சாய்ந்தமருது வைத்தியசாலையில்
அரசியல் தலையீடுகளா?



சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி சபையை புனரமைப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த வைத்தியசாலையின் பின்னடைவுக்கு தற்போதைய வைத்தியசாலை அபிவிருத்திச் சபையில் உள்ள ஒரு சிலரின் செயற்பாடுகளே காரணமென பொதுமக்கள் தரப்பில் பகிரங்கமாக கூறப்படுகின்றது. ஏனெனில், இவர்களே சாய்ந்தமருது வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுத்தவர்களுக்குத் துணைபோனதாக கூறப்படுகின்றது.
சாய்ந்தமருதைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக இந்த இணைப்பு தடுக்கப்பட்டமையாலேயே இன்று நமது வைத்தியசாலை எஞ்சியிருக்கிறது.

இது மாத்திரமன்றி சாய்ந்தமருது வைத்தியசாலை மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படும் நிலைக்கு இந்த வைத்தியசாலையை இட்டுச் சென்றவர்கள் இவர்களே என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. இதுபோல் பலதரப்பட்ட குறைபாடுகளின் நிமிர்த்தமே மிக நீண்டகாலம் உரிய முறையில் இயங்காத இந்த அபிவிருத்திச் சபையை புனரமைத்து புதிய சபையொன்றை ஏற்படுத்த வேண்டுமென சாய்ந்தமருது மக்கள் மத்தியில் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றது.

சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபையை புனரமைக்குமாறு அதன் பதவி வழி தலைவரான பிரதேச வைத்திய அதிகாரியிடம் பலரும் தனிப்பட்ட ரீதியாகவும் குழுக்களாகவும் மிக நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டு வருகின்றனர்.ஆனால் இந்த விடயத்தில் எவ்வித முன்னேற்றங்களையும் காணவில்லை.

வைத்தியசாலை அபிவிருத்திச் சபையை புனமைக்குமாறு கோரி கடந்த 2018.04.14ம் திகதி நூற்றுக்கும் மேற்பட்ட சாய்ந்தமருது பொதுமக்கள் கையொப்பமிட்ட மகஜர் பிரதேச வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. இந்த மகஜரை கையளித்த இருவரது தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொண்ட பிரதேச வைத்திய அதிகாரி இது தொடர்பில் அவர்களுக்கு தெரியப்படுத்துவதாக கூறியிருந்தார். ஆனால் இந்தப் பதிவு எழுதப்படும் நேரம் வரைக்கும் அந்த இருவருக்கும் எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை.

அடுத்ததாக, கடந்த 2018.04.24ம் திகதி சாய்ந்தமருது சுயேற்சைக்குழு சார்ந்த மாநகர சபை உறுப்பினர்கள் பிரதேச வைத்திய அதிகாரியை சந்தித்து கலந்துரையாடியபோது வைத்தியசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். இதன்போது அபிவிருத்தி சபை புனரமைப்பு தொடர்பில் உறுப்பினர்களால் வினவப்பட்டபோது, புதிய அங்கத்தவர்களையும் இணைத்துக் கொண்டு புதிய நிருவாகத் தெரிவொன்றைச் செய்வதென இணக்கம் காணப்பட்டது. புதிய அங்கத்தவர்களை இணைக்கும் விடயத்தை இலகுபடுத்தும் பொருட்டு சாய்ந்தமருதில் உள்ள அனைத்து கிராம நிலதாரி பிரிவுகளையும் சேர்ந்த பல்துறை சார்ந்தவர்களை சேர்த்துக் கொள்வதற்காக புதிய விண்ணப்ப படிவங்களை சுமார் ஒரு வாரத்தினுள் வழங்குவதாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் பத்து நாட்கள் கடந்தும் விண்ணப்ப படிவம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அபிவிருத்தி சபை செயலாளரிடம் வினவப்பட்டபோது கடந்த 2018.05.03ம் திகதி வழங்குவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் புதன்கிழமையும் விண்ணப்பம் வழங்கப்படாததையடுத்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பலர் முயன்றபோதும் அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காமல் இருந்து வருகிறார்.

