அமெரிக்காவில் செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு
- 5பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ‘தீ கேப்பிட்டல்’ என்னும் தனியார் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னாபோலிஸ் பகுதியில் ‘தீ கேப்பிட்டல்’ எனப்படும் தனியார் செய்தி நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதிக்கு வந்த ஒரு நபர் அலுவலத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிந்திய செய்தி
அமெரிக்க பத்திரிகை அலுவலகத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர் கைது
அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து 5 பேரை சுட்டுக் கொன்ற வாலிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மேரி லேண்ட் மாகாணத்தில் உள்ள அன்னாபோலீஸ் நகரில் ‘கேபிட்டல் கெசட்’ பத்திரிகை அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் அங்கு ஒரு மர்ம வாலிபர் புகுந்தார். செய்தி அறை பகுதிக்குள் நுழைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணாடி கதவு வழியாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. என்ன நடக்கிறது என தெரியாமல் திகைத்த ஊழியர்கள் உயிர் பிழைக்க அங்குமிங்கும் ஓடி பதுங்கினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து வந்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை தேடினர். பின்னர் 60 வினாடிகளில் பத்திரிகை அலுவலகத்தில் பதுங்கியிருந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர்.
அவனது பெயர் ஜரோட் ரமோஸ். இவனுக்கு 35 வயது இருக்கும். சமூக வலை தளங்களில் ‘கேபிட்டல் கெசட்’ பத்திரிகைக்கு மிரட்டல் விடுத்து வந்தார். இந்த நிலையில் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து திடீர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டதற்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு இந்த பத்திரிகை மீது இவர் நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அது கிடைக்காததால் ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment