி தருகின்றன. இந்த அழகுதான் பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளை எளிதில் அந்த இடத்தை விட்டு விலக விடாமல் கெட்டியாக பிடித்துக் கொள்கிறது. நீரினுள் பூக்கும் பாசிகள் சிவப்பு நிறத்தில் மட்டும் பத்து வகையான நிறங்களாகப் பிரிந்து காட்சியளிக்கிறது. வெயில் படாத இடங்களில் பாசியானது பசுமையான நிறத்திலும், இளம் பச்சை நிறத்திலும் காட்சியளிக்கிறது. பூக்கள் பல நிறங்களில் தொடர்ந்து இருப்பதால் பார்ப்பதற்கு வானவில் போல காட்சியளிக்கிறது.
கேனோ கிரிஸ்டலெஸ் நதியின் பாதை, பூமியில் பாறைக் கவசம் பதித்தது போன்று வெறும் பாறையில் அமைந்திருக்கும். பார்ப்பதற்குப் பாறையில் கால்வாய் அமைத்தது போலவே இருக்கும். ஆற்றின் இரு பக்கங்களிலும் பசுமை போர்த்திய புல்வெளிகள் பார்ப்போர் மனதுக்கு இனிமை தரும். இவ்வளவு செழிப்புமிக்க ஆற்றை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட நீண்டகாலமாகத் தடை போடப்பட்டிருந்தது. கொலம்பியாவிலலிருந்து கேனோ கிரிஸ்டலெஸ் நதி வெகு தொலைவில் இருந்ததும், சென்றுவரச் சரியான பாதை இல்லாததும் தடைக்கு முக்கியமான காரணங்கள். இதுதவிர, கொலம்பியாவின் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியும் அதுதான். அந்நிலையில் அங்குச் சென்றுவரும் பயணிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பது சற்று சிரமமாக இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலே கண்ட அனுமதி மறுப்பு காரணங்களைவிட நதியின் இயற்கைத் தன்மை மாசுபடும் என்பதும் ஒரு முக்கியமான காரணம்.


சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை  ஏற்ற அரசு 2009-ம் ஆண்டிலிருந்து சுற்றுலாப் பயணிகளை பார்வையிட அனுமதி அளித்தது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்நதியைக் காணச் செல்கின்றனர். கொலம்பியாவிலிருந்து, இந்நதியைக் காண ஏற்பாடு செய்யும் சுற்றுலா நிறுவனங்களும் அதிக அளவில் உருவாகி வருகின்றன. இந்நதியின் அருகே தேசியப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top