பெரும்பான்மை மக்களின் ஆதரவை மாத்திரம்
முழுமையாக ஜனநாயகத்தின்
வெளிப்பாடாக கொள்ள முடியாது,
சிறுபான்மை ஆதரவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்
அதுவே உண்மையான ஜனநாயகமாகும்
சாய்ந்தமருதில் மஹிந்த தேசப்பிரிய

வாக்களிப்பில் பெரும்பான்மை மக்களின் ஆதரவை மாத்திரம் முழுமையாக ஜனநாயகத்தின் வெளிப்பாடாக கொள்ள முடியாது, சிறுபான்மை ஆதரவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் அதுவே உண்மையான ஜனநாயகமாகும்! என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது - மாளிக்கைக்காடு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று 23 ஆம் திகதி(2018.06.23) நடைபெற்ற தேசிய வாக்காளர் தின வைபவத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே, மஹிந்த தேஷப்பிரிய  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இன்று ( 23 ) சாய்ந்தமருதில் சாய்ந்தமருதுமாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ரத்னஜீவ எச் ஹுக் , உதவி தேர்தல்கள் ஆணையாளர்களான எம்.எம்.முஹம்மட் , டீ.ரீ..விக்ரமரெட்ன , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் .எம்.ஹனீபா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் , கலந்து கொண்டனர்.
மாளிகைக்காட்டில் இருந்து ஆரம்பமான வரவேற்பு ஊர்வலம் சாய்ந்தமருதுகல்முனை பிரதான வீதியினூடாக சாய்ந்தமருதுமாளிகைக்காடு  ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்றலை அடைந்தது.
பாண்ட் வாத்தியம் , கடற்படை மரியாதை , பொல்லடி போன்ற பலவிதமான நிகழ்வுகளுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படும் போது வீதியின் இருமருங்கிலும் நின்ற மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். எந்தவிதமாக அரசியில் வாதிகளும் அழைக்கப்படாத நிலையில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற மேற்படி நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச மக்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நிகழ்வாக அமையப் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இங்கு உரை நிகழ்த்திய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்ததாவது,
ஜனநாயகம், வாக்குரிமை, மற்றும் ஒரு நாட்டின் மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கு தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த வேண்டியது முக்கியமானது.
இலங்கையின் வரலாற்றில் மோசடிகள் நிறைந்த மூன்று தேர்தல்கள் நடந்தன. 1999ஆம் ஆண்டு நடந்த வடமேல் மாகாணசபைத் தேர்தல். 1982இல் நடந்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு. 1981இல் நடந்த யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் ஆகியனவே அவை.
யாழப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையங்களில் கொழும்பு, குருநாகல பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட வெளியாட்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இது, வாக்குப்பெட்டிகள் காணாமல்போக காரணமாயிற்று. பின்னர் சில வாக்குப் பெட்டிகள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அன்றே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவம், மிதவாத தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் தேர்தல் மீதான நம்பிக்கையை உடைந்தது. வாக்குகளுக்குப் பதில் ரவைகள் என்ற நிலைக்கு அவர்கள் செல்ல வழியமைந்தது.
வடக்கில் ஆயுதக் குழுக்கள் பலமடைய, 1983 கலவரம் தான், காரணமானது என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால், இந்தக் குழுக்களின் தோற்றுவாய் என்று, 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலைத் தான் நான் நினைக்கிறேன்,
1982  ஜனாதிபதித்  தேர்தலில், இளைஞர்களைப் பிரதிநிதித்துவம் செய்த அரசியல் கட்சி ஒன்று பெற்றுக் கொண்ட வாக்குகளை வைத்துப் பார்த்தால், 1983இல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் அந்தக் கட்சிக்கு 5 தொடக்கம் 10 ஆசனங்கள் கிடைத்திருக்கும்.
ஆனால் இளைஞர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படாததால் அவர்கள் தேர்தலின் மீது நம்பிக்கையிழந்தனர். இது அவர்களில் சிலர் ஆயுதம் ஏந்த வழியமைத்தது. இதன் தொடர்ச்சியாக 60 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
பொருத்தமற்ற தேர்தல்கள் மற்றும் தேர்தல்களைப் பிற்போடுவது, மரணங்களையும், அழிவுகளையும் தான் கொண்டு வரும்.
1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம், அப்போதைய அரசாங்கம் தனது பதவிக்காலத்தை ஐந்தில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீடித்தது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, புதிய தேர்தலை எதிர்கொண்டார். அது அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணம்.
வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தி, அங்குள்ள வாக்காளர்கள் தமது விருப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கடப்பாடு ஆகும்என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் , அமைச்சின் மேலதிக செயலாளர் .எல்.எம்.சலீம் , பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் , சமூர்த்தி உத்தியோஸ்தர்கள் , வர்த்தக சங்க பிரதிநிதிகள் , பாடசாலை அதிபர்கள் , உலமாக்கள் , புத்திஜீவிகள் , கல்வியலாளர்கள் , மீனவர்கள் ,விவசாயிகள், பெண்கள் , இளைஞர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
வைபவத்தில் சாய்ந்தமருது – மளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் அல்-ஹாஜ் எம்.எம்.முபாறக் சாய்ந்தமருது பள்ளிவாசலின் படம் பொறிக்கப்பட்ட ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை அதிதிகளுக்கு நிணைவுப் பரிசாக வழங்கிவைத்தார்.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top