தியவன்னா ஓயாவில் விபத்துக்குள்ளான
அதிசொகுசு காரின் உரிமையாளருக்கு அபராதம்

பத்தரமுல்ல - தலவதுகொட பிரதேசத்தில் தியவன்னா ஓயாவில் விபத்துக்குள்ளான அதிசொகுசு காரின் (BMW i8) உரிமையாளருக்கு 4,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, வழக்கு விசாரணைகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி தலவத்துகொட கீல்ஸ் சுப்பர் கடைக்கு முன்னால் BMW மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகி சேறு நிறைந்த ஏரிக்குள் விழுந்துள்ளது.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாத BMW மோட்டார் வாகனம் இன்னும் சில வாகனங்களுடன் மோதி இவ்வாறு சேறு நிறைந்த ஏரிக்குள் விழுந்துள்ளது. கார்களில் மோதுண்டு தலவதுகொட, தியவன்னா ஓயாவில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக, தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அமைச்சர் கபீர் ஹாசிமின் உறவினரான, பாஹிம் மொஹமட் என்ற நபரே காரை ஓட்டிச் சென்றவர் எனத் தெரியவந்தது.
ஆயினும் குறித்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர் தனது உறவினர் எனவும், அவருக்கும் தனது அமைச்சுக்குமோ அல்லது தனிப்பட்ட அலுவலக பணியிலோ எவ்வகையிலும் சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கபீர் தெரிவித்திருந்தார்.
சந்தேகநபர் மார்ச் 19ஆம் திகதி தனது சட்டத்தரணியுடன் தலங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் கடந்த மார்ச் 20ஆம் திகதி கடுவல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, மார்ச் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், சந்தேகநபர், மார்ச் 27ஆம் திகதி கடுவல நீதவான் நீதிமன்றத்தினால் இரண்டு இலட்ச ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபருக்கு 4,500 ரூபா அபராதம் விதித்த நீதவான் வழக்கு விசாரணைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top