விசா கட்டுப்பாடுகளை நீக்கி
புதிய சலுகைகளை விதித்துள்ள
ஐக்கிய அரபு அமீரகம்
   
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான விசா மீது இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி புதிய சலுகைகளையும் விதித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று கல்விகற்கும் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர், வேலை தேடுபவர்கள் உள்ளிட்ட பலருக்குமான விசா கட்டுப்பாடுகளை தகர்த்து புதிய சலுகைகளை வழங்குவதற்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், பிரதமருமான ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் சென்று கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மாணவர்களின் கல்விக்காலம் வரை விசா அளிக்கப்பட்டிருக்கும். இந்த நிலை தற்போது தகர்த்தப்பட்டு, கல்விக்காலம் முடிந்து மேலும் 2 ஆண்டுகள் அங்கு தங்குவதற்காக விசா நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் விசா காலம் முடிந்தும் வேலை தேடுவதற்காக அங்கு தங்கி இருப்பவர்களுக்கு, கூடுதலாக 6 மாத கால விசா வழங்கப்பட்டு, அவர்களாக நாட்டை விட்டு வெளியேற அவகாசம் அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் நுழைவதை தடை செய்யும் சட்டத்தையும் நீக்கியுள்ளது.
அதேபோல், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் தாமாக வெளியேறவும் 2 ஆண்டுகள் கால அவகாசமும் அளிக்கப்படுகிறது.
இந்த சலுகைகளில் குறிப்பாக துபாய் வழியாக பயணிக்கும் பயணிகள் துபாயை சுற்றிபார்க்க 2 நாட்களுக்கு பணம் செலுத்தும் விதியை மாற்றி, 2 நாட்கள் சுற்றிபார்ப்பதற்கான அனுமதி இலவசமாக வழங்கப்படுவதாகவும், மேலும், 2 நாட்களுக்கு மேலாக இருக்கும் பயணிகள் 50 திர்கம் மட்டும் செலுத்தி 4 நாட்கள் அந்நாட்டை சுற்றிப்பார்க்க அனுமதி பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாவை புதுப்பிக்க வேண்டியவர்கள் நாட்டில் இருந்தபடியே புதுப்பிக்கும் வழிவகையும் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top