இலங்கையின் சிறப்புத் தர உற்பத்திகளுக்கு
பஹ்ரைனில் பெரு வரவேற்பு
பஹ்ரைன் வர்த்தக தூதுக்குழுவினர்
அமைச்சர் ரிஷாத்திடம் தெரிவிப்பு!

இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தனர்.
வளைகுடாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பஹ்ரைன் இராச்சியம் பலமானதும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான பிராந்திய கேந்திர நாடாகத் திகழ்கின்றது. வளைகுடா சந்தையில் 1.5 பில்லியன் டொலர் சந்தைப் பெறுமதிக்கான வளைகுடா நாட்டின் முக்கிய பாதையாக பஹ்ரைன் நாடே திகழ்கின்றது.
இலங்கையின் குறிப்பிடத்தக்க கைத்தொழில் உற்பத்திகளான, அதாவது, சேதன உணவு, குடிபானம் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை முதல்தர இறக்குமதி பொருட்களாக விரும்பி, பஹ்ரைன் அந்தப் பொருட்களில் நாட்டங்காட்டி வருகின்றது. இந்த முதல் ரகமான பொருட்கள் மனாமா மற்றும் பஹ்ரைனி சந்தைகளில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளனஇவ்வாறு இந்த உயர்மட்ட சந்திப்பில் பங்கேற்ற பஹ்ரைன் நாட்டின் அல் ஜபேரியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் முஹம்மத் சாஜித் தெரிவித்தார்.
07 பேரைக் கொண்ட இந்த வர்த்தக தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிய பணிப்பாளர் சாஜித், மனாமாவில் உள்ள ஜி.சி.சி தங்க மற்றும் ஆபரணங்களின் தலைவராகவும் பணிபுரிகின்றார்.

எங்களது பிரதான இறக்குமதி பொருள் இலங்கை தேயிலை ஆகும். எவ்வாறாயினும் நாங்கள் இங்கு விஜயம் செய்த பின்னர், நாங்கள் நினைத்ததை விட மிகவும் உயர்தரத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை வகைகளை கண்ணுற்றோம். அத்துடன் இலங்கையின் சேதன உணவுப் பொருட்கள் மற்றும் குடிபானங்களில் கவரப்பட்டோம். அதுமட்டுமின்றி இந்தப் பொருட்களுக்கு பஹ்ரைனில் பிரமாண்டமான கிராக்கி உள்ளது. குறிப்பாக, சேதன வகையிலான தேங்காய் துருவலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், அதாவது எண்ணெய், தேங்காய் பால், சீனி, தேங்காய் பவுடர் ஆகியவையாகும். இவ்வாறான சேதனப் பொருட்கள் தென்னாசியாவைத் தவிர வேறு எங்குமே கிடைப்பது மிகவும் அரிதாகவுள்ளதுஎன்றும் சாஜித் தெரிவித்தார்.
 சர்வதேச ரீதியில் உயர்ரக ஆபரண உற்பத்தியாளரான நான், இலங்கையில் ஆபரண வடிவமைப்புத் தொழிலில் கவரப்பட்டேன். ஏனெனில் உலக தரத்துக்கு ஒப்பான, உயர்தரமான நுட்ப ஆபரண வடிவமைப்புக்களை இங்கு கண்டோம். உதாரணமாக, கொழும்பு தேவி ஜுவலர்ஸில் நாம் சென்ற போது, அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒரு மோதிரத்தின் அனைத்து பாகங்களும் வைரத்தை மாத்திரமே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உலோகங்கள் எதுவும் அதில் சேர்க்கப்படவில்லை. உலகத்திலே நான் எங்குமே இவ்வாறன ஆபரணம் ஒன்றை இதுவரை கண்டதில்லைஇவ்வாறு மேலும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தூதுக்குழுவில் பங்கேற்ற பஹ்ரைன் முதலீட்டாளர்கள், இவ்வாறான துறைகளில் தாம் முதலீடு செய்ய விரும்புவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் தெரிவித்தனர். அத்துடன், பஹ்ரைன் நாட்டில் தேர்ச்சிபெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத சுமார் 6000 இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்சார் சேவையாளர்களும் பணியாற்றுகின்றனர் என அவர்கள் கூறினர்.
பஹ்ரைன் முதலீட்டாளர்கள் இலங்கையின் கைத்தொழிற் துறைகளில் முதலீடு செய்ய ஆர்வங்கொண்டிருப்பதை வரவேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும், சுட்டிக்காட்டினார்.
பரஸ்பர இரு நாடுகளின் வர்த்தகம் 30 டொலர் பில்லியனுக்கும் குறைவாக இருந்தது. தற்போது அது படிப்படியாக முன்னேற்றங்கண்டு வருகின்றது என்று தெரிவித்த அமைச்சர் 2016 ஆம் ஆண்டு பஹ்ரைன் நாட்டுக்கு தாம் விஜயம் செய்த போது, அந்த நாட்டின் கைத்தொழில், வர்த்தக மற்றும் உல்லாச பயணத்துறை அமைச்சர் செயித் பின் அல் ஸயானியை சந்தித்து, இரண்டு நாடுகளின் பரஸ்பர வர்த்தக உறவுகள் தொடர்பில் விரிவாகப் பேச்சு நடத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top