போதியளவு நீதிபதிகளை நியமிக்க
தவறி விட்டார் ஜனாதிபதி
அமைச்சர் அஜித் பெரேரா

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சட்டம் நினைவேற்றப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதியளவு நீதிபதிகளை நியமிக்க தவறி விட்டார் என்று, அமைச்சர் அஜித் பெரேரா குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர்,
வழக்குகள் தாமதிக்கப்படுவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை என்றும் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தாமதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு, மேலதிக உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி தமது கடமை மற்றும் கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும்.
நீதி தாமதிக்கப்படுவது தவறு செய்தவர்களுக்கே நன்மையளிக்கிறது.
உயர் நீதிமன்றங்களில் சராசரியாக ஒரு வழக்கு முடிய, 17 ஆண்டுகள் செல்கின்றன. குறைந்த பட்சம், 10 ஆண்டுகளும், அதிகபட்சம் 25 ஆண்டுகளும் எடுக்கிறது.
வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லாதமையே இந்த இழுபறிக்கு முக்கிய காரணம்.
இப்போது மேல்நீதிமன்றங்களில் 75 நீதிபதிகள் தான் உள்ளனர். இதனால் நாங்கள், நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க வழி செய்யும் வகையில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் சட்டங்களை நிறைவேற்றினோம்.
தற்போது நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருக்கிறார்.

அடுத்து, வழக்குகள் தாமதிக்கப்படுவதற்கு இன்னொரு காரணம் சட்டமா அதிபர் திணைக்களம். சட்டமா அதிபர் திணைக்களத்தில் போதிய சட்டவாளர்கள் இல்லை. 17 ஆயிரம் வழக்குகள் உள்ள நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் வெறுமனே 113 சட்டவாளர்கள் தான் உள்ளனர்.
ஊதியம் குறைவாக இருப்பதால், சட்டவாளர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்கு தயங்குகிறார்கள். தனிப்பட்ட முறையில் அவர்கள் வழக்குகளில் வாதாடினால் கூடுதல், நிதியை உழைக்க முடியும்.
எனவே, நாங்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தில் சட்டவாளர்களின் எண்ணிக்கையை 213 ஆக அதிகரிப்பதற்கும், அரச சட்டவாளர்களுக்கான ஊதியத்தை அதிகரிப்பதற்கும், நடவடிக்கை எடுத்தோம். ஆனால் நான்கு மாதங்களாகியும், இன்னமும் எவரும் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை.
வழக்குகள் தாமதமடைவதற்கு மூன்றாவது காரணம், போதிய மேல் நீதிமன்றங்கள் இல்லை. நீதித்துறை திருத்தச்சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டதும், சிறப்பு தீர்ப்பாய மேல் நீதிமன்றங்களை அமைக்கும் அரசிதழை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேல் மாகாணத்தில் குறைந்தது மூன்று மேல் நீதிமன்றங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய மாகாணங்களில் மேலும் 10 மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனியான சிறப்பு மேல் நீதிமன்றம் ஒன்றும் அமைக்கப்படும்.
ஜனாதிபதி, சட்டமா அதிபர் திணைக்களம், நீதியமைச்சர் ஆகியோர் தமது பணிகளை துரிதமாக செய்ய வேண்டும்என்றும் அவர் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top