அது மட்டுமல்லாது மாநகர சபை உறுப்பினர்கள் சிலரது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காமலும் சிலரது அழைப்புகளுக்கு பதிலளித்து வேண்டுமென்றே காலம்கடத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்த செயற்பாடானது வேண்டுமென்றே புதிய சபை அமைவதை தடுக்கும் செயற்பாடாக பார்க்கப்படுகின்றது. இதனால் தொடர்ந்தும் ஒரு தரப்பினரே அபிவிருத்தி சபையில் இருந்துகொண்டு இந்த வைத்தியசாலையை அதள பாதாளத்திற்கு கொண்டுசெல்ல முற்படும் செயலாக இதை நோக்க வேண்டியுள்ளது.

அபிவிருத்தி சபை புனரமைப்பு தொடர்பில் பதவி வழி தலைவர் என்ற ரீதியில் பிரதேச வைத்திய அதிகாரி அதிக அக்கறை காட்டாமல் இருப்பதானது இவர் பக்கச்சார்பாக செயற்படுகின்றாறா என்று அவர் மீது பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் புதிய சபை அமையப் பெறுமிடத்து அது வைத்தியசாலை அபிவிருத்திக்கும் எழுச்சிக்கும் உந்து சக்தியாக அமையும் என்பதால் சாய்ந்தமருது வைத்தியசாலையை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு இவரும் துணைபோகின்றாறா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய பிரதேச வைத்திய அதிகாரி வேறு ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவரது சேவைக் காலத்தில் இந்த வைத்தியசாலை பல திருப்திகரமான அடைவுகளை எட்டியுள்ளதால் இவரை பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டே மக்கள் பார்க்கின்றனர். ஆனால் அபிவிருத்தி சபை புனரமைப்பு விடத்தில் இவரது காலதாமதம் யாரேனும் அரசியல் சக்திகள் இவரை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயற்சி செய்கின்றனரா என்ற பார்வையையும் தோற்றுவித்துள்ளது.

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் செயற்பாட்டை சாய்ந்தமருது இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் முன்னெடுக்காவிட்டால் நமது வைத்தியசாலை சாய்ந்தமருதை அழிக்க முற்படும் அரசியல்வாதிகளின் கூடாரமாக மாறி நமது வைத்தியசாலை பறிபோகும் நிலை ஏற்படும்.

சாய்ந்தமருது பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் சாய்ந்தமருது நவம்பர் எழுச்சியை முன்னெடுத்து நமது மண்ணை அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்து தலைநிமிர்ந்து நடக்கச் செய்தீர்கள்.

அதேபோல் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் மரைக்காயமார் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு நமது உள்ளூராட்சி மன்ற இலக்கை நோக்கிய போராட்டத்தை காட்டிக் கொடுப்பவர்களுக்கு எதிராக கடந்த 2018.05.05ம் திகதி சாய்ந்மருது இளைஞர்களும் பொதுமக்களும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என கிளர்ந்தெழுந்து நமது போராட்டத்தினை கொச்சைப்படுத்தியவர்களை திக்குமுக்காடச் செய்தீர்கள்.

நமது ஊர் விடயத்தில் அக்கறையுடன் செயற்டும் பொதுமக்களும் இளைஞர்களும் நமது வைத்தியசாலையை மீட்டெடடுப்பதில் தயக்கம் காட்டலாகாது. விரைந்து செயற்பட்டாலேயே நமது வைத்தியசாலையை கட்டியெழுப்பி நமது வைத்திய தேவைகளை நாமே நிறைவு செய்து கொள்ளலாம். இல்லையேல் நமது வைத்தியசாலையை பறிகொடுத்துவிட்டு அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும்.

1987ம் ஆண்டுவரை நமக்கென்று தனியாக இருந்த உள்ளூராட்சி சபையை பறிகொடுத்துவிட்டு இன்று வீதிக்கு இறங்கி போராடுவதுபோல்;
இருக்கின்ற வைத்தியசாலையை பறிகொடுத்துவிட்டு நமது சந்ததிகளை வைத்தியசாலைக்கான போராட்டத்தை முன்னெடுக்க இடமளிப்பதா?

எனவே, சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சபையை புனரமைக்குமாறு பொதுக்களும் இளைஞர்களும் உரியவர்களுக்கு அழுத்தம் கொடுங்கள். அழுத்தம் கொடுக்கப்பட்டும் நிறைவேற்றப்படாதுவிட்டால் அணிதிரண்டு வந்து உரிய அதிகாரிகளுக்கு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வைத்தியசாலையை மீட்டெடுப்போம்.
இளைஞர்களே, பொதுமக்களே முன்வாருங்கள்; நம்மை நாமே ஆள நமது தனித்துவம் காப்போம்.
Muhammadh Ismaeel Sarjoon


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top