உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு
135 மில்லியன் ரூபா மாதாந்த கொடுப்பனவு



உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள  8,691 உறுப்பினர்களுக்கும், மாதம்தோறும், 135 மில்லியன் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாநகர முதல்வர்களுக்கும் தலா 30 ஆயிரம் ரூபாவும், பிரதி முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபாவும், நகரசபை முதல்வர்களுக்கு  தலா 25 ஆயிரம் ரூபாவும், பிரதி முதல்வருக்கு 20 ஆயிரம் ரூபாவும், பிரதேச சபை தவிசாளருக்கு 25 ஆயிரம் ரூபாவும், பிரதி தவிசாளருக்கு 20 ஆயிரம் ரூபாவும், ஏனைய உறுப்பினர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாவும் மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
அடிப்படைக் கொடுப்பனவு தவிர, போக்குவரத்து, தொலைபேசி கட்டணம், முத்திரைக் கட்டணம் போன்ற கொடுப்பனவுகளும் அளிக்கப்படுகின்றன.
உள்ளூராட்சி சபைகள் கல்வி, நிதி, சுகாதாரக் குழுக்களை உருவாக்கும் அதிகாரம் கொண்டவை. ஒவ்வொரு அமர்வுக்கும் உறுப்பினர் ஒருவர் 550 ரூபா தொடக்கம் 1500 ரூபா வரை கோர முடியும்.
அதிகபட்சமாக, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர், 33,500 ரூபாவை முழுக் கொடுப்பனவாகப் பெற்றிருக்கும் நிலையில், குறைந்தபட்சமாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் 20 ஆயிரம் ரூபாவை மாத்திரம் பெற்றுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக அரசாங்கம் 606.35 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. எஞ்சிய கொடுப்பனவுத் தொகையை உள்ளூராட்சி சபைகள் தமது வருமானத்தில் இருந்து வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top