ஞானசார தேரர் விவகாரம்
இன்று முக்கிய சந்திப்பு


பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், பௌத்த சமய விவகார அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்துக்குள் வைத்து சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில்,  ஆறு மாதங்கள் அனுபவிக்கும் வகையில் ஒரு ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது காவியுடை நீக்கப்பட்டு சாதாரண சிறைக்கைதிகளின் உடை வழங்கப்பட்டுள்ளது.
ஞானசார தேர்ருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பௌத்த பிக்குகள், அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்து வருவதுடன், அவரது காவியுடை நீக்கப்படுவதற்கும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தன.
இந்த நிலையில், நீதியமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருடன்  நேற்றுக் கலந்துரையாடிய பௌத்த சமய விவகார அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, இன்று ஜனாதிபதியைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசவுள்ளார்.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் பௌத்த அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அதேவேளை, பௌத்த பிக்குகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top