இந்து மத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து
விலகுகிறார் காதர் மஸ்தான்


வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த 12 ஆம் திகதி செவ்வாயன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தான், தான் வகிக்கும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது..
இது தொடர்பில், இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், அவர் இந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்வாரெனத் தெரியவருகின்றது.,
புதிய இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை நியமிக்கும் போது, இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் எம்.பி நியமிக்கப்பட்டார். இதனால், தமிழ் அரசியலில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளைத் தொடர்ந்து, அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்துமத விவகாரப் பிரதியமைச்சுப் பதவியை இராஜினாமாச்செய்துவிட்டு, வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கான பிரதியமைச்சுக்கு, மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
இவரின் அமைச்சு நியமனம் தொடர்பாக ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இதனைக் கடுமையாக சாடியிருந்தார். அமைச்சர் மனோ கணேசனும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்
அத்துடன், இந்த நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்ப்பதாக,  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் கூறியிருந்தார்.
இதனிடையே, சைவ சமய அமைப்புகள் பலவும், இந்த நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.
நேற்று நல்லூரில் சைம சமய அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